Saturday, July 21, 2007

காதலாகிக் கசிந்து - 5

இருபாலரும் படிக்குத அந்த பள்ளியூடத்துல பொட்டப் பிள்ளைகளுக்கு பாவாட, சட்டை, தாவனி தான் சீருட. வெளியில அங்கி, குழாயி, பனியன்னு பயக்க போடுத எல்லாத்தயும் போட்டுட்டு கொஞ்சங்கொஞ்சமா ஒரு கலாச்சாரமே அழிஞ்சிகிட்டு வார காலத்துல பிள்ளைகள் பள்ளியூடத்திலயாவது தாவனி போட்டுட்டு போகுதுகளேன்னு அதுகள பெத்தவுக கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கிட்டாக

பள்ளியூடத்துல காலை வகுப்பு ஆரம்பிக்கதுக்கு முன்னால "நீராருங் கடலுடுத்த" தினமும் ஒலிக்க விடுதது வழக்கம். மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை எழுதின அந்தப் பாட்டக் கேக்குதப்போ எல்லாம் சிவாவுக்கு புல்லரிக்கும். தமிழ்த்தாய் வாழ்த்தோட நாள ஆரம்பிக்கறதுலதான் எத்தனை சுகம்ன்னு செல்லப்பாகிட்ட சொன்னான்....

பெளதீக வாத்தியார் இராமநாதன் பாடத்த ஆரம்பிச்சாரு... ஒரு சமன்பாட்டக் குடுத்து எல்லாரயும் போடச் சொன்னாரு.. எல்லாரும் அத வச்சு போரடிக்கிட்டு இருக்குதப்போ, சிவா அத நொடியில முடிச்சு வாத்தியார் கிட்ட காட்டினான். சந்தோசமான வாத்தியாரு, "உன்ன மிஞ்ச யாரும் கெடயாது டே"ன்னு முதுகுல தட்டிக் கொடுத்தாரு. மத்த எல்லாரும் இன்னும் அந்தச் சமன்பாடோட மண்டய ஒடச்சிகிட்டு இருந்ததுக. திடீர்னு மல்லிகை வாசம் வகுப்புக்குள்ள பரவுச்சு... உடனே சிவாவுக்கு சாருலதா ஞாபகம் வந்துச்சு.

சாருலதா அவளோட பள்ளியூடத்துல காயத்ரி கூட பேசிட்டு இருந்தா. காயத்திரி அதுக்குள்ள அவ கூட படிக்குற எல்லார் கிட்டயும் அப்துல்காதர் சார் டியூசன்ல புதுசா சேந்த்திருக்குற சிவாவப் பத்தி புகழ ஆரம்பிச்சா. பிள்ளைகள் எல்லாம் ஆன்னு அவ சொல்லுததக் கேட்டுகிட்டு இருந்ததுங்க.... இத்தனைக்கும் சாருவுக்கோ, காயத்ரிக்கோ சிவாவோட பேரு என்னான்னே தெரியாது. சாருவு காலயில சிவா தன் கண்ண ஊடுருவிப் பாத்தத நெனச்சுப் பாத்தா... காயத்ரி சொல்லச் சொல்ல இன்னும் ரெண்டு, மூனு பிள்ளேள் "எடே நாங்களும் நாளயிலருந்து உங்க டியூசனுக்கு வாரோம்"ன்னு சொல்லவும் சாரு காயத்ரியப் பாத்து முறைச்சா...

அவுக வகுப்புல உள்ள சேரனுக்கும், ரவிக்கும் இதக் கேக்க கேக்க எரிச்சலா வந்தது. இருக்காதா பின்ன, சாரு கிட்ட எத்தனையோ தடவ காதலச் சொல்லியும் அவ கண்டுக்கிடாம இருந்தாலும் இன்னும் முயற்சி பண்ணிட்டு இருக்குத பயக்க அவனுக ரெண்டு பேரும்.

பள்ளியூடம் முடிஞ்சு சாருவும் காயத்ரியும் வீடு திரும்பிக்கிட்டு இருந்தப்போ எதுக்க சிவாவும், செல்லப்பாவும் சைக்கிள்ல கடந்து போனாங்க... காயத்ரியும் செல்லப்பாவும் ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிகிட்டாக. சிவா சாருவப் ஒரு தடவ பாத்துட்டு தலயக் குனிஞ்சிகிட்டான். சாருவுக்கு இது வரயில்லாத ஒரு படபடப்பு மனசுக்குள்ள வந்தது...

Sunday, July 15, 2007

எல்லாரும் சௌக்கியமா...?

என் இனிய (வலை) தமிழ் மக்களே...

நீண்ட இடைவெளிக்குப் பின்னால எழுதுதேன். கடைசியா பதிவு போட்டு ஆறேழு மாசம் இருக்குமின்னு நெனக்கேன். பதிவுகள படிக்கதுக்கே நேரம் இல்லாதபோது எழுத சுத்தமா சமயமில்ல.

திரும்ப வந்து தமிழ்மணத்த பாத்தா அடடா... எத்தன முன்னேற்றம்....!!!! புதுசா நெறய பேரு நல்லா எழுதுதாங்க... பழய ஆளுக நெறய பேரக் காணோம்... முன்னாடி இருந்த பூசல் சச்சரவு எல்லாம் இப்போ கொஞ்சம் கொறஞ்சிருக்குதப் பாக்குதப்போ கொஞ்சம் ஆறுதல்.

வலை நண்பர்கள்ல கானா பிரபா மட்டும் தான் இன்னும் தொடர்புல இருக்காரு. ஊரு ஊரா மாநாடு , பதிவர் சந்திப்பு எல்லாம் போட்டு, போண்டா, எள்ளுருண்டை எல்லாம் சாப்பிட்ட வலை நண்பர்கள் எல்லாரும் அதுக்கு அப்புறமா பேசிக்கிறீகளா இல்ல ரயில் சினேகம் மாதிரி தானா?

ஜி.ரா, டுபுக்கு அண்ணாச்சி, நிலவு நண்பன் எல்லாரும் நலமா? இனி கொஞ்சம் நேரம் எழுததுக்கு கெடைக்குமின்னு நெனக்கேன். பாக்கலாம்....