Wednesday, December 27, 2006

காதலாகிக் கசிந்து - 3

அப்துல்காதர் சார் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் ஒரு பெரிய தார்சா(வராண்டா) இருந்தது. அந்த தார்சாவோட நடுவுல ஒரு மேசை இருந்தது. அந்த மேசைக்கு ஒரு பக்கம் சார் உக்காந்திருந்தாரு. அவருக்கு எதுக்க ரெண்டு பிள்ளேள் உக்கார்ந்த்திருந்தது. அறை முழுசும் மல்லிகைப்பூ வாசம் நெறஞ்சு இருந்தது. சுவத்துல, குரான் வரிகள் பிரேம் பண்ணி போட்டு இருந்தது. அதுக்கு பக்கத்துல கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் பண்ணின கீதாசாரம். உள்ளே நுழைந்த சிவாவயும் செல்லப்பாவயும் பாத்து புண்ணகைத்த அப்துல் காதர் "வாங்கப்பா வந்து உக்காருங்க" என்றார். உடனே அந்த ரெண்டு பெண்களும் திரும்பிப் பார்த்தனர்.

அந்த ரெண்டு பிள்ளைகளும் செல்லப்பாவைப் பாத்து புருவத்த உயர்த்த, பதிலுக்கு செல்லப்பாவின் கண்ணும் ஆச்சரியத்துல விரிஞ்சுது. உடனே சிவா செல்லப்பாவுக்கு அந்த பிள்ளேல ஏற்கனவே தெரியும் என்பதனை
யூகித்தான். அந்த பிள்ளைகள்ல ஒருத்தி பள்ளியூட யூனிபார்ம் போட்டிருந்தா, இன்னொருத்தி கத்திரிப்பூக் கலருல சுடிதார் போட்டிருந்தா. யூனிபார்ம் போட்ட பொண்ணு வாயாடின்னு அஞ்சு நொடியில சிவாவுக்கு புரிஞ்சு போச்சு.

அந்தக் கத்திரிப்பூ சுடிதார் பொண்ணு தான் தலை கொள்ளாம மல்லிகப்பூ வச்சு அந்த அறை முழுக்க வாசத்தப் பரப்பிக்கிட்டு இருந்தா. நெற்றியில் ஒரு பெரிய ஸ்டிகர் பொட்டு, அதுக்கு கீழ ஒரு குட்டி கருப்பு பொட்டு, அதுக்கு கீழ மெல்லிய திருநீற்றுக் கீற்று. காதில் கல் வைத்த சிறிய தோடு. கூர் நாசி, குறுகுறுக்கும் கண்ணுகளோட அமைதியா உக்காந்திருந்தா. காதோரமா இருந்த கொஞ்சம் முடி மார்கழிக் காத்துல அலைபாய்ந்தது. அந்த ரூமுக்கு வெளிச்சம் கொடுக்கதுக்கு அவளோட முகத்துக்கும், மின்வெளக்குக்கும் சண்டை நடந்தது.

உள்ளே வந்து உக்காந்ததும் செல்லப்பா சிவாகிட்ட, "ஒரு நூறு வயலின சேந்தாப்புல வாசிச்ச மாதிரி ஒரு எபெக்ட் எனக்குத் தெரியுது, உனக்கு எப்படின்னு" ரகசியமகேட்டான். உடனே சிவா "சும்மா இருல" அப்படின்னு அதட்டினான்.அப்துல்காதர் சார் அன்று கரிம வேதியல்(organic chemistry) பற்றி பாடம் நடத்த ஆரம்பித்தார். வகைப்படுத்தப்பட்ட IUPAC பெயர்கள், கரிம(Carbon, கார்பன்) அணுக்கள் மற்றும் கரிம சேர்மங்கள் இதப் பத்தியெல்லாம் விளக்கினார். பழைய வாத்தியார் முத்துசாமிய விட அப்துல்காதர் சொல்லிக் கொடுக்குதது சிவா, செல்லப்பா ரெண்டு பயக்களுக்கும் ரொம்ப நல்லா வெளங்குச்சு. வேதியலப் பத்தி ஒன்னுமே தெரியாத பயபுள்ளைக்கே சார் சொல்லிக் கொடுக்குதது வெளங்குமுன்னா கற்பூர புத்தி உள்ள இந்த ரெண்டு பயக்களுக்கு கேக்கவே வேண்டாம்.

பாடம் முடிஞ்சதும் "என்னப்பா சொல்லிக் கொடுத்தது எல்லாம் வெளங்குச்சா? புரியலயின்னா கூச்சப் படாமக் கேளுங்க" அப்டின்னு சார் சொல்லவும், புண்ணகையோட தலையாட்டின சிவா அப்பிடியே அந்த கத்திரிப்பூக் கலர் சுடிதாரப் பாக்க, அந்தப் பொண்ணும் சிவாவப் பாத்துச்சு. இது வரைக்கும் எந்தப் பிள்ளையயும் நேருக்கு நேர் பாத்துராத சிவாவுக்கு ஒரு கனம் இதயத்துடிப்பு நின்னு திரும்ப வந்தது. அதுக்கப்புறம் கை கால் எல்லாம் லேசாக நடுங்கியது, இதயம் வேகமா துடிக்க ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் திரும்பவும் சகஜ நிலைக்கு வந்தான் சிவா. பிறகு சாரிடம் "போயிட்டு வாரேன் சார்னு" சொல்லிட்டு ரெண்டு பயக்களும் கீழ எறங்கி வந்தானுக.

சைக்கிள எடுத்து செல்லப்பா ஓட்டவும் பின்னாலயே ஒடிப் போய் சிவா தொத்திகிட்டான். கொஞ்ச தூரம் போனதும் வந்த ராயல் காபி பாரில சிவா செல்லப்பாவ நிப்பாட்ட சொன்னான். திரும்பி சிவாவ வினோதமா பாத்த செல்லப்பா "எடே பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு இங்க ஏன் நிக்கச் சொல்லுத"ன்னு கேட்டான். "டீ குடிச்சிட்டு போலாம் வா"ன்னு சொன்னான் சிவா. டீக்கடை ரேடியோவில "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே" பாட்டு ஒடிட்டு இருந்தது. சம்சா, டீ வாங்கி அத உள்ள தள்ளிகிட்டே "டியூசன் நல்லா இருந்துச்சுல்லா, நீ என்ன சொல்லுத"ன்னு சிவா செல்லப்பாவ கேக்க, அவனும் "ஆமாமா நல்லாத் தான் போச்சுது, ஆனா கொஞ்சம் லேட்டா இங்க வந்துட்டோம் முன்னாடியே வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அந்த ரெண்டு பிள்ளேளயும் எனக்கு முன்னாடியே தெரியுமே, அவங்க பேரு என்ன தெரியுமா"ன்னான்.

சிவா "என்ன பேரு"ன்னு கேக்கவும், செல்லப்பா "இன்னொரு சம்சா வாங்கித் தா வே சொல்லுதேன்" அப்படின்னான்.......

Wednesday, December 13, 2006

காதலாகிக் கசிந்து - 2

வீட்டுல இருந்து சிவா வெளிய வந்த்ததுமே, உள்ள இருந்து அவன் அம்மா கோமதி "எல துரை ஒரு மடக்கு காப்பியக் குடிச்சிட்டு போன்னு" கத்தினாள். நெல்லை வட்டாரத்துல வீட்டுக்கு மூத்த பையன துரைன்னு கூப்டுவாக. உடனே சிவா சைக்கிள சுவத்துல சாத்தி வச்சுட்டு வீட்டுக்குள்ள போய் அவன் அம்மா கொடுத்த கருப்பட்டி காப்பிய வாங்கி குடிச்சிட்டு அவசர அவசரமா வெளிய ஓடினான். குளிர் காலத்துல நரசுஸ் காப்பித் தூளும், கருப்பட்டியும் கலந்து போடுத காப்பியக் குடிக்கதுல ஒரு தனி சுகம் தான்.

சிவா வாசல் கிட்ட வந்ததும் அவன் அப்பா மந்திரமூர்த்தி அவனக் கூப்ட்டு, "எடே மப்ளரயாவது, குல்லாவயாவது போட்டுட்டு போ, பனி ரொம்ப அதிகமா இருக்கு" அப்டின்னு சொன்னார். குல்லா போட்டா தல கலஞ்சு போய்டும்கறதனால, மப்ளர எடுத்து நடிகர் மோகன் மாதிரி சுத்திட்டு கெளம்பினான். அவன் வெளிய வந்து சைக்கிள எடுக்கவும், "எல மக்கா நேரமாயிட்டுது, வெரசலா கெளம்புடேன்னு கத்திகிட்டே அவன் நண்பன் செல்லப்பா ஒடி வந்தான் . செல்லப்பாவும் அவனும் பத்தாங்கிளாசுல இருந்து ஒன்னா படிக்காவ. சிவா எங்க வெளில போனாலும் செல்லப்பா தான் அவன சைக்கிள்ல வச்சு கூட்டிட்டு போவான். இப்பவும் அவுக ரெண்டு பேரும் சேர்ந்து போறது புரபசர் அப்துல் காதர் வீட்டுக்கு. திருநெல்வேலியில உள்ள ஒரு பெரிய காலேசுல அப்துல் காதர் அய்யா வேதியல் பேராசிரியர்.

+2 படிக்குத சிவாவும், செல்லப்பாவும் அப்துல்காதர் கிட்ட டியூசனுக்காக போய்கிட்டு இருக்காவ. அப்துல் காதர் சார மாதிரி யாரும் அந்த வட்டரத்துல வேதியல அவ்வளவு அழகா சொல்லித் தர முடியாது. பணத்துக்காக கூட்டத்த சேக்காம நல்லா படிக்கனும்னு ஆர்வம் உள்ளவங்கள மட்டும் தான் சேத்துக்குவாரு. இவ்வளவு நாள் வேற ஒரு வாத்தியார் கிட்ட படிச்சிட்டு இருந்த சிவாவும், செல்லப்பாவும் அந்த வாத்தியார் வேற ஊருக்கு மாத்தலாகிப் போனதால, அப்துல் காதர் சார் கிட்ட அன்னைல இருந்து சேந்தாங்க. முதல் கிளாசுக்கு இன்னைக்குத் தான் ரெண்டு பேரும் போறாவ.

அப்துல்காதர் சார் வீடு இருக்குதது பெருமாள்புரம். அதனால ரெண்டு பேரும் சைக்கிள்ல அன்புநகர் வழியா போனாங்க. பெருமாள்புரம் போற வழியில ஒரு அரச மரத்தடி பிள்ளயார் கோயில் இருக்கு. அங்க இந்த ரெண்டு பயக்களும் இறங்கி ஒரு தோப்புக்கரனம் போட்டுட்டு அப்டியே திரும்பவும் சைக்கிள மிதிச்சி வாத்தியார் வீட்டப் பாத்துப் போனாங்க. தூரத்து டீக்கடயில இருந்து மருத மலை மாமணியே முருகய்யான்னு மதுர சோமு உருகிக்கிட்டு இருந்தாரு. ஒரு வழியா வாத்தியார் வீட்டுக்கு வந்து சேந்தாங்க ரெண்டு பேரும். வாத்தியார் வீடு இருந்தது ஒரு பெரிய காம்பவுண்ட். அந்த காம்பவுண்டுக்குள்ள ஒரு பத்து, பன்னிரெண்டு வீடு இருக்கும். ஒரு பத்து ஏக்கர் எடத்துல முக்காவாசி தோட்டம் போட்டுட்டு, மிச்ச எடத்துல வீடுகளக் கட்டி விட்ருந்தாரு அந்த வீட்டுக்காரர். உள்ள பூரா ஒரே மரமும் செடியுமா சோலயா இருக்கும். அதுலயும் பன்னீர்ப்பூ மரம் ஒன்னு அந்த ஏரியா முழுக்க வாசத்தப் பரப்பிட்டு இருந்தது.

காம்பபுண்ட் நடுவுல கண்ணனும் ராதாவும் சேந்தாப்புல இருக்குத மாதிரி சில. அதச் சுத்தி எப்பவாது வேல செய்யுத ஒரு நீருத்து. சைக்கிள உள்ள உருட்டிட்டே போன ரெண்டு பயக்களும், ஒரு எடத்துல சைக்கிள நிப்பாட்டினானுவ. அது பக்கத்துல ஒரு செவப்புக் கலர் சன்னியும்(Sunny), இன்னொரு லேடி பேர்ட் சைக்கிளும் நின்னுகிட்டு இருந்தது. அதப் பாத்துட்டு செல்லப்பா "எடே வண்டியெல்லாம் பாத்தா சூப்பரா இருக்கு, உள்ள இருக்கவங்க எப்படி இருக்காவளோ" அப்டின்னு ஒரு பெரு மூச்சு விட்டான். உடனே சிவா "எல நீ சும்மா இருக்க மாட்டியா? இன்னும் நாலு மாசத்துல பரீட்சை வரப் போகுது, ஒழுங்கா படிக்கதுக்கு உண்டான வழியப் பாரு" அப்டின்னான். அப்படி வெளில சொன்னாலும், அவன் மனசுக்குள்ளயும் ஒரு குறுகுறுப்பு இருந்தது. ஏன்னா ரெண்டு பயக்களும் படிக்குதது ஒரு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.

