Monday, November 26, 2007

காதலாகிக் கசிந்து - 6

அது ஒரு சனிக்கெழம. அதனால டியூசன் கொஞ்சம் லேட்டாத் தான் ஆரம்பிக்கும். செல்லப்பாவும், சிவாவும் 7 மணி வாக்குல அப்துல் காதர் சார் வீட்டுக்கு போனாங்க. இவனுக ரெண்டு பேரும் போய் தான் வாத்தியார எழுப்பினானுக. ரெண்டு பேரயும் உக்காரச் சொல்லிட்டு வாத்தியார் பல் தேய்க்க போய்ட்டாரு. ரெண்டு நிமிசத்துல சாருவும், காயத்ரியும் உள்ள வரவும் பயக்க ரெண்டு பேரும் தெம்பா நிமிர்ந்து உக்காந்தானுக. சிவாவுக்கு ஒரு இனம் புரியாத சந்தோசம் வந்தது.

சாரு அடர் ஊதாவும், வெள்ளையும் கலந்த ஒரு சுரிதார் போட்டிருந்தா. வெள்ளைக் கல் வச்ச சிறிய தொங்கட்டான் நான் சாருவோட காதுலயாக்கும் இருக்கேன்னு பெருமையா ஆடிட்டு இருந்தது. எப்பவும் போல இன்னைக்கும் தல கொள்ளாம மல்லியப் பூ வச்சிருந்தா. காலங்காத்தால இவ்வளவு மல்லிகை இவளுக்கு எங்க கெடச்சிருக்கும்னு செல்லப்பா மெல்ல சிவாவை காதக் கடிச்சான்.

காயத்ரியும் செல்லப்பாவும் மெதுவா பேச ஆரம்பிக்க, மெல்லிய புன்முறுவலோட அத சாரு பாத்துட்டு இருந்தா. செல்லப்பா, சாரு, காயத்ரி மூனு பேரும் இதுக்கு முன்னால ஹிந்தி டியூசன்ல ஒன்னா படிச்சிருக்கதால அவங்களுக்கு அறிமுகம் தேவைப் படல. சிவாவுக்கு அவங்களப் பத்தி முன்னால தெரியாததால அவங்க உரையாடல்ல ஆர்வம் காட்டாதவன் மாதிரி வேதியல் பொஸ்தத்த புரட்டுற மாதிரி பாவலா பண்ணிட்டு இருந்தான். பள்ளிக்கூடத்த பத்தி, வரப் போற பொதுத் தேர்வ பத்தியெல்லாம் செல்லப்பாவும் காயத்ரியும் கத விட்டுட்டு இருந்தாங்க.

கொஞ்ச நேரத்துல வாத்தியார் வரவும் எல்லாரும் அமைதியானாங்க. வாத்தியார் IUPAC வரிசை நிலைகளப் பத்தி வெளக்கினாரு. வாத்தியார் வீட்டுல தனியா கரும்பலகை இல்லாததால ஒவ்வொருத்தர்கிட்டயும் நோட்ட வாங்கி அதுல சமன்பாட எழுதி எல்லாருக்கும் வெளங்க வைப்பாரு. சிவாவும் செல்லப்பாவும் வைச்சிருந்த நோட்டு, போன வருசம் டி.வி.எஸ் கம்பெணில கொடுத்த மாசக் காலண்டர மடக்கித் தைச்சது. இந்த மாதிரி மாசக் காலண்டர்கள்ல பின்பக்கம் நல்ல காகிதத்துல எழுதறதுக்கு வசதியா இருக்கும். இருவது, முப்பது ரூபா கொடுத்து நீள நோட்டுக்கள வாங்காம காலண்டரையே நோட்டா மாத்தியிருந்த செல்லப்பா, சிவாவின் எளிமை சாருவோட மனசுல அவங்களப்பத்தி ஒரு நல்ல அபிப்பிராயத்த உண்டு பண்ணுச்சு.

மறுபடியும் வாத்தியார் இவங்க எல்லாத்தயும் பொஸ்தகத்துல ஒரு பக்கத்த வாசிக்கச் சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனாரு. கொஞ்ச நேரம் வாசிச்சிட்டு காயத்ரியும், செல்லப்பாவும் திரும்பவும் பேச ஆரம்பிச்சாங்க. காயத்ரி அவங்க பள்ளிக்கூடத்துல இருந்து இன்னும் ரெண்டு பிள்ளைகளும், ஒரு பையனும் அடுத்த வாரத்துல இருந்து அப்துல்காதர் சார் கிட்ட டியூசனுக்கு வரப் போறதா சொன்னா. உடனே செல்லப்பா