Wednesday, January 17, 2007

காதலாகிக் கசிந்து - 4

செல்லப்பா சிவாகிட்ட "அந்த வாயாடிப் பிள்ளையோட பேரு காயத்ரி, அந்த கத்திரிப்பூக் கலர் சுடிதார் பொண்ணு பேரு சாருலதா" அப்படின்னு சொன்னான். சாருலதாங்குத பேருக்கு அழகுன்னு அர்த்தமாம், பேருக்கேத்த மாதிரி அலட்டல் இல்லாத அமைதியான அழகு சாருவுக்கு. அவ அப்பாவுக்கு பாண்டிச்சேரியிலிருந்து மாத்தலாகி நெல்லைக்கு சாருவோட குடும்பம் வந்து மூனு வருசம் ஆச்சாம். சாருவுக்கு பத்து வயசுல டிங்குன்னு ஒரு தம்பி இருக்கானாம்.

அதோட சாரு படிக்குத அந்த மெட்ரிக் பள்ளியூடத்திலயும், அவ இருந்த அன்பு நகர் ஏரியாலயும் நெறய பயக்க சாரு பின்னாடி சுத்துனாலும் சாரு யாரயும் சட்டை பண்ணினது இல்ல. இது வரைக்கும் ஒரு 25 பயக்களாவது அவ கிட்ட காதலச் சொல்லியிருப்பானுவ. ஆனா குனிஞ்ச தல நிமிராம தெருவுல நடக்குத சாரு இத எல்லாத்தயும் நிராகரிச்சிட்டா. சில பேரு அவ மாட்டேன்னு சொன்னதும் நடு ரோட்டுல கெடந்து உருண்டிருக்கானுவ, சிலரு பித்து பிடிச்ச மாதிரி தாடி, கீடியெல்லாம் வளத்து, செய்யது பீடி குடிச்சிட்டு அலஞ்சானுவ. இவ்வளவு பிரபலமான சாருவப் பத்தி சிவா ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கான், ஆனா இப்படியெல்லாம் பயக்கள அலக்கழிக்குத அந்தப் பிள்ள ஒரு திமிரு புடிச்சவளாத் தான் இருப்பான்னு இம்புட்டு நாளா நெனச்சுகிட்டு இருந்தான். சாருவ நேர்ல பாத்ததும் அவன் அபிப்பிராயத்த மாத்திக்கிட்டான்.

சிவாவுக்கு தெரிஞ்ச பயலான சுப்பையா இதுக்கு முன்னால சாருவ பத்தி சொல்லிருக்கான். சுப்பையாவும் ஒரு தலயா காதலிச்சிட்டு இருந்தான். சுப்பையா எப்ப பாத்தாலும் ஒரு வரியாவது சாருவப் பத்தி சொல்லாம இருக்க மாட்டான். இந்த மாதிரி நெறய பைத்தியாரப் பயக்க இருந்தானுவ. சாருவ பாக்கலைன்னா கூட அவ வீட்ட, அவ நாய்க்குட்டிய, அவ தம்பிய பாத்தா போதும் பிறவிப் பயன அடைஞ்சிட்ட மாதிரி ஆயிடுவானுவ. சாரு பேரழகி கெடயாது அப்பிடி இருந்தும் ஏன் இந்தக் கிறுக்குப் பயக்க இப்பிடி திரியுதானுவன்னு ஆச்சரியப் பட்டான் சிவா. அத செல்லப்பாகிட்ட அவன் சொன்னதும் பதிலுக்கு செல்லப்பா, "சாருவாவது பரவாயில்ல டே ஆனா தேனி குஞ்சரம்மா ரேஞ்சு பிள்ளேல எல்லாம் ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பயங்கர பில்டப் கொடுத்து ஏத்தி விட்ருதானுவ, அவளுகளும் என்னப் பாரு என் அழகப் பாருன்னு ஊருக்குள்ள மெதப்புல சுத்திட்டு இருக்காளுவ. அதத் தான் தாங்க முடியல" அப்படின்னான்.