வாத்தியார் வீடு மாடில இருந்தது, அதனால ரெண்டு பேரும் படியேறினாங்க. படியில ஒன்னு ரெண்டு மல்லிகப் பூ சிதறிக் கெடந்தது. அந்த மல்லிகயோட வாசம் சிவாவ என்னவோ பண்ணுச்சு. மேல வந்ததும் வாசல்ல வெல கூடின ரெண்டு ஜோடி பெண் செருப்பு கெடந்தது. அதுக்கு பக்கத்துல பாவம் போல தேஞ்சு போன ரப்பர் செருப்ப கழட்டிப் போட்டுட்டு ரெண்டு பேரும் உள்ள நுழைஞ்சாங்க. அங்கே....

Friday, December 01, 2006

காதலாகிக் கசிந்து

ரொம்ப நாளா நம்ம பயக்க எல்லாம், என்ன ஒரு நல்ல காதல் கதய எழுதச் சொல்லி புழுப் புழுன்னு அறிச்சிக்கிட்டே இருக்கானுவ. ஒரு வேளை என்னப் பாத்தா நெறய காதல் பண்ணின அணுபவம் உள்ளவன் மாதிரி தோனுதா இல்ல வடிவேலு மாதிரி என்ன வச்சு காமடி கீமடி பண்ணுதானுகளான்னு தெரியல. இப்போ வேற கார்திக, மார்கழின்னு ஒரே ரொமாண்டிக் மாசமா வருதா, அதான் நாமளும் ஒரு கதய எழுதி தான் பாப்பமேன்னு உக்காந்துட்டேன். சரி இப்ப நம்ம காதல் கதைக்கு வாரேன்.

அது ஒரு மார்கழி மாசம். நல்ல விரையல் காத்து, எதுக்க உள்ளவனக் கூட பாக்க முடியாத அளவுக்கு ஒரே பனி. திருநெல்வேலி, தியாகராச நகர்ல எல்லா வீட்டு வாசலிலயும் சானிப் பிள்ளையார் தலைல செம்பருத்தி, அரளிப் பூன்னு வெத வெதமா வச்சுகிட்டு ஜம்முன்னு உக்காந்திருந்தாரு. கல்யாணம் ஆகாத பெரிய அக்காக்களெல்லாம் குளிச்சி முழுகி, ஈரத்தலய அள்ளி பான்கொண்ட போட்டுகிட்டு, தெருவ அடைக்க மாதிரி பெரியப் பெரிய கலர்க் கோலம் போட்டுகிட்டு இருந்தாவ.

நெறய வீடுகள்ல திருப்பாவ, திருவம்பாவ படிக்குத சத்தம் கேட்டுது. மார்கழி மாசத்துல அதிகாலயில திருப்பாவ, திருவம்பாவ படிச்சா நல்ல புருசன் கெடப்பான்னு ஒரு ஐதீகமாம். அதுவும் கண்ணனத் தன் காதலனா நெனச்சு ஆண்டாள் பாடின திருப்பாவய கேட்டா கடவுளுக்கு காதல் வருதோ இல்லயோ ஊருல்ல உள்ள எளந்தாரிப் பயக்களுக்கெல்லாம் கமல் வசூல் ராஜாவுல சொன்ன மாதிரி ஒரு ஃபீலிங் வந்துரும்.

பிள்ளையார் கோவில்ல இருந்து பெரியசாமியா பிள்ள தாத்தா தலமயில ஒரு கூட்டம் பஜன பாடிக்கிட்டே வடக்குத் தெருவுக்கு போச்சுது. நண்டு, நாழியில இருந்து, வயசானவுக வர ஒன்னு சேரப் பாடுதத பாக்கதுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது. மார்கழி மாசத்துல தெய்வங்கள் எல்லாம் மண்ணூக்கு வந்து டேரா போட்டுருவாகளோ என்னமோ, அதான் வேற எந்த மாசத்துக்கும் இல்லாத சிறப்பு மார்கழிக்கு மட்டும் இருக்கு. பஜன கோஷ்டி எல்லாத் தெருவயும் வலம் வந்த் பிறகு பிள்ளயார் கோவிலுக்கு போயி ஒரு அர மணி நேரம் பூச நடக்கும். அப்புறம் பிரசாதம், சுடச்சுட தொன்னயிலயும், இலயிலயும் கொடுப்பாக சங்கர பாண்டி அய்யாவும், மணி மாமவும்.

இப்படி ரம்மியமான மார்கழி மாசத்துக் காலப் பொழுதுல நம்ம சிவா காலயிலேயே குளிச்சி முழுகி, திருநீரு பூசிக்கிட்டு தன்னோட சைக்கிள எடுத்துகிட்டு கெளம்பினான்.

தொடரும்......

Thursday, October 26, 2006

சென்னை நகர்வலம்

சிட்னியில இருந்து திரும்பி வந்து ஒன்னரை மாசம் கழிச்சு இப்போ தான் அடுத்த பதிவு எழுத முடிஞ்சுது. நேரமில்லாதது ஒரு காரணம், இன்னொன்னு சென்னைக்கும் பெங்களூருக்கும் மாத்தி, மாத்தி ஒரே அலைச்சல்.

தீபாவளிக்கு சேந்தாப்புல நாலு நாள் லீவு கெடச்சதால, சென்னைக்கு போய் நல்லா சுத்த முடிஞ்சுது. வடகிழக்கு பருவமழை ஆரம்பிச்சிட்டதால அவ்வளவா வெக்கையோ, புழுக்கமோ இல்ல. ஆனாலும் மழை ஒரு நாள் பெஞ்சதுக்கே, ரோடெல்லாம் என்னப் பாரு என் அழகப் பாருன்னு அலங்கோலமா இருக்கு. ஏழு மாசத்துக்கு முன்னாடி போட்ட ரோட்டுக்கே இந்த நெலம.

சென்னை ஆட்டோ க்காரங்க இன்னும் மாறாம அதே மாதிரி தான் இருக்காங்க. சென்ட்ரலுல இருந்து வீட்டுக்கு வரும் போது ஆட்டோ க்காரர் நூறு ரூபாய்னு பேசி, வார வழியில அதுவும் பத்தலயின்னு கூட ரெண்டு பேர ஏத்திக்கிட்டாரு. ஆனா பெங்களூர் ஆட்டோ க்காரங்கள விட ஒரு வகயில இவங்க பரவாயில்ல. ராத்திரி 9 மணிக்கு மேல ஒன்னரை சார்ஜ், 12 மணிக்கு மேல டபுள்னு நல்லா கொள்ளையடிக்கானுவ அங்க. இதுல வயித்தெரிச்சல் என்னான்னா சென்னை - பெங்களுர் ரயில், பஸ் எல்லாமே அதிகால 4 - 5 மணிக்கு போறதால சில சமயம் ரயிலுக்கு கொடுக்குத காசுல முக்காவாசி ஆட்டோ வுக்கு கொடுக்க வேண்டியிருக்கு.

இந்த தீபாவளி ரொம்ப செழிப்புங்கறத சென்னை மக்கள் அதக் கொண்டாடுன விதத்துலயே தெரிஞ்சுது. அய்யாயிரம் வாலா, பத்தாயிரம் வாலா சர வெடி எல்லாம் சர்வ சாதாரணம். ராத்திரி நடந்த வான வேடிக்கை இதுவரை நான் என் வாழ்நாள்ல எந்த தீபாவளிக்கும் பாத்திராத ஒன்னு. சாப்ட்வேர், BPO, கால் சென்டர்னு வேல பாக்குத இளசுக பணத்த தண்ணியா செலவு பண்ணுதது கண்கூடா தெரிஞ்சுது.(இந்தியா ஒளிர்கிறது...!!!). காசக் கரியாக்குதது இப்படித்தான் போல.

ஸ்பென்சர் பிளாசா வர வர மீன் மார்க்கெட் மாதிரி ஆயிட்டு வருது. அதுலயும் லாண்ட்மார்க் உள்ள எப்ப போனாலும் ஒரு திருவிழா கூட்டம் தான். சென்னை சிட்டி சென்டர், அமஞ்சிக்கரயில கட்டிக்கிட்டு இருக்குத மல்டிபிளக்ஸ் இதெல்லாம் வந்த பிறகாவது கூட்டம் குறையுமான்னு தெரியல. முன்னாடியெல்லாம் இந்த மாதிரி பெரிய ஷாப்பிங் மால்கள்ல எல்லாம் நுனிநாக்கு ஆங்கிலம் பேசுத பிள்ளேல், பயக்க நெறய பேரு வேல பாத்துட்டு இருந்தாங்க. ஆனா இப்போ கால் சென்டர் வேலயில்லாம் வந்த பிறகு அந்த மாதிரி ஆளுக ஒருத்தரக் கூட பாக்க முடியல.

சென்னை மாநகரக் காவல் துறைக்கு, ரோந்து போகதுக்குன்னு, 100 ஹூண்டாய் அக்ஸென்ட் காருகள தமிழக அரசு கொடுத்திருக்கு. இனிமேல் நம்ம ஆளுகளும் FBI ரேஞ்சுக்கு மாறிடுவாங்கன்னு நெனக்கேன்.

Thursday, August 31, 2006

சிகரம் தொட்ட தமிழன் சரத்பாபு...

பொறியியல் படிப்ப முடிச்சுட்டு, எந்தக் கம்பெணியில சேந்து எத்தன லட்சம் சம்பளம் வாங்கலாம், IIM-ல படிச்சுட்டு எப்படி கோடி கோடியா பணம் சேக்கலாம், ஆடம்பரமான வீடு, சொகுசு கார் வாங்கலாமுன்னு நெனக்குத இன்னைக்கு உள்ள இளய தலமுற ஆளுகளுக்கு மத்தில ஒரு உதாரண புருசன் சரத்பாபு.

சரத்பாபு பத்தி தெரியாதவங்களுக்கு: ரொம்ப ஏழ்மயான குடும்பத்துல பொறந்து, தன்னோட கடுமயான உழைப்பால, BITS Pilani, IIM - Ahmedabad இங்கயெல்லாம் படிச்சுட்டு, லட்ச லட்சமா சம்பளம் கெடக்கக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களோட வேலய வேண்டாமின்னு உதறித் தள்ளிட்டு, சுயமா தொழில் தொடங்கி தன்ன மாரி வாழ்க்கயில சிரமப் படுதவங்களுக்கு வேல கொடுத்து அவங்க வாழ்க்கய மேம்படுத்தனுமின்னு நெனக்குத ஒரு அற்புதமான பிறவி.

Foodking Catering Service அப்டின்னு அஹமதாபாத்துல ஒரு உணவுக் கூடத்த ஆரம்பிச்சு இப்போ நாப்பது பேருக்கு வேல கொடுத்துகிட்டு இருக்காரு. அவரோட உணவுக் கூடத்தக் குத்து வெளக்கு ஏத்தி தெறந்து வச்சது நம்ம இன்போசிஸ் தல நாராயண மூர்த்தி. அடுத்தால சென்னயிலயும் ஒரு கிளை தொடங்கப் போறாராம்.

குழந்தைப் பருவத்துல அவுக அம்மா, இட்லி வியாபாரம் பண்ணியும், சத்துணவு கூடத்துல மாசம் 30 ரூவாய்க்கு வேல பாத்தும் சரத்பாபுவயும் அவரு சகோதரிகளயும் வளத்து இருக்காக. மடிப்பாக்கத்துல ஒரு சேரிப் பகுதில பொறந்த சரத்பாபு குடும்பச் சூழல், அம்மா படுத சிரமம் எல்லாம் உணர்ந்து நல்லா படிச்சிருக்காரு. பொறியியல் கல்லூரில படிக்க வாங்குன கடன அடைக்க கொஞ்ச நாள் போலாரிஸ்ல வேல பாத்திருக்காரு. அப்புறம் IIM-ல MBA முடிச்சுட்டு இந்த உணவுக் கூடத்த தொடங்கிருக்காரு.

கார், பங்களா ஆடம்பர வாழ்க்யில தனக்கு எப்பவுமே நாட்டம் கெடயாது. தன்னோட லட்சியம் அம்பானி மாரி, நாராயணமூர்த்தி மாரி இருபத்தய்யாயிரம் பேருக்கு வேல கொடுத்து அந்தக் குடும்பங்களோட வாழ்க்கய மேம்ப்டுத்தனுங்கறது தான்னு சொல்லுதாரு. இந்த வருசம் 500 பேருக்கு வேலயும், அடுத்த அஞ்சு வருசத்துல 15,000 பேருக்கு வேல வாய்பும் கொடுக்கது தான் இவருக்கு இப்ப இருக்குத ஒரே லட்சியமாம்.

வியாபார நோக்கத்தோட தொழில் பண்ணாம நம்மால பத்து குடும்பம் நல்லா இருக்கனும்னு நெனக்குத பெரிய மனசு எல்லாத்துக்கும் அதுவும் இந்த சின்ன வயசுல வராது. அயல் நாட்டு மோகத்துல, கண்டதே காட்சி கொண்டதே கோலமின்னு இருக்குத நம்ம இளய தலமுற சரத்பாபுவப் பாத்தாவது திருந்தனும். சரத்பாபுவோட முயற்சி மேன்மேலும் வெற்றியடய நாம் வாழ்த்துவோம்.

இது மாரியே அயிரம் சரத்பாபு தமிழ்நாட்டுல உருவாகனும், தமிழ்ர் வாழ்க்கத் தரம் முன்னேறனும்.... இத மாரி ஏழ்மயான குடும்பத்துல பொறந்த குழந்தைகள முன்னேற்றதுக்கு உங்களால முடிஞ்ச உதவியப் பண்ணுங்கன்னு உங்கள வேண்டிக் கேட்டுக்கிடுதேன்....

Monday, August 28, 2006

ஆறு (கோமாளிக்) காதல் - II

நாலாங் காதல்: கணேசனும், சுப்பய்யாவும் அண்ணன் தம்பி. ரெண்டு பேரும் பாசக்காரப் பயலுவ. ஆனா ஜாலக்கார ஜமுனாவான ரீட்டாங்குத பிள்ளைக்காக ரெண்டு பேரும் அடிச்சிகிட்டு ரோட்டுல சட்டய கிழிச்சுகிட்டானுவ. அதுக்கு காரணம் ரீட்டா அந்த ஊரு பஸ் ஸ்டாப்புக்கு வந்து கணேசனப் பாத்து பல்லக் காட்டிட்டு, அப்புறம் அவன் தம்பி சுப்பய்யாவுக்கு டாட்டா காட்டிட்டு வார பஸ்சு எதுலயும் ஏறாம எல்லா பயக்க கண்ணுலயும் மண்ணத் தூவிட்டு ஊருக்குள்ள போயிட்டா. ஆனா அது தெரியாத ரெண்டு பயக்களும் ரீட்டா என்னத்தான் லுக்கு விட்டான்னு பஸ்சுக்குள்ளயே ஒருத்தன் குதவலய ஒருத்தன் நெறிச்சு அது பத்தாதுன்னு பஸ்ச நிப்பாட்டச் சொல்லி நடு ரோட்டுல கெடந்து உருண்டானுவ. கணேசனுக்கு ஆதரவா ஒரு கும்பலும், சுப்பய்யாவுக்கு ஆதரவா ஒரு கும்பலும் ஊருக்குள்ளத் திரிஞ்சானுவ. இதயெல்லாம் பாத்துட்டு அவங்க அய்யா "சவுத்துப் பயக்க வீட்ல அடங்கலயின்னா ஊருல தான் அடங்குவானுவன்னு" கையக் கழுவிட்டாரு. கடசியில ரெண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டானுவ. மறுநாள் பஸ் ஸ்டாப்ல வச்சு ரீட்டாகிட்ட போய் யார உனக்கு புடிச்சிருக்குன்னு கேப்போம். அவ புடிச்சிருக்குன்னு சொன்ன பயலுக்கு ரீட்டாவ விட்டுக் கொடுத்துட்டு இன்னொரு பய ஆட்டைல இருந்து வெளகிரனும்னு முடிவாச்சு. அடுத்த நா காலயில ரெண்டு கோஷ்டியும் 7 மணியில இருந்தே பஸ் ஸ்டாப்ல காவல் காக்க ஆரம்பிச்சிட்டானுவ. மத்யானம் வர காத்திருந்தும் ரீட்டா வார பாடா இல்ல. உடனே ரெண்டு பயக்களும் பொறும இல்லாம, அங்க இங்க விசாரிச்சு நேர ரீட்டா வீட்டுக்கே போய் கதவ தட்டுனானுவ. கதவத் தெறந்து இவனுகள பாத்த ரீட்டா மயக்கம் போட்டு விழாத குற தான். இப்பவே உன் முடிவச் சொல்லு, நானா? இவனா? இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம போமாட்டோம் அப்டின்னு கணேசன் கத்த, வீட்டுக்குள்ள இருந்து பயில்வான் ரங்கநாதன் ரேஞ்சுக்கு ஒரு மாக்கான் வந்து நின்னான். எலேய் உங்களுக்கு முடிவுதான தெரியனும், இந்தா தெரியப் படுத்துதேன்னுட்டு வெறகு கம்ப எடுத்து கண்ணு மண்ணு தெரியாம விளாசித் தள்ளிட்டான். ஆனா பாவம் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்குமே ரீட்டாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்த இருக்குங்கற விசயம் அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது.

அஞ்சாங் காதல்: என்னடா பயக்களோட இலவ மட்டுமே சொல்லுதானே, பிள்ளேளோட காதல சொல்லலியேன்னு யோசிக்காதிய... அந்த குறையத் தீக்க கடைசி ரெண்டுக் காதலும் பிள்ளேளோடது தான். கஜப்பிரியான்னா எங்க ஊருல ரொம்ப பிரபலம். ஒம்பதாங் கிளாசு உரசுமேரி பள்ளியூடத்துல படிக்கும்போதே அப்போ +2 படிச்சுகிட்டு இருந்த தருமனோட தனியா உல்லாசச் சுற்றுலா ஒரு வாரம் போயிட்டு வந்து ஊருக்குள்ள பரபரப்பு உண்டாக்கினவ. பேசுதது எல்லாம் பொய்யத் தவிர வேற ஒன்னும் கெடயாது. "இப்பத் தான் நடிகர் பிரசாந்தோட போன்ல பேசிட்டு இருந்தேன்னு வாய் கூசாம பொய் சொல்லுவா. அவ கண்ணுல வந்து மாட்டினான் அப்பாவிப் பயலான அப்பூண்டு ஆறுமுகம். குனிஞ்ச தல நிமிராம தெருவில நடக்குத பய. பொட்டப் பிள்ளேள் கிட்ட பேச மாட்டேன்னு அவுக பாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்தவன் ஆறுமுகம். அப்படிப்பட்ட பயல கொஞ்சங் கொஞ்சமா பேசி மனச மாத்தி அவ வலயில விழ வச்சா கஜூ. அப்பூண்டு ஆறுமுகத்த பின்னாடி உக்கார வச்சு கயத்தாறு, கங்ககொண்டான் ரோட்டுல அவ சன்னில(Sunny) வேகமாப் போறான்னு தகவல் வர ஆரம்பிச்சுது. காணாததக் கண்ட மாதிரி அப்பூண்டு பயலும் கொஞ்ச நாலா சந்தோசமா அலஞ்சான். வெள்ளக் கலரு பூடிசு, கருப்புக் கண்ணாடி எல்லாம் ராத்திரி போட்டுட்டு ராஜபார்வைக் கமல் மரரி ஊருக்குள்ள ஒரு தினுசா சுத்திட்டு இருந்தான். கேட்டா கஜூவுக்கு அது தான் புடிக்கும்பான். நம்ம பயக்களும், "அடப் பயவிள்ள அந்த செருக்கிக்காக ராத்திரியும் ஏமுல கருப்புக் கண்ணாடியப் போடுதேன்னு" கேட்டுப் பாத்து சலிச்சு போய்ட்டானுவ. அப்பூண்டு இப்பிடி கஜூவோட சுத்துதது அவளோட முன்னாள் காதலனுவ நாலஞ்சு பயக்களுக்குத் தெரிய வந்துச்சு. கடுப்பான அவனுக எல்லாம் சேந்து அப்பூண்டு ஆறுமுகத்தத் தனியா கூட்டிட்டு போயி முன் மண்டயில பாதி முடியயும், பாதி மீசயயும் செரச்சு அணுப்பிட்டானுவ. அதுக்கு அப்புறம் அப்பூண்டு கஜூ மட்டுமில்ல எந்தப் பிள்ளய எதுக்க பாத்தாலும் தல தெறிக்க ஒடுதான்...

ஆறாங் காதல்: ரோசின்னு எங்க ஊர்ல ஒரு பிள்ள இருந்தது. அவங்க அய்யா திருநெல்வேலில பெரிய மாட்டு டாக்டரு. ரோசியோட மனசுல ஆசய வளத்தது வெள்ளப் பாண்டின்னு ஒரு வெளங்காத பய. தெனமும் காலேசுக்கு போற மாரி பஸ்சுல வருவான், கலர் கலரா சட்டை பேண்ட்டு போட்டு எப்பவும் புட்போர்ட்ல தொங்கிட்டே தான் திரியுவான். ரொம்ப நாள் கழிச்சு தான் அவன் படிக்கிறது டியூட்டோரியல் காலேசுன்னு எங்களுக்கு தெரிஞ்சுது.ஆனா அதுக்குள்ள காரியம் கைய மீறி போயிட்டுது. ரோசிக்கு அவன் மேல இலவு வந்து, ரெண்டு பேரும் பஸ்லேயே காதல் பண்ண ஆரம்பிச்சாவ. அவன் கேக்குதப்ப எல்லாம் அம்பது, நூறுன்னு அவனுக்கு ரூவாயக் கொடுத்து அவன காதலிச்சா அந்த புண்ணியவதி. ஒரு நாள் ஆயிரம் ரூவா வேணுமின்னு ஒயிட்டு கேட்டதும் அவளால புரட்ட முடியல. உடனே வெள்ளையும் அவளும் சேந்து ஒரு திட்டம் போட்டாவ. அது என்னான்னா, ரோசி வீட்ல அவங்க அய்யா வாங்கிருக்க ஆயிரத்து ஐநூறு ரூவா மதிப்புள்ள ராசபாளயம் நாய வெள்ள திருடி விக்கனும். வார காசுல வெள்ளைக்கு ஆயிரம், ரோசிக்கு மிச்சமின்னு முடிவாச்சுது. ரோசி வீட்ல எல்லாரும் ஊருக்கு போற ஒரு நாள் பாத்து வெள்ள அங்க திருடப்போனான். நாய எப்பிடியோ புடிச்சு கொண்டு போய் தச்சநல்லூர்ல வித்துட்டு வந்துட்டான். ஆனா அவன் கெரகம், நாய வாங்கின ஆளு ஒரு நாள் அதுக்கு கால்ல அடிபட்டிருக்குன்னு மாட்டு டாக்டரான நம்ம ரோசி அய்யா கிட்ட போக, அப்புறமென்ன வெள்ளய பாளயங்கோட்ட செயிலுல செயிலரோட நாயக் குளிப்பாட்ட கூட்டிட்டு போய்ட்டாக. வெள்ள வருவான் வருவான்னு தெருல நாய் குலைக்குதப்போ எல்லாம் ரோசி ஓடி ஓடி வந்து கிழக்கே போகும் இரயில் பாஞ்சாலி மாரி கொஞ்ச நாள் பாத்தா. பிறகு அவுக அப்பா ஆசப்படி மதுரயில மாட்டு டாக்டரா இருக்குத ஒரு பயலக் கட்டிக்கிட்டா.

Tuesday, August 22, 2006

சிட்னியில் பண்பாளர்களைச் சந்தித்தேன்...

போன வெள்ளிக் கெழம சிட்னி முருகன் கோயில்ல வச்சு, சிட்னி வாழ் தமிழ் அன்பு நெஞ்சங்கள சந்திக்கதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கெடச்சுது. நான் சிட்னிக்கு வந்திருக்கேன்னு ஒரு பதிவு போட்டதும் உடனே சந்திக்கலாமான்னு கேட்டு அன்பு நண்பன் கானாபிரபா பின்னூட்டம் போட்டிருந்தாரு. அவரோட மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் எல்லாத்தயும் கொடுத்து பேசச் சொன்னாரு. ரெண்டு பேருக்கும் வேல அதிகம இருந்ததால பாக்க முடியல, போனிலேயே மூனு வாரங்கள் பேசிக்கிட்டோம். கடைசில போன வாரம் தான் சந்திக்க முடிஞ்சது. இதுக்கிடையில கஸ்தூரிப்பெண் தானும் சிட்னியில இருக்கதா பின்னூட்டம் போட்ருந்தாக. அவுகளும் மழை ஷ்ரேயாவும் தோழிகள். சிட்னி முருகன் கோவிலுக்கு வாங்க நாம எல்லாரும் சந்திக்கலாமுன்னு சொன்னாக. சரி எல்லாரும் சாயங்காலம் 7 மணி வாக்குல கோயில்ல பாக்கதுன்னு முடிவு பண்ணினோம்.

முருகன் கோயிலுக்கு உங்கள நாங்களே வந்து கூட்டிட்டுப் போறோமின்னு, பிரபாவும், கஸ்தூரிப்பெண்ணும் சொன்னாவ, ஆனா எங்க ஆபிசுல வேல செய்யுத ஒருத்தரோட வீடும் கோயிலுக்கு பக்கத்துல இருக்கதால நான் அவர் கூட வந்துருதேன்னு சொன்னேன். ஆனா அந்த புண்ணியவாளரு கடைசி நேரத்துல வேற வேல இருக்குன்னு கைய விரிச்சிட்டாரு. அப்புறம் எங்க ஆபிசு இருக்குத ரோட்ஸ்ங்கிற(Rhodes) எடத்தில இருந்து ரெண்டு டிரெய்ன் மாறி வெஸ்ட்மீட்ல(Westmead) உள்ள முருகன் கோயிலுக்கு ஒரு வழியா வந்து ஏழு மணிக்கு வந்து சேந்தேன்.கோயிலுக்குள்ள உக்காந்து வேடிக்க பாத்துகிட்டு இருந்தப்போ பிரபா செல்போனில கூப்புட்டாரு. அவர சுலபமா அடையாளம் கண்டு பிடிக்க முடிஞ்சுது. அவரப் பாத்ததுமே ரொம்ப நாள் பழகின நண்பன பாக்குதது மாரியே இருந்தது. புதுசா ஒருத்தர் கூட பேசுதோமுன்னு ஒரு வித்தியாசம் தெரியல. ரெண்டு பேரும் பேசிகிட்டிருக்கும் போதே பூச ஆரம்பிச்சது. அப்போ பிரபா, அந்தக் கோயில்ல உள்ள அர்ச்சகர்கள்ல ஒருத்தரான ரவி ஐயாவ அறிமுகப் படுத்தி வச்சாரு. ரவி ஐயா நாகப்பட்டிணத்துக்காரராம் ஏழு வருசத்துக்கு முன்னாடி சிட்னில இந்தக் கோயிலுக்கு அர்ச்சகரா வந்தாராம். இந்த எடம் புடிச்சு போனதால இங்கேயே குடும்பத்தோட தங்கியிருக்காரு. இந்த கோயிலுக்கு அர்ச்சகரா வாரதுக்கு ஒரு நேர்காணல் வச்சாகளாம். அதுல பெரியப் பெரிய வேதம் படிச்ச பண்டிதர்களெல்லாம் வந்திருந்தாங்களாம். நமக்கு எங்க கெடக்க போகுதுன்னு தான் ரவி ஐயா நெனச்சாராம். ஆனா இவரு அருணகிரி நாதரோட திருப்புகழ்ல ஒரு சில வரியப் பாடி தமிழ்ல அதுக்கு அர்த்தம் சொன்னதும் கூட இருந்த எல்லாரும் கைதட்டினாகளாம். உடனே கையோட சிட்னிக்கு கூட்டிட்டு வந்துட்டாகளாம். தமிழ் பாட்டுக்கள் நெறய தெரிஞ்சு வச்சிருக்காரு. தமிழ்லயே அர்ச்சணையும் பண்ணுதாரு. தமிழ்நாட்டுக் கோயில்கள்ல கூட பாக்க முடியாத விசயம் இது.