டியூசன் முடிஞ்சு வீட்டுக்கு வந்த சிவா "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே" பாட்ட முனுமுனுத்தான். அப்பத்தான் தூங்கி முழிச்ச அவன் தங்கச்சி மகராசி, வினோதமா பாத்தா. "மைனர் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி தெரியுது, என்ன டே விசயம்" அப்படின்னா. "உன் சோழியப் பாத்துகிட்டு போ" அப்படின்னு சொல்லிட்டு திரும்பவும் பாட்ட முனுமுனுத்தான். அதுக்குள்ள அவன் அப்பா கெளம்பி வேலைக்கு போக தயாரா இருந்தார். திருநெல்வேலி டவுனில ஒரு தனியார் கம்பெணியில அவரு வேல பாத்தாரு. காலயில எட்டு மணிக்கு போனா கருக்கல்ல தான் வருவாரு. ஏகப்பட்ட சொத்து சொகத்தோட பொறந்து, வியாபாரம் தீடிர்னு நொடிஞ்சு போனதால எல்லாத்தயும் இழந்து நிக்குத ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம் அவரோடது. ஆனா ஊருக்குள்ள இன்னும் பழய மரியாத இருந்தது அவரு குடும்பத்துக்கு.

பள்ளியூடத்துக்கு எல்லாத்தயும் தயார் பண்ணிட்டு, சாப்புடதுக்கு உக்காந்தான் சிவா. சூடா இட்லியும், புளி மொளகாயும் எடுத்து வச்சா அவன் அம்மா. பையன் மேல ரொம்ப பாசம் அவளுக்கு. அதுவும் அவன் +2 படிக்கதால அவன் மேல அப்பா அம்மா ரெண்டு பேரும் ரொம்ப அக்கறையா இருந்தாக. பையன் தான் இழந்த புகழ், பொருள் எல்லாத்தயும் மீட்டு கோடுக்கப் போறான்னு சிவாவோட அப்பா மந்திரமூர்த்திக்கு நெறயவே நம்பிக்க. "நேத்து இடிச்ச எள்ளு மொளவடி வைக்கட்டுமா"ன்னு கேட்டுட்டு அவன் பதிலுக்கு காத்திருக்காம எள்ளு மொளவடிய வச்சு நல்லெண்ணெய்ய ஊத்தினா. அவ கைப்பக்குவத்துல எது செஞ்சாலும் தேவாமிருதமா இருக்கும். அதுலயும் இட்லியப் பத்தி கேக்கவே வேண்டாம், அவ்வளவு மெதுவா பஞ்சு மாதிரி இருக்கும். லீவு நாளுன்னா எத்தன இட்லி வயித்துக்குள்ள போகுதுன்னு கணக்கே இருக்காது. இன்னிக்கு பள்ளியூடம் போறதால ஆறு இட்லியோட நிறுத்திகிட்டான்.

சாப்ட்டு முடிக்கவும் செல்லப்பா வந்தான். சாப்டியான்னு சிவா கேட்டதுக்கு ஆன்னு தலயாட்டினான். ஆனா அத நம்பாத சிவா "எல கத விடாத, ஒழுங்கா ரெண்டு இட்லிய சாப்ட்டு போட்டு வா. எம்மா இவனுக்கு இட்லி எடுத்து வை"ன்னு அவன் சொல்லுததுக்குள்ள அவன் அம்மா தட்டுல இட்லியும் புளி மொளகாயும் போட்டு கொண்டு வந்தா. செல்லப்பா ஒன்னும் சொல்லாம அமைதியா வாங்கிச் சாப்ட்டான். செல்லப்பாவுக்கு நான்குனேரி தான் சொந்த ஊரு, அவன் அப்பா அங்க கஷ்டப் படுததால இங்க அவன் மாமா வீட்டுல தங்கி படிச்சான். மாமா வீட்டுலயும் கஷ்டங்கறதால பாதி நேரம் அர வயித்தோட தான் பள்ளியூடத்துக்கு போவான். ஆனா சிவா வீட்டுக்கு வந்தா அவன சிவா சாப்புடாம விடமாட்டான்.

செல்லப்பா சாப்புட்டதும் ரெண்டு பேருகும் காப்பி கொடுத்தா சிவா அம்மா. அதக் ஒரே மடக்குல குடிச்சிட்டு செல்லப்பா சைக்கிள மிதிக்க சிவா பின்னால உக்காந்து பள்ளியூடத்துக்கு கெளம்பினானுவ.