அப்புறம் மூனு பேரும் கொழும்பு சர்வதேச வானொலி, எம்.ஜி.ஆர், திருச்சி, யாழ்ப்பானம், திருநெல்வேலி பத்தியெல்லாம் பேசிகிட்டு இருந்தோம். திருநெவேலி, மதுர, திருச்சி பக்கமெல்லாம் நம்ம ஆளுக கொழும்பு சர்வதேச வானொலியத் தான் விரும்பி கேப்போம். ஆனா பிரபா இலங்கயில அவரு இருந்த போது நம்ம ஊருல இருந்து ஒளிபரப்பாகுத சென்னை வானொலி, திருச்சி வானொலி, விவித் பாரதி எல்லாம் தான் அதிகம கேப்பாராம். நாங்க இப்பிடி கதச்சுகிட்டு இருக்கும்போது கஸ்தூரிப்பெண்கிட்ட இருந்து செல்லுல அழைப்பு வந்துச்சு. நாங்க நின்னுகிட்டு இருக்குத எடத்தச் சொன்னதும் அவுகளும் சரியா எங்கள வந்து அடயாளம் கண்டு பிடிச்சிட்டாக. ஒருத்தர ஒருத்தர் அறிமுகப் படுத்திகிட்ட பிறகு சிட்னில தமிழ் வழிக்கல்விக்கு கெடைக்கும் முக்கியத்துவத்த சொன்னாக. தமிழ ரெண்டாம் மொழியா எடுத்து படிச்சா இங்க மருத்துவக் கல்லூரிக்கு சுலபமா எடம் கெடைக்குமாம். நம்ம ஊரப் பத்தி நெனச்சுப் பாத்தேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி +2வில தமிழ், சமஸ்கிருதம் எடுக்கிறதப் பத்தி தமிழ்மணத்துல சண்டபோட்டு நாறிகிட்ட நம்ம ஆளுக ஞாபகம் வந்தது. வேத்து நாட்டுக்காரன் தமிழுக்கு கொடுக்குத மரியாத கூட நம்ம ஊர்க்காரப் பயலுக கொடுக்குதது இல்லங்கறத நெனச்சு வருத்தமா இருந்தது. நாங்க இப்பிடி பேசிட்டு இருக்கும்போது மழை ஷ்ரேயா கஸ்தூரிப்பெண்ன போன்ல கூப்ட்டு வரதுக்கு கொஞ்ச நேரமாகுமின்னு சொன்னாக. ஆனா இன்னொரு வலைப்பதிவு நண்பரான கார்த்திக்வேலு கோயில் வாசல்ல எங்களுக்காக காத்திருக்குததா சொன்னாக. அவரக் கண்டு பிடிக்குததுலயும் சிரமமில்ல.

கார்த்திக்வேலு கொங்கு நாட்டுக்காரர், பிரபா, மழை ஷ்ரேயா கஸ்தூரிப்பெண் மாரியே இவரும் ரொம்ப நாளா சிட்னியில இருக்குததா சொன்னாரு. பிறகு மலையாளப் படங்கள்ல இருக்கக் கூடிய எதார்த்தம், வங்க மொழிப் படங்கள், சத்தியஜித்ரே பத்தியெல்லாம் பேசினோம். அவுக மூனு பேரும் உள்ளூர்க்காரவுகங்கறதால சிட்னியின் சிறப்பப் பத்தி சொன்னாக. நாங்க கோயிலுக்கு வரும் போது நல்லா இருந்த வானிலை மாறி பயங்கரமா குளிரெடுக்க ஆரம்பிச்சுது. கோயில்ங்கிறதுனால செருப்பு கூட போடாம நின்னதால கால் வெறச்சு போச்சு. கார்த்திக்வேலு கோயம்புத்தூர்க்காரருங்கறதால இந்தக் குளிரெல்லாம் அவருக்கு சாதாரணம்னு நெனக்கேன். கொஞ்ச நேரங் கழிச்சு மழை ஷ்ரேயாவும் அவர் கணவர் கண்ணனும் வந்தாக. அறிமுகப் படலமெல்லாம் முடிஞ்ச பிறகு கொண்டு வந்திருந்த கேமராவுல ஆளாளுக்கு படமெடுக்க ஆரம்பித்தோம், எல்லார் கையிலயும் கேமரா, நெறய படங்கள் எடுத்தோம். வலைப்பதிவர்கள் வரலாற்றுல முத முறையா கோயில்ல வச்சு நடக்கிற சந்திப்பு இதுவாத்தான் இருக்குமின்னு நெனக்கேன். கொஞ்ச நேரம் பேசினதுக்கு அப்புறம் கார்த்திக்வேலு வீடு ரொம்பத் தள்ளி இருக்கதால சீக்கிரமா போகனுமின்னு கெளம்பினாரு.

அவரு போனதுக்கு அப்புறம் நாங்க எல்லாரும் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு பின்னால இருக்குத இட்லிக் கடைக்குள்ள நுழஞ்சோம். ஆளாளுக்கு பணத்த எடுக்க, பிரபா அவரு தான் எல்லாருக்கும் வாங்கித் தருவேன்னு அன்புக் கட்டள போட்டுட்டாரு. இட்லி, வடை, பூரின்னு நல்லா ஒரு பிடி பிடிச்சோம். இந்த சந்திப்பு ஒரு அறிமுகப் படலம் தான், அடுத்தாப்புல செப்டம்பர் 2-ந்தேதி இன்னொரு பெரிய சந்திப்ப நடத்தலாம்னு தீர்மானம் பண்ணினோம். சாப்பிட்டு முடிச்ச பிறகு பத்து மணி ஆயிட்டுது. எல்லாரும் கெளம்பினோம். கண்ணன் என்னத் தனியா போக வேண்டாம்னு சொல்லி அவரும் ஷ்ரேயாவும் என்ன நான் தங்கியிருந்த ஓட்டல் வாசல்ல கொண்டு விட்டுட்டு போன விருந்தோம்பல் என்ன நெகிழச் வச்சுது. கார்ல வரும் போது ஈழம், சென்னை, சிட்னி பத்தியெல்லாம் கண்ணன் பேசிட்டு வந்தாரு. ரொம்பத் தங்கமான மனுசன்.

மொத்தத்துல அன்னிக்கு நாள் ரொம்ப இனிமயா இருந்துச்சு. எந்த செயற்கத் தனமும் இல்லாம எல்லாருமே இயல்பா இருந்தாக. ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல மனுசங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம். வலைப்பதிவு செஞ்சுகிட்டு இருக்குத எல்லா நண்பர்களும் உங்க சண்டயெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு, ஒத்துமயா இருங்கய்யா... ஈழத்துல உள்ள நம்ம சகோதரர்களுக்காக நாமெல்லரும் ஒன்னு சேரனும். சாதி வெறி, காழ்ப்புணர்ச்சி இதெல்லாம் விட்டுட்டு வாங்கய்யா... மனசுக்குள்ள ஆயிரம் வலி இருந்தாலும் அத வெளிக்காட்டாம சக தமிழன்னு சொன்னா பாசத்த அள்ளிக் கொட்டுத ஈழத் தமிழ் சகோதர சகோதரிகளே உங்க பாசத்த நான் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்....

Thursday, August 17, 2006

ஆறு காதல்...(1)

ஆறு பதிவு போடச் சொல்லி என்ன அனுசயா ஒரு மாசத்துக்கு முன்னாடியே கூப்டாக. அன்னா இன்னான்னு இப்ப தான் நேரம் கெடச்சுது. நான் ஆறு பதிவுல சொல்லப் போறது நான் பார்த்த விசித்திரமான ஆறு காதலப் பத்தி. காதல் எந்த அளவுக்கு நம்ம பயக்கள பாடாப் படுத்தி பம்பரமா ஆட்டுதுங்கறதப் பத்தி சொல்லுதேன்.

முதல் காதல்: ரத்தின குமாரு எங்க கூடப் படிச்ச ஒரு சோவாரிப் பய. தலயில காப்படி எண்ணெய தேச்சு எப்பவும் ஒரு காட்டான் லுக்குல தான் அலயுவான். வீட்ல அவங்க அய்யா ரொம்ப கண்டிப்பு, அதனால அவன் வெளில வந்தா அவுத்து விட்ட கழுத மாரி எல்லா சேட்டயும் பண்ணுவான். அவன் பக்கத்து வீட்டுக்கு தீடீர்னு கங்கானு ஒரு அக்கா வந்துச்சு. எங்கள விட நாலு வயசு பெரிய பிள்ளய அக்கான்னு தான சொல்லனும். கங்காவோட அம்மாவும் ரத்தினத்தோட அம்மாவும் நல்ல பழக ஆரம்பிச்சாக, அதனால கங்காவும் ரத்தினத்தோட வீட்டுக்கு அடிக்கடி வந்து போக ஆரம்பிச்சா. கணக்கு பண்ணுறதுல ரத்தினம் பலே கில்லாடிங்கறதால கங்காவயும் எப்படியோ வழிக்குக் கொண்டு வந்துட்டான். ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருந்த கங்காவும் காட்டான் ரத்தினத்த என் ராஜ்கிரன் நீ தாமுலன்னு சொல்லி உருகி உருகி இலவு பண்ணினா. ஒரே குச்சி ஐச ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாப்புடதது, காட்டானுக்கு கூட்டாஞ்சோறு பொங்கி கொடுக்கதுன்னு காதல் வேக வேகமா வளந்துச்சு. அக்கா தம்பி ரேஞ்சுல இருந்ததால யாருக்கும் சந்தேகம் வரல. தினமும் அவன் லீலைகளையெல்லாம் எங்க கிட்ட வந்து சொல்லுவான். நாங்க எல்லாரும் அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரி குட பிடிப்பான்னு காட்டான தண்ணி தெளிச்சி விட்டுட்டோம். இதுகளோட கத ரத்தினத்தோட தம்பி சந்தானத்துக்கு மட்டும் தெரியும். ஒரு நாள் ரத்தினம் சவ்வு முட்டாய் வாங்க பைசா கொடுக்கலங்கதால கொதிச்சு போய் சந்தானம் இந்த தெய்வீகக் காதலப் பத்தி எல்லார் கிட்டயும் சொல்லிப் போட்டான். அவ்வளவு தான் உடனே கங்காவுக்கு ஒரு கோயான் கோபுவ பாத்து கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டாவ அவுக வீட்டுல. நம்ம காட்டான் எங்க கிட்ட வந்து எனக்கு எலி மருந்து வாங்கிக் கொடுங்கல நான் சாகனுமின்னு சொன்னான். உடனே அவன் புடதில நாலு போட்டு வீட்ல கொண்டு போய் விட்டோம். ரெண்டு மூனு நாளுல பய சரியாயிட்டான். அடுத்த வாரமே காலேசுல புதுசா வேலைக்கு சேந்த இட்டமொழி இசக்கியம்மாங்கிற லேப் அட்டண்டர லவ்வ ஆரம்பிச்சிட்டான்

ரெண்டாம் காதல்: செபஸ்தியான் ஆட்டோகிராப் சேரன் மாதிரி இதுவர ஏகப்பட்ட பிள்ளேல காதலிச்சிருக்கான். அவன் முதல்ல காதலிச்சது ரூபாங்கிற பிள்ளய. ரூபா ஆந்திராக்காரி, கண்ணாடி போட்டு குண்டா தெலுங்குப் பட கதாநாயகி மாதிரி நெடு நெடுன்னு இருப்பா. நம்ம ஆளோ அவ தோளுக்குத் தான் இருப்பான். ரெண்டு பேருக்கும் முன்ன பின்ன பழக்கம் கெடயாது. செபஸ்தியானோட சேக்காளி காசிராசா ஒருநா ரூபாவ அவனுக்கு அறிமுகப் படுத்தி வச்சான். அறிமுகப்படுத்தி ரெண்டு நிமிசத்துல ரெண்டு பேருக்கும் காதல் வந்துருச்சு. அப்புறம் ரெண்டு பேரும் தினமும் பேசிக்கிட ஆரம்பிச்சாவ. செபஸ்தியான் அப்போ பண்ணிரண்டாங் கிளாஸ் படிச்சான், ரூபா பத்தாப்பு படிச்சா. ரெண்டு பேரும் டியூசன் போறோமின்னு வீட்ல சொல்லிட்டு தெருத் தெருவா திரிய ஆரம்பிச்சுதுக. செபஸ்தியான் கொஞ்சம் தைரியம் வந்து ரூபாவ அவ பள்ளியூடத்திலயே போய் தினமும் பாத்தான். அங்க ஆரம்பிச்சுது விணை. அங்க உள்ள சரசா டீச்சர் இதுகள பாத்துட்டு போய் ரூபாவோட அய்யா குண்டு ராவ் கிட்ட சொல்ல உடனே குண்டு ராவும் அடுத்த வாரமே வீட்ட காலி பண்ணி ஒங்கோலுக்கு போய்ட்டாரு. ஆனா செபஸ்தியான் அதுக்கெல்லாம் அசரல. ரூபா இல்லாட்டி சோபான்னு அடுத்த பிள்ளையத் தேடிப் போயிட்டான். சமீபத்துல நெல்லைல அவன பாத்தப்ப, "மக்கா டவுனுல என் கூட வேல பாக்குத அழகுமணிய சின்சியரா இலவு பண்ணுதேன். வார வெள்ளி ரெண்டு பேரும் சாலைக்குமார சாமி கோயில்ல வச்சு தாலி கட்டிட்டு, அப்புறம் தெக்கு பஜார் அந்தோனியார் கோயில்ல மோதிரம் மாத்துதோம்" அப்டின்னான். பய திருந்திட்டானேன்னு சந்தோசப் பட்டேன். ஆனா போன வாரம் கெடச்ச தகவல் என்னான்னா, செபஸ்தியானும், அழகு மணியும் தாலி கட்டப் போற நேரத்துல காதலுக்கு மரியாத பாணில வீட்டப் பத்தி ரொம்ப நெனச்சுப் பாத்து பிரிஞ்சிட்டாங்களாம்.

மூனாங் காதல்: எங்க ஏரியாவுலயே ரொம்ப அழகான பிள்ள சிவகாமி. பல பேரு தூக்கத்த கெடுத்தவ. சிவாமி எங்களோட பக்கத்து பள்ளியூடத்தில தான் படிச்சா. பள்ளியூடத்துப் பயக்கள்ல இருந்து காலேசு படிக்கிற பெரிய அண்ணன்மாரு வரைக்கும் அவ மேல பைத்தியமா அலஞ்சானுவ. அந்த நேரம் பாத்து பழனியப்பன்னு ஒரு கோமாளிப் பய அவ பக்கத்து வீட்ல குடியேறினான். சோடாப்புட்டி கண்ணாடி, எண்ணெய் வழியுத நீள கிராப்பு, ஒலக்கால் சீலக்கால் பேண்ட்டு சட்டைனு பய அமர்க்களமா இருப்பான். அவனக் கூட சேத்தா நம்ம பெர்சனாலிட்டி குறஞ்சு போயிரும்னு பயக்க யாரும் அவன பக்கத்துல சேத்துக்கிடுததே இல்ல. பய வாயத் தெறந்தாலே எதாவது உளறி தான் வைப்பான். சிவாமி வீட்டுக்கு பக்கத்து வீடுங்கதால இன்று போய் நாளை வா பாக்யராஜ் மாரி அவளோட வீட்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஏதாவது ஒத்தாச பண்ணி கொஞ்ச கொஞ்சமா அவ வீட்டுக்குள்ள வர போக ஆரம்பிச்சான். நம்ம மைனர் பயக்களுக்கெல்லாம் பயங்கரமா காதுல புக வந்தது. இப்படியே தினமும் அவ வீட்டுக்கு போரதும் வாரதுமா ஒரு மர்மமாவே இருந்தான் பழனி. தீடிர்னு ஒரு நாள் எல்லார் வாயிலயும் பழத்த வச்சிட்டு சிவாமிய கூட்டிட்டு எங்கேயோ ஓடிப் போயிட்டான். பிறகு ஒரு ரெண்டு வாரம் கழிச்சு அவ கழுத்தில மஞ்சக்கயிற கட்டி கூட்டிட்டு வந்தான். எல்லாரும் அதிர்ச்சில உறஞ்சி போயிட்டோம். இப்ப பழனியப்பனுக்கும் சிவாமிக்கும் ஒரு குட்டி பழனியப்பன் இருக்கான். அப்படியே அப்பன உரிச்சு வச்ச மாதிரி இன்னொரு குட்டிக் கோயான். அவனுக்கு எங்கேயோ மச்சம்ல அப்டின்னு ஒரு வயித்தெரிச்சல் காரப் பய நொந்துகிட்டான்.

அடுத்த மூனு காதல பத்தி கூடிய சீக்கிரம் சொல்லுதேன்....

Sunday, August 06, 2006

நண்பர்கள் தினம்...

வலைப் பதிவு செஞ்சுகிட்டு இருக்கிற எல்லாத் தமிழ் மக்களுக்கும் என்னோட நண்பர்கள் தின வாழ்த்துக்கள். உலகம் பூராவும் ஆகஸ்டு 6, நட்பு தினத்த கொண்டாடுதாவ. பெத்தவுககிட்ட கூட பகிர்ந்துகிடாத சில விசயங்கள நம்ம சேக்காளி கிட்ட தான் சொல்லுவோம். TTC தாத்தா நட்புக்கின்னே நாலு அதிகாரம் ஒதுக்கிருக்காருன்னா, அந்த காலத்திலயே அவரு நட்ப பத்தி அலசி ஆராஞ்சிருக்காரு.

பள்ளியூடத்துல கூட ஒன்னா படிச்சவுக கடைசி வர நண்பர்களா இருக்கிறது அபூர்வம். எங்க தாத்தா கூட திருநெல்வேலில படிச்ச இன்னும் ரெண்டு தாத்தாக்கள் சாகுத வரைக்கும் நண்பர்களா இருந்தாக. அவுக போய் சேந்துட்டாலும், அவுக மக்கமாரு இன்னும் நட்போட தான் இருக்காக. குடும்பத்தில ஏதாவது நண்ம தீமயின்னா இன்னைக்கும் வந்து கலந்துக்கிடுவாக.

ஆனா இப்ப உள்ள காலத்துல அந்த மாரி நட்பு வச்சுக்க முடியுமாங்கிறது சந்தேகம் தான். அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியான்னு கண்ணூக்கெட்டாத தூரத்துல இருந்துகிட்டு நட்பு பாராட்டுறது சிரமம் தான். ஆனாலும் மனமிருந்தா மார்க்கமுண்டு. நம்மள்ள எத்தன பேரு இன்னும் பள்ளியூட நண்பர்கள், கல்லூரித் தோழர்களோட எல்லாம் தொடர்பு வச்சிருக்கோம்? அப்படியே தொடர்பு இருந்தாலும், வேலை, கல்யாணம், குடும்பம்னு ஆனவுடனே அந்த பழய தொடர்பு எல்லாம் விட்டுப் போயிடுது. அதுலயும் சில பேரு நல்ல அந்த்ஸ்த்துக்கு வந்தப்புறம்
நாலாங்கிளாஸ்ல கூடப் படிச்சவனயெல்லாம் ஞாபகம் வச்சிக்கிடதது இல்ல.

ஆபிசு நட்பு வேற ஒரு ரகம். இப்பெல்லாம் வருசத்துக்கு ரெண்டு கம்பெணி மாறிகிட்டு இருக்கிற பயக்க, எல்லா பழய கம்பெணி ஆளுகளயும் நினைவுல வச்சுகிடதது பெரிய விசயம் தான். இப்போ ஈ-மெயில், சாட் எல்லாம் இருக்கிறதால, ஒருத்தர ஒருத்தர் தொடர்பு கொள்ளுதது ஒன்னும் பெரிய விசயமில்ல. கூட வேல பாத்த பிள்ளேல ஞாபகம் வச்சுக்கிடுத அளவுக்கு, பயக்கள நாம ஞாபகம் வச்சுக்கிடுதது கெடயாது

தோழனோ, தோழியோ வாழ்க்கத் துணையா அமயுதது அதிர்ஷ்டம் தான். நான் படிச்ச பள்ளியூடம், காலேஜ் எல்லாம் பயக்க மட்டும் படிக்கிற எடமா போச்சு. அதனால ஒரு நல்ல தோழி எனக்கு கெடைக்கதுக்கு வாய்ப்பே இல்லாம போச்சு. நான் மட்டும் இல்ல, திருநெல்வேலில இதே மாரி நெறய துரதிர்ஷ்டசாலிக உண்டு. ஜான்ஸ், சேவியர்ஸ், MDT, சதக்னு பயக்களுக்கு தனியாவும், சாராள்தக்கர், சாரதா, ராணி அண்ணா, ரோஸ்மேரின்னு பிள்ளேளுக்குத் தனியாவும் இன்னும் நெல்லையில அந்த சோகம் தொடருது. எனக்கெல்லாம் சென்னை வருத வரைக்கும் பிள்ளேள் கிட்ட பேசுததே குதிரக் கொம்பா இருந்தது.

கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தோழிங்கிற பேச்ச எடுக்கவே பயமா இருக்கு. நான் குத்துக்கல்லு மாரி இருக்குதப்போ உங்களுக்கு இன்னொரு ப்பிராண்டு கேக்குதான்னு பாத்திர பண்டமெல்லாம் பறக்குததால என் ஆச நிராசயாவே போச்சு.

ஆகயினால மக்களே இந்த நட்பு தினத்துலயாவது உங்க அங்காளி, பங்காளி, சேக்காளி, கேர்ள் ப்பிராண்டு எல்லாத்தோடயும் பேசுங்க, இல்லாட்டி வாழ்த்தாவது அனுப்புங்க...

Wednesday, July 19, 2006

சிங்கார சிட்னி...

ஒரு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்குத் தான் புதுப் பதிவு போடுதேன். வேல விசயமா சிட்னிக்கு வந்து இன்னையோட ஒரு மாசம் ஆச்சு. இப்ப தான் நேரம் கிடைச்சுது. நிலவு நண்பனோட கல்யாணத்துக்குப் போக முடியல, டுபுக்கு அண்ணாச்சியோட நெல்லை மாநாட்டுக்குப் போக முடியாது.
என்ன செய்ய, கடமை என் கையப் புடிச்சு இழுக்குதே...

ஆஸ்திரேலியாவில இப்ப பனிக்காலம். செப்டம்பர் மாசம் வேனிற் காலம் ஆரம்பிக்குமாம். டிசம்பர்ல கோடை காலமாம். ஆச்சரியமான தட்பவெட்ப நிலை.

வழக்கம் போல சிட்னிலயும் நம்ம ஊரு பயக்க நெறய பேரு இருக்காங்க. ரெண்டு தனியார் தமிழ் FM வானொலி இருக்கு. இதெயெல்லாம் விட ரொம்ப அருமயான ஒரு முருகன் கோயில் இருக்கு. வெள்ளிக்கிழம ஆனா நம்ம தமிழ் ஆளுக எல்லாம் ஒன்னு கூடி கோயில்ல சாமி கும்பிடுதாங்க. முழுக்க முழுக்க தமிழ் பாட்டுகள பாடுதாக. குலமிகு கரியது, திருப்புகழ், அம்மையே அப்பா ஒப்பிலா மணியே, ஏறுமயில் ஏறி - இந்த பாட்டுகளயெல்லாம் ஒரு அயல் நாட்டுல கேக்குதப்போ அப்டி புல்லரிக்குது.

இந்த கோயிலக் கட்டினது இலங்கைத் தமிழர்கள். அவுகளுக்கு என் வந்தனம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடான்னு கத்தனும் போல இருந்தது. சிங்கப்பூருல ஆட்சி மொழி, இலங்கை, மலேசியா, அந்தமான்னு எல்லா ஊருலயும் நம்ம கொடி பறக்குதத ஒரு கனம் மனசு நெனச்சுப் பாத்தது.

அப்புறம் அந்த கோயில்ல பூச முடிஞ்சதும் நம்ம தமிழ் சாப்பாடு கெடைக்கும். இட்லி, வடை, முருங்கக்கா சாம்பார்னு பட்டயக் கெளப்பிட்டானுவ.

இனிமேல பதிவு போட நேரம் கெடைக்குமுன்னு நெனைக்கேன். அப்பப்போ சிங்கார சிட்னியப் பத்தியும் கொஞ்சம் சொல்லுதேன்....

Monday, June 12, 2006

பால் பீச்சும் மாட்ட விட்டு, பஞ்சாரத்துக் கோழிய விட்டு....

"சோகங்களில் எல்லாம் பெரிய சோகம், தாயைப் பிரிவதல்ல, தந்தயைப் பிரிவதல்ல, நண்பனைப் பிரிவதல்ல, காதலியைப் பிரிவதல்ல, இதயெல்லாம் விட நாம் வாழ்ந்த சொந்த மண்ணைப் பிரிவது தான் மிகப் பெரிய சோகம்" அப்டின்னு நம்ம பாரதிராஜா அண்ணாச்சி கருத்தம்மா படத்துல வருத "போறாளே பொன்னுத்தாயி" பாட்டுக்கு ஒரு முன்னுரை கொடுப்பாரு. சமீபத்தில நம்ம சொக்காரங்க அம்பது வருசமா இருந்த சொந்த ஊர விட்டு சென்னைக்கு வந்தாக. அவுக வீட்ல எல்லாருக்கும் ஊரப் பிரியுதமேன்னு ரொம்ப மன வருத்தம்...

ஊருல இருந்தா முன்னேற்றமே இல்ல, மெட்ராசு பக்கம் போனா கொஞ்சம் பணங்காசு சேக்கலாமுன்னு நெறய குடும்பங்கள் கெளம்பி மெட்ராசுக்கு வருது. ஆனா அப்பிடி வருத எல்லாரும் மனசுல ரொம்ப சங்கடத்த வச்சுகிட்டு தான் வாராக. எப்போ நேரமும், பணமுங் கெடைக்கும் ஊரு பக்கம் ஒரு தடவ போயிட்டு வரலாம்னு எப்பவும் மனசுல ஒரு ஏக்கம் இருந்து கிட்டே இருக்கும். வீட்டுத் தோட்டம், ஊர் கோயில், குளத்தாங்கர, வாய்க்கால், வயல், தென்னந்தோப்புன்னு ஏதாவது ஒன்னப் பத்தி நெனப்பு நெஞ்சுக்குள்ள சுத்திகிட்டே இருக்கும்.

நான் படிப்ப முடிச்சிட்டு சென்னை வரும்போது எங்க தாத்தா வீட்டுல, ஒவ்வெரு எடமா போயி நின்னு ஏங்கி அழுதத ஆயுசு பூராவும் மறக்க முடியாது. மெட்ராஸ் வந்தும் ரொம்ப நாளக்கி ஊரு நியாபகமாவே இருந்தேன். நம்ம ஊருக்காரன எங்கனயாவது பாத்துட்டோம்னா அவ்வளவு சந்தோசமா இருக்கும்.

என்ன மாரி ஊரப் பிரிஞ்சு பட்ணத்துக்கு பொழப்புக்காக வந்திருக்கிற எல்லாருக்கும் ஊரப் பத்தின நெனப்பு இருந்துகிட்டே இருக்கும். மெட்ராசுலயே பொறந்து வளந்தவுகளுக்கு நம்மள எல்லாம் பாத்தா விசித்திரமா இருக்கும். அந்த மாரி ஆட்கள்ல நெறய பேரு மெட்ராசுக்கு தெக்க ஒரு தடவ கூட வந்திருக்க மாட்டாக. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, அது அங்க வாழ்ந்தவனுக்குத் தான் தெரியும். நம்மள்ல எல்லாருக்கும் பேச்சு, செயல், எண்ணம்னு எதுலயாவது ஒன்னுல சொந்த ஊரோட தாக்கம், பாதிப்பு கொஞ்சமவது இருந்துகிட்டு தான் இருக்கும். அப்பிடி இருக்கதுல தப்பு ஒன்னும் இல்ல. அத மறைச்சு நாகரீங்கற பேரில வெளி வேசம் போடாதிய

அதனால கோயம்புத்தூர்க்காரனோ, மதுரக்காரனோ, திருநெல்வேலிக்காரனோ அவங்க வட்டாரத் தமிழ்ல பேசினா தயவு செய்து யாரும் ஏளனம், கிண்டல் பண்ணாதிய. அதே மாரி நெறய பேரு ஊருல இருக்குத வீடு, வயல் தோட்டம், தோப்பு எல்லாத்தயும் வித்திட்டு பெருமைக்கு பெங்களூரு, சென்னைன்னு 40 லட்சம் 50 லட்சத்துக்கு பிளாட் வாங்கிப் போட்டுட்டு, அவுகளும் ஊர மறந்து, அடுத்தால வார சந்ததிக்கும் ஊரப் பத்தி எடுத்துச் சொல்லாம விட்டுருதாக.

நீ எங்க வேனாலும் இரு, சம்பாதி, சொத்து வாங்கு வேணாங்கல... ஆனா நீ வளந்த ஊருக்கு எதாவது நல்லது பண்ணு. வளந்த மண்ண மறக்குதது, பெத்த தாய மறக்குற மாதிரி.

Friday, June 09, 2006

முல்லா குல்லா... பாகம் 4

முல்லா இப்படி கீத்தா மேல ஒரே லவ்வா இருக்க, அவன ரெண்டு மூனு பிள்ளேள் லுக்கு விட்டுதுக. ரெண்டு மூனு பொண்ணுகளா அப்போ முல்லா சாஹேப் பெரிய மன்மதக் குஞ்சா இருப்பானோன்னு நினக்காதிய. அவனப் பார்வையால பந்தாடுன பரதேவதைகள் எல்லாம் நடிக கமலா காமேஷ், தேனி குஞ்சரம்மா ரேஞ்சுல இருக்கும். வழக்கமா பயக்க தான் பிள்ளேள் எப்ப வெளில வருமுன்னு அதுக வீட்டு வாசல்ல காவக் கெடப்பானுவ. ஆனா முல்லாவப் பாக்கதுக்கு அவன் எயித்த வீட்டுப் பிள்ளேள் தங்கம்மா, மங்கம்மா ரெண்டு பேரும் அவுக வீட்டு கட்டமன்னுச் சுவர புடிச்சிகிட்டு காத்து கெடப்பாளுக. முல்லா வீட்ட விட்டு வெளில காலடி எடுத்து வச்சதும் அவன உஷ், உஷ்னு மெதுவா கூப்புடும் ரெண்டு பிள்ளேளும். ஆனா கீத்தா நெனப்புலயே திரியுத முல்லா இதுகள மறந்தும் திரும்பிப் பாக்க மாட்டான்.

அதுகளும் மனந்தளராம "ஏய், ஹலோ, எலே சோத்துமாடா" அப்டின்னு என்னல்லாமோ சத்தம் குடுத்து பாத்ததுக. நம்ம பய மசியவே இல்ல. இப்படி ரொம்ப தெனாவெட்டா திரிஞ்ச முல்லாவ எப்படியாவது நம்ம பக்கம் திரும்ப வக்கனும்னு சபதம் போட்ட மங்கம்மா, தங்கம்மா ரெண்டு பேரும் ஒரு நாள் முல்லா வீட்டு நடய விட்டு எறங்குனதும், வரிசயா அவன் தட்டட்டி மண்ட மேல பக்கத்துல இருந்த பப்பாளி மரத்துல இருந்து பப்பாளிக் காய பறிச்சி எறிய ஆரம்பிச்சாளுக. ஆனா அதுக்கும் நம்ம ஆளு கொஞ்சங்கூட அசரல. வந்த பப்பாளிக் காயெல்லாம் அவன் தலயில பட்டு சிதறி ஒடஞ்சதே தவிர நம்ம பயலுக்கு ஒன்னும் ஆவல.

இதயெல்லாம் பாத்துகிட்டு இருந்த முல்லாவோட சேக்காளி மாசானம், சவ்வு முட்டாய், அழிரப்பர், அருனாக்கயிறு இதயெல்லாம் அதுகளோட தம்பி ஊசிக்காட்டானுக்கு வாங்கிக் கொடுத்து எப்பிடியோ அந்த பிள்ளேள் ரெண்டு பேரயும் பிக்கப் பண்ணிட்டான். மாசானம் இப்ப அந்த பிள்ளேளயும் அதுக தம்பியயும் வச்சுத் தீனி போட முடியாம தினறிட்டு வாறான். இனிமே எங்க அய்யா கோமனத்த வித்து தாமுலே இதுகளுக்கு இரையறுக்கனும், வேற எங்கிட்ட எதுவும் இல்லன்னு ஒரு நாள் ரொம்ப சோகமா சொன்னான்.

கீத்தாவ தெனமும் எப்படியாவது பாத்துரனும்னு முல்லா அவ வீட்டு வழியா நடந்து போய் பாத்தான். ஆனா அவன யாரும் கண்டுக்கல. கீத்தாவ எப்படியாவது வீட்ட விட்டு வெளிய வர வக்கனுமின்னு நெனச்ச முல்லா அதுக்கு ஒரு திட்டம் போட்டான். நாய் மாரியே ஊள விட்டுட்டு அவ வீட்ட எட்டி எட்டி பாத்துகிட்டே போனான், இதுல கீழ கெடந்த வெறி நாய முல்லா கவனிக்கவே இல்ல. நாய் வயித்த முல்லா மிதிக்கவும் தூங்கிட்டு இருந்த நாய் வெறில முல்லாவோட தொடக்கறிய ஒரு கவ்வு கவ்வுச்சு. அவ்வளவு தான் முல்லா கத்தி கூப்பாடு போட்டுகிட்டே ஒடினான். கள்ளப் பய தான் ஒடுதான்னு நாய் விடாம முல்லாவ தொரத்த, கீத்தா வீட்டுல எல்லாரும் வெளில ஓடியாந்து வேடிக்க பாத்ததுக. தொப்புள சுத்தி 48 ஊசி போட்டாலும் முல்லா ரொம்ப தெனாவெட்டா எல்லார்ட்டயும், "எப்பிடி, நம்மாள வெளிய வர வச்சுட்டன்ல" அப்டின்னு சொல்லிட்டுத் திரிஞ்சான். எற்கனவே ராச நடை நடந்துட்டு இருந்த முல்லா பய நாய்கடிச்சதுக்கப்புறம் இன்னும் கொஞ்சம் கோயான் மாதிரி நடக்க ஆரம்பிச்சான்.

முல்லா இன்னும் வருவான்.....

Wednesday, June 07, 2006

பேதில போவான்....

நம்ம ஊருல எப்படில்லாம் பெருசுக, சின்னதுகள ஏசுமுன்னு யோசிச்சு பாத்தேன். உடனே எனக்கு ஞாபகம் வந்தது எங்க பெரியாத்தா தான். புண்ணியவதி, அவுகளுக்கு தமிழ்ல தெரியாத கெட்ட வார்த்தையே கெடயாது. எங்க பெரியாத்தா எங்க அண்ணன(பெரியாத்தாவோட மவன்) ஏசும் போது ரொம்ப காமெடியா இருக்கும். எவ்வளவு தான் ஏசினாலும், அண்ணாச்சி பதில் பேசவே மாட்டான். உடனே அதுக்கும் சேத்து என்ன ச்சொன்னாலும் மன்னு மாரில இருக்கான் வெறுவாக்கங்கெட்ட பய அப்டின்னு இன்னும் ஏச்சு கூடும்.

எங்க அண்ணாச்சி மட்டுமில்ல நாங்களும் நெறய ஏச்சு வாங்கிருக்கோம். குச்சிக்கம்பு வெளயாடும்போது பெரியாத்தா வீட்டுக்குள்ள நம்ம தம்பியாபிள்ள அடிச்சி விட்ருவான். உடனே பெரியாத்தா, "எல எந்த பேதில போவான் வீட்டுக்குள்ள கம்ப அடிச்சதுல, இந்த பக்கம் வா கைய ஒடிச்சு அடுப்புக்குள்ள வைக்கென்". இந்த சத்தத்த கேட்டதும் அடுத்த 10 நிமிசத்துக்கு அந்த இடத்தில ஒரு பய இருக்க மாட்டான். பழயபடி திரும்ப இதே கூத்து நடக்கும்.

ஒரு தடவ ரேசன் கடைக்கு போன இடத்துல நம்ம அண்ணாச்சி எப்பிடியோ ரூவாயத் தொலச்சிட்டான். தொலச்ச ரூவாய அண்ணாச்சி ரேசன் கடைல தேடு தேடுன்னு ஒரு மணி நேரமா தேடிட்டு மெதுவா வீட்டுக்கு வந்ததும் ஆரம்பிச்சது அருப்புக் கண்டம். "கூறுகெட்ட மூதி எப்பிடி ரூவாயத் தொலச்ச? பக்கிப்பிராண்டு மாரி எங்கனயாவது பரக்கப் பாத்துட்டு நின்னுருப்ப... கரியாப்போவான், உமியாப் போவான் உன்னயெல்லாம் சந்து சந்தா வகுரனும்". இதுக்கும் அண்ணாச்சி பதிலே சொல்லாம மன்னாந்த மாரி கம்பா நிப்பான்.

செந்தட்டின்னு நம்ம ஊரு பக்கம் ஒரு இலை உண்டு. அத மேல தேச்சா பயங்கரமா ஊரல் எடுக்கும், சுரீர்னு எறும்பு கடிச்ச மாரி வலிக்கும். வலி நிக்கதுக்கு பத்து நிமிசம் ஆகும். அப்படிப்பட்ட செந்தட்டிய என் தம்பியாபிள்ள மேல ஒரு தடவ ஒரு பெரிய பய தேச்சுட்டான். நம்ம தம்பியாபிள்ளயும் பெரியாத்த கிட்ட போய் ஓ ராமன்னு ஒப்பாரி வச்சான். அப்புறம் என்ன பெரியாத்தா பூடம் இல்லாமலே சாமி ஆட அரம்பிச்சாவ... "ஏல மாடு மாரி வளந்திருக்கியே, இப்பிடியா கூ கொழுப்படுத்து பச்ச பிள்ள(தம்பியாபிள்ளைக்கு வயசு அப்ப 14) மேல தேப்ப? இங்க வால உன் ---ல தேச்சு விடுதேன். கிறுக்குப் பய... படுக்காலிப் பயவில்ல.. இனிமே இந்த பக்கம் வா கண்ண நோண்டுதேன்" அதுக்கப்புறம் அந்தப் பய எங்க வீடு இருந்த திசை பக்கம் தல வச்சு கூட படுக்கல.

பயக்களத்தான்னு இல்ல பிள்ளேலும் நல்ல ஏச்சு வாங்கும் பெரியாத்தா கிட்ட. இப்படித்தான் ஒரு தடவ சும்ம இருந்த பக்கத்து வீட்டுப் பிள்ளய கூப்டு "ஏட்டி சரசு நான் குளிக்கப் போறேன். கல்லுல தோச கெடக்கு மாத்திப் போட்டுட்டு அடுத்தால இன்னொரு தோச விடுட்டி, நான் அதுக்குள்ள வந்துருதேன்" அப்படின்னு குளிக்கப் போனாவ. சரசு என்ன செஞ்சாலோ தெரில முத தோசய பிச்சும், அடுத்த தோசய கருக்கியும் எடுத்தா. குளிச்சிட்டு வந்து இதப் பாத்த பெரியாத்தா பத்ரகாளியா மாறி, "ஏட்டி களுத முண்ட தெரியெலேன்னா சொல்ல வேண்டியது தான மூதேவி மூதி, எல்லாத்தயும் பேத்து வச்சிருக்கா ஆடாங்கன்னி. உங்க அம்ம வளத்து வச்சிருக்கா பாரு லச்சன மயிரா" அப்டின்னு கத்த அப்பிரானியான பக்கத்து வீட்டு மாமா அடுத்த வாரமே வீட்டக் காலி பண்ணிட்டு தூரா தேசம் போயிட்டாரு பொண்டாட்டி பிள்ளயோட...

Friday, June 02, 2006

முல்லா குல்லா... பாகம் 3

முல்லா அவன் படிச்ச பழைய தனியார் பள்ளியூடத்தில ஒரு பிள்ளைய ரெண்டு தலயா(ஏன்னா முல்லாக்கு தலயில ரெட்டச் சுழி)காதலிச்சான். அவன் லவ்வினது அந்த தனியார் பள்ளியூட எட்மிஸ்டரஸ் பிள்ளைய. அந்த எட்மிஸ்டரஸ் பேரு உமா மேடம். உமா மேடத்துக்கு 45 வயசு இருக்கும். ஆனா நேர்ல பாத்தா 30 வயசு அக்கா மாதிரி இந்திக்காரி நடிக தபு சாடைல இருக்கும். ஆனா அந்தம்மா புருசன் பாலாமடை பலராமனுக்கு மேடத்தோட 12 வயசு அதிகம். சைனாக்காரனுக்கு பொறந்த பயன்னு ஊருக்குள்ள அந்த ஆள பத்தி பாசமா சொல்லுவாக. பழய சினிமா நடிகரு குலதெய்வம் இராசகோபால் தம்பி மாதிரி இருப்பாரு மனுசன். விதி கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லாம சதி செஞ்சு ரெண்டு பேரயும் சோடி சேத்துருச்சு.

ஊருல நேரம் போகாம வத்தல், வடகம் போட்டுட்டு இருந்த மாமிகளா சேந்து ஆரம்பிச்ச பள்ளியூடம் தான் அந்த தனியார் பள்ளியூடம். உமா மேடத்துக்கு ஊர்ல உள்ள பெரிய புள்ளிகளோட நல்ல பழக்கம் இருந்ததால பள்ளியூடம் நல்லா வளந்துச்சு. பள்ளியூடம் வளர, வளர உமா மேடம் பழய வத்தல், வடக மாமி கூட்டத்த எல்லாம் வெரட்டிட்டு புதுசா, இளசா உள்ள பெரிய படிப்பு படிச்ச டீச்சர்களா புடிச்சு போட்டுச்சு. இதனால நெறய மாப்பிள பெஞ்சு பயலுவ ஒரு கிளாசுல 3, 4 வருசம் உக்காந்திருந்து பெஞ்ச தேச்சிட்டு இருந்தானுவ.

உமா மேடத்துக்கு ரெண்டு பொட்டப் பிள்ளேள். அதுக பேரு சீத்தா, கீத்தா. என்னடா பேரு சீதா, கீதான்னு தான இருக்கும் சீத்தா, கீத்தானு ஆத்தா மாதிரி இருக்கேனு முழிக்காதிய. அவுக அய்யா "பாலாமடை பலராமன்" பெயரியல் ஆசான் கி.கூ.முர்கேஸ்அன்(முருகேசன் தான் பெயரியல் படி அப்படி எழுதிருக்காரு) கிட்ட சொல்லி பெயரியல் ராசிப்படி அப்படி வச்சிட்டாரு. சீத்தாவும், கீத்தாவும் அவுக ஆத்தாவோட ரோட்டுல நடந்து வந்தா ஊர்ல உள்ள பயக்க சொரிமுத்து, அந்தோனி, பால்பாண்டி, செல்லத்துரை எல்லாம் வா பொளந்து பாத்துட்டு இருப்பானுவ. நடந்து வார மூனு பேருல யாரு அக்கா, யாரு தங்கச்சின்னே தெரியாம முழிப்பானுவ.

அந்த ஊருல ஜீன்சு பேன்ட்டு போட்டுட்டு முத முதலா திரிஞ்சது சீத்தா, கீத்தா தான். அந்த டிரசுல அதுகள பாத்ததும் முல்லாவோட சேக்காளி இசக்கியப்பனுக்கு ஒரு சந்தேகம் வந்துது. "எலே முல்லா இந்த பிள்ளேள் இந்த டிரச போடுதுகளே, ஏதாவது ஒரு அவசரம்னா என்ன செய்யும்?". அந்த கேள்விக்கு யாராலயும் பதில் சொல்ல முடியல....!!!

நம்ம முல்லா டாவடிக்கிறது சின்னவ கீத்தாவ. கீத்தா முல்லாவோட ஒன்னரை அடி உயரம் அதிகம். இருந்தாலும் ஆசை யார விட்டது. யாராவது கேட்டா "மூர்த்தி சிறுசா இருந்தா என்ன கீர்த்தி பெருசா இருக்குல்ல"ன்னு சொல்லுவான். முல்லா கீத்தா வீட்டுக்கு அடிக்கடி ஃபோன் போட்டு யார் எடுத்தாலும், "உம் நாந்தான்" அப்டின்னு மூனு தடவை சொல்லுவான். அதுக்கு "ஏல நீ என்ன பெரிய லார்டு கிச்சனா பேரச் சொல்லுல"னு பதில் வரும், முல்லாவும் விடாம "கரையிருப்பு லாரி செட்டா", "கரையிருப்பு லாரி செட்டா"னு மூனு தடவை கேட்டுட்டு ஃபோன வச்சிடுவான்.

முல்லா அடுத்த வாரம் வருவான்....

Monday, May 29, 2006

ரொட்டி, சால்னா...

நம்ம ஊர்க்காரப் பயக்கலுக்கெல்லாம் நான் எதச் சொல்லுதேன்னு தெரிஞ்சிருக்கும். தெரியாத வெளியூர் ஆளுகளுக்கு பரோட்டான்னா தெரிஞ்சுடும். நல்ல ரொட்டி தின்னு எவ்ளோ நாளாச்சு. ரொட்டி தின்னே வளந்த உடம்புவே இதெல்லாம்...

புரோட்டா, ரொட்டின்னு நம்ம ஊருப்பக்கம் சொல்லுவாவ.. இந்த ரொட்டி கன்யாகுமரில இருந்து மதுர வரைக்கும் தான்யா டேஸ்ட்டு, மதுரய தாண்டிட்டா வேஸ்ட்டு. கேரளாக்காரனுவ, சிலோன்காரப் பயலுவ எல்லாம் போடுதது பரோட்டா... தண்டி, தண்டியா அவனுக போடுத எருக்கட்டி பரோட்டா தான் மதுரக்கு வடக்க உள்ளவங்களுக்கு தெரியும். நம்ம ஊரு ரொட்டி சின்னதா, மொருமொருப்பா, மெதுவா வாயில போட்டா கரஞ்சு போயிரும்.

அதே மாரி நம்ம ஊரு சால்னா கிட்ட குருமாவாவது எருமாவாவது.. நிக்க முடியாதுல்ல.. மெட்ராசுல அத சேர்வைனு வேற சொல்லிக்கிடுவானுவ. ஒரேத் தண்ணியா இருக்கும். நம்ம ஊரு சால்னால அப்டியே நெய் மெதக்குமய்யா..

அத சாப்டுததுலயும் நம்ம பயக்க ரசனயோட சாப்டுவானுவ. ரொட்டிய சின்ன சின்னத் துண்டா பிச்சு போட்டு அதுக்கு மேல சால்னாவ கோரிக் கோரி ஊத்தி, வெங்காயத்த கூடச் சேத்து அப்டியே வாயில போட்டா.. ஆஹா அதுக்கு ஈடு இணை கிடயாது.

தொட்டுகிடதுக்கு சைவ ஆளுகன்னா ஆம்ப்லேட், ஆப்பாயில், அசைவ ஆளுகன்னா வருவல், கோழிக் கறின்னு எத்தன தடவ தின்னாலும் ரொட்டி சால்னா அலுக்கவே செய்யாது. அதுவும் மட்டன் வருவல் நம்ம ஊருல மட்டும் தான் கெடக்குமுன்னு கேள்விப் பட்டிருக்கேன்.

திருநெவேலில நெறய கடைகள்ல சைவச் சால்னான்னு தனியா வச்சிருப்பானுவ. அதனால முட்ட கூட தொடாத ஆளுக கூட, ரொட்டி சால்னாவ விரும்பிச் சாப்பிடுவாவ. வீட்டுக்கு விருந்தாள் வந்தா கேக்கவே வேண்டாம். ரொட்டி வாங்கிக் கொடுத்து உபசாரம் பண்ணாம திருப்பி அணுப்ப மாட்டாவ...

ரொட்டி சாப்புட பெரிய ஓட்டலுக்கு போவக் கூடாது. அவனுக பரோட்டான்னு எருக்கட்டியப் பெருசா போடுவானுவ.. சால்னாவும் மண்ணு மாரி இருக்கும். ரொட்டிக்கின்னே தனியா உள்ள புரோட்டா(பரோட்டா இல்ல) ஸ்டால்ல போய் சாப்புடனும். புரோட்டா மாஸ்டர் அடிச்சு, வீசி ரொட்டி போடுதத பாத்துகிட்டே இருக்கலாம். ரொட்டி, ஆம்ப்லேட் கல்லுல வேகுதப்ப வார வாசம், கொத்து புரோட்டா போடுதப்ப கல்லுல இருந்து வார சத்தம் இதெல்லாமே கடைக்குள்ள தன்னால இழுத்துட்டுப் போயிரும்.

திருநெவேலில டவுன்ல வைர மாளிக, சங்சன்ல பிரபு ஓட்டல், பாளயங்கோட்டயில செட்டிநாடு, ருசி, குற்றாலத்துல செங்கோட்ட பார்டர்ல உள்ள கடைக, பணகுடி டயானா, பொன்னாக்குடி டிரைவ் இன் புரோட்டா கடை இங்கெல்லாம் ஒரு தடவ சாப்டுப் பாருங்க அப்புறம் சொல்லுவிய...

பொரிச்ச புரோட்டா, வீச்சு புரோட்டா, கொத்து புரோட்டானு எத்தன விதமா சாப்ட்டாலும் அலுக்கவே செய்யாது. ரொட்டி நம்ம தமிழனோட பாரம்பரிய உணவு கெடயாது, ஆனா எப்பிடி நம்ம ஊருக்குள்ள வந்தது, எப்பிடி இவ்ளவு பிரபலமாச்சுங்கது தான் ஆச்சரியமா இருக்கு.....

Thursday, May 25, 2006

டயட்டிங்

ஆபிசுல மத்யானம் நிறைய பேரு கூட்டமா கெளம்பி பக்கத்துல இருக்குற பழக்கட முன்னாடி வரிசையா நிக்குதுக. என்னான்னு போயி பாத்தா "fruit bowl" அப்டின்னுட்டு ஒரு சின்ன சட்டி நெறய எல்லா பழத்தயும் போட்டுக் குடுக்கான். அத எல்லா பயவிள்ளேளும் டயட்டிங்னு சொல்லி வாங்கித் திங்குதுக. காலேலயும், ராத்திரியும் நல்லா மூக்கு புடிக்க தின்னு போட்டு, மத்யானம் மட்டும் என்னத்துக்கு இந்த டயட்டிங்கோ தெரில.

நம்ம ஆளு ஒருத்தருக்கு விபரீத ஆசை வந்து 2 மணிக்கு அந்த "fruit bowl" வாங்கி தின்னுட்டு, மூனு மணிக்கு பசி தாங்க முடியாம, பச்சியக் கொண்டா, போண்டாவக் கொண்டானு தட்டழிஞ்சுட்டு வந்தாரு. கேண்ட்டீன்ல உள்ள ஐட்டத்துல பேர்பாதி உள்ள போனதும் தான் அடங்குனாரு.

இது இப்படின்னா, மத்யானம் சாப்பாடு கொண்டு வார கூட்டம் அதுக்கு மேல. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல ஒரு மாமி இருக்கு, அது ஒரு பெரிய சாக்குப் பைய தூக்கி கிட்டு மல்லேஸ்வரி கணக்கா வரும். அந்தம்மா தூரத்தில வரும்போதே நம்மூரு குசும்பனுக, ஏல சோத்து மூட்ட வருது பாருலன்னு கத்துவானுக. தட்ட, சீட, எள்ளுருண்ட, கடல முட்டாய் இதெல்லாம் அப்பப்போ கொரிக்கதுக்கு, ரெண்டு குழம்பு, ஒரு கூட்டு, ஒரு பொரியல், தயிர், மோர்னு எல்லா ஐட்டமும் தனித் தனிச் சட்டில இருக்கும். யாரயும் துணைக்குக் கூப்பிடாம, தானே தனியாளா கடபரத்தி எல்லாத்தயும் ஒரு வெட்டு வெட்டும்.

காலேல ஆபிசுக்கு வாரதே 11 மணிக்குத் தான். பிறகு தட்ட, சீட எல்லாத்தயும் ஒவ்வொன்னா அரைக்கதுக்குள்ள மத்யானம் வந்துரும். அப்புறம் சோத்த தின்னு போட்டு திரும்ப 2.30 மணில இருந்து மோர குடிக்கேன், சாரக் குடிக்கேன்னு 5 மணி வர ஓட்டிட்டு, சரியா 5 மணியானதும் ஸ்நாக்ஸ் திங்கப் போரேன்னு கெளம்பிடும். எல்லாம் சரி அந்த மாமி எப்போ தான் வேல பாக்கும்னு கேப்பீகளே... "வயுத்துக்கு உணவு இல்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்படும்"னு அப்பப்போ மாமி மெயில் பாக்கது, பாட்டு கேக்கதுன்னு ஓட்டிடும்.

சாய்ங்காலம் 5 மணிக்கு ஸ்நாக்ஸ் தின்னுட்டு, 5.30 மணிக்கு, அவுக வீட்டு மாமா வந்ததும்(அவருகிட்டயும் ஒரு சோத்து மூட்ட இருக்கும்), "இன்றைய பொழுது இனிதே கழிந்ததுன்னு" கெளம்பிப் போயிடும்.

Tuesday, May 23, 2006

முல்லா குல்லா... பாகம் 2

முல்லா இருந்த ஊருல ரெண்டு பள்ளியூடம் தான் உண்டு. ஒன்னு கவருமெண்டு பள்ளியூடம், இன்னொன்னு தனியார் பள்ளியூடம். தமிழ்நாட்டுல பாவாடை, தாவணி யூனிபாரம் போட்ட பிள்ளேள் உள்ள பள்ளியூடங்கள்ள தாழையூத்து கவருமெண்டு பள்ளியூடமும் ஒன்னு. இக்கரைக்கு அக்கரை பச்சைங்கிற மாதிரி தாவணி போட்ட பிள்ளேள பாக்க தனியார் பள்ளியூட பயலுவ அலயுவானுவ, சுடிதாரு போட்ட தனியார் பள்ளியூட பிள்ளேள பாக்க கவருமெண்டு பள்ளியூட பயலுவ அலயுவானுவ. நம்ம முல்லா ஏழாப்பு வரை தனியார் பள்ளியூடத்துல சுடிதார பாத்து போட்டு, எட்டாப்புக்கு தாவணி பாக்க கவருமெண்டு பள்ளியூடத்துக்கு வந்து சேந்தான். கவருமெண்டு பள்ளியூடம் வந்தாலும் பய தனியார் பள்ளியூடத்த மறக்காம, அங்க உள்ள ஒரு பிள்ளைய லவ்விட்டு இருந்தான்.

தனியார் பள்ளியூடத்துல எலுகேஜில இருந்தே பேண்ட்டு தான் பயக்கலுக்கு யூனிபாரம். கவருமெண்டு பள்ளியூடத்தில பத்தாங் கிளாஸ் வரை டவுசர் தான். முல்லாக்கு டவுசர் போட புடிக்கலன்னாலும் வேற வழியில்லாம போட்டுட்டு வருவான். பள்ளியூடத்துக்கு வெளில தன்ன பெரிய பயன்னு காட்ட டவுசருக்கு மேல பேண்ட்டு போட்டுட்டு வருவான் முல்லா. பள்ளியூடத்து வாசல்ல பேண்ட்ட களஞ்சு மடிச்சு பைல வச்சு கொண்டு போவான். திரும்ப சாய்ங்காலம் வீட்டுக்கு போம்போது பேண்ட்ட மாட்டிட்டு தான் கெளம்புவான். ஆனா அதுக்கும் வேட்டு வச்சா "ஆவி"ங்கிற வாத்திச்சி.

ஆவி டீச்சர் அந்த கவருமெண்டு பள்ளியூடத்தில இங்கிலீசு பாடம் நடத்துவா. வயசு அம்பத்தி நாலு. ஆவி டீச்சரோட உண்மையான பேரு ஆங்காரி விசாலம். அத சுருக்கி எல்லாரும் ஆவி, ஆவின்னு கூப்பிடுவாவ. ஆவிக்கு இன்னும் கல்யாணம் ஆவல. இருபது வருசத்துக்கு முன்னாடி கூட வேல பாத்த வாத்தியார் ஆரிய நாராயணனோட காதல் வந்து கல்யாணம் பண்ணிக்கிடலாம்னு நினைக்கும் போது, வாத்தியாரோட பொண்டாட்டி "பெரிய குந்தானி" வந்து பள்ளியூடத்தில சாமியாடிட்டா. வாய்க்கு வந்த கெட்ட வார்த்தெயெல்லாம் சொல்லி ஆவிய "இனிமேல் இந்த கெழட்டு பயலோட சுத்தினேன்னா, உன் கொண்டயில தீ வச்சு போடுவென்"னு சொல்லிட்டு போய்ட்டா. அதுல இருந்து ஆவி டீச்சருக்கு ஆம்பிளேள் மேல ஒரு வெறுப்பு. கல்யாணமே பண்ணிக்கிடாம இன்னிய வரைக்கும் காலத்த ஓட்டிட்டா.

நம்ம முல்லா ஒரு நா இந்த ஆவி டீச்சர் வரும் போது பாத்து பேண்ட்ட களத்திட்டான். அவ்வளவு தான் ஆவி கத்தி கூப்பாடு போட்டு இந்தப் பய என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினான்னு எல்லார்ட்டயும் சொல்ல ஆரம்பிச்சுட்டா. உடனே எட்மாஸ்டர் பிரெம்ப எடுத்து முல்லாட்ட "செவத்த பாத்து திரும்பி நில்லுல"னு சொல்லி புளிச், புளிச்னு பிட்டில நாலு வச்சாரு. அது பத்தாதுன்னுட்டு பியூன் முனியன விட்டு காப்படி வெளக்கெண்ணெய அவன் எண்ணெயில்லாத தலயில தேய்க்கச் சொன்னாரு.

அன்னைலருந்து முல்லா எதக் கழட்டினாலும், ரொம்ப யோசிச்சு தான் களட்டுதான்.

முல்லா அடுத்த வாரம் வருவான்......

Monday, May 22, 2006

நெல்லைக் கிறுக்கன்

நான் இன்னைலருந்து தமிழ்ல எழுதப் போறேன். போன வெள்ளிக் கெழம பெங்களூர்ல இருந்து சென்னைக்கு ஒரு volvo பஸ்ல வந்தேன். மொத்தம் அந்த ப்ஸ்ல என்னயும் சேத்து 4 பேரு தான்.

அந்த பஸ்ல வந்த ஒரு வயசான மாமி ஹைவே மோட்டல்ல பிஸ்கட்டு வில கேட்டு அதிர்ச்சியாகி, கடக்காரன போலீஸ்ல கம்பெளய்ண்டு கொடுத்துடுவேன்னு சொல்ல, அதுக்கு அந்த எமப் பய, போலீஸ் இல்ல மிலிட்டரில வேனாலும் போய் சொல்லு ஆயான்னு நக்கலா சொன்னான். பாவம் மாமி ரொம்ப நாள் கழிச்சு வீட்ட விட்டு வெளிய வருதுன்னு நினைக்கேன், அதான் வெவரம் தெரியாம பேசுது.

பஸ்ல வந்தும் மாமி விடல டிவில படம் போடச் சொல்லி ஒரே ரகள. டிரைவர் ஒரு ஹிந்தி படம் போட்டாரு. DDல 15 வருசத்துக்கு முன்னாடி ஹிந்தி படம் பாத்தது, அதுக்கப்புறம் இப்ப தான் பாக்குதேன். வடக்க நிறைய படத்துல ரெண்டு மூனு ஹீரோ ஒன்னா நடிக்கானுவ, ஆனா நம்ம பயலுவ ஒரு படத்துல நடிச்ச உடனே பங்காளி சண்ட போட அரம்பிச்சிடுதானுவ.

ஸ்ரீபெரும்புதூர் வழியா வரும் போது ரெண்டு விசயம் என் கண்ணுல பட்டுது. ஒன்னு நம்ம ராஜீவ் காந்தி இறந்த இடம். அந்த வழியா பஸ் போகுதப்ப மனசு கனமா இருந்த்தது. நாம இன்னைக்கு இந்த அளவு IT, Technologyல வளந்திருக்கோம்னா அதுக்கு அவரு அன்னைக்கு போட்ட அஸ்திவாரம் தான் காரணம். மனுசன் இப்ப இருந்திருந்தா இன்னும் நாம வளந்திருப்போம். நமக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான். அவரு இறந்த இடம் இப்ப அமைதியா இருக்கு. ராஜீவோட எத்தனை கனவுகள் அந்த மண்ணோட போச்சோ......

ரெண்டாவதா நான் பாத்தது Nokia, Saint Gobain, Hyundaiனு வரிசயா அந்த ரோட்டில உள்ள தொழிற்சாலைகள். புது அரசாங்கம் இன்னும் நிறய தொழிற்சாலைகள சென்னைக்கு கொண்டு வரும்னு நம்புவோம்.

முல்லா, குல்லா கதய படிச்சுட்டு நம்ம பயலுவ நிறய பேரு போன் பண்ணி பேசினானுவ. முல்லாவ பத்தி நானும் நிறய மேட்டரு வச்சிருக்கேன், அதயும் எழுதுன்னு சொன்னானுவ. இதுல இருந்து எல்லாரும் முல்லா மேல ரொம்பபபபபபபபப பாசமா இருக்கானுவன்னு புரிஞ்சிக்கிட்டேன்.

Wednesday, May 17, 2006

முல்லா குல்லா......... பாகம் 1

முல்லா அப்படிங்கிற பேரப் பாத்ததும் ஏதோ சரித்திர கத சொல்லுதேன்னு நினைக்காதிய. முல்லா என் கூட படிச்ச ஒரு உத்தம புத்திரன். அவன் இப்போ எங்க என்ன பண்ணிட்டு இருக்கானோ தெரியல. நம்ம பயலுவ எல்லாம் அவன வல வீசி தேடிட்டு இருக்கானுவ. பய கையில சிக்க மாட்டக்கான்.

முல்லாவோட அங்க அடயாளம்:

உயரம்: 5 அடி
எட: 74 கிலோ
நெறம்: மஞ்சக் காமாள வந்தவன் மாதிரி மஞ்சள்
ஊரு: திருநெல்வேலி பக்கத்துல

முல்லாப் பயல் நடந்து வந்தான்னா அழுற சின்னப் பிள்ளேள் கூட அழுதத நிறுத்திட்டு மிரண்டு போய் பாக்கும், அப்படி ஒரு ராஜ நட...

அவனோட வாகணம் ஒரு 1972-ம் வருசத்து Lamby ஸ்கூட்டரு. அவங்க அய்யா அத எங்கியோ கொண்டி போட்டு வாங்கிக் கொடுத்தாரு. அந்த ஸ்கூட்டர ஒரு மூனு மாசமா முல்லா 1st கியர்லயே ஓட்டினான். வேற யாரு கிட்டயும் கேக்காம அவனாவே ஸ்கூட்டரு ஓட்ட ஆரம்பிச்சதால அந்த 1st கியர் எபெக்ட். ஸ்கூட்டருல இன்னும் மூனு கியர் இருக்கு, அதயும் உபயோகப் படுத்தனும்னு யாரும் அவனுக்கு சொல்லல அவனும் யார்கிட்டயும் கேக்கல. பொதுவாவே முல்லா தான் நினைக்கிறது தான் சரின்னு நினைப்பான் அதனால யார்ட்டயும் யோசன கேக்க மாட்டான்.

இப்படி 1st கியர்லயே போய் நெறய பெட்ரோல் செலவு ஆவுதுன்னு அவங்க அய்யா, "இனிமேல் ஸ்கூட்டர தொட்டீன்னா கைய ஒடிச்சு அடுப்புல வச்சி போடுவேன்னு" சொல்லிட்டாரு. அதனால முல்லா கொஞ்ச நாள் சோகமாத் திரிஞ்சான். அப்புறம் அவனோட சேக்காளி(நண்பன்) மகுடி மஸ்தான்(மஸ்தானப் பத்தி தனிக் கதை நெல்லைக் கிறுக்கன்ல வரும்) கிட்ட அவன் பிரச்சனைய சொல்லிருக்கான். அதுக்கு மஸ்தான் " எலெ கூமுட்டக் கூனா வண்டில மத்த கியரெல்லாம் மயிரப் புடுங்கதுக்கா வச்சிருக்க? அதயும் போடு அப்போ தான் ஸ்கூட்டரு நல்ல ஓடும்"னு சொல்லிருக்கான்.

அப்புறம் தான் முல்லா எல்லா கியரயும் போட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்சான். அதுல இருந்து முல்லாவோட வண்டி பேரு குதிரன்னனு ஆகிப் போச்சு. முல்லா முதல்ல ரெண்டு தெருக்குள்ள அவன் குதிரயில சுத்திட்டு இருந்தான், அப்புறம் கொஞ்சம் தைரியம் வந்து திருநெல்வேலி சங்சன் வர போக அரம்பிச்சுட்டான்.

முல்லா அடுத்த வாரம் வருவான்.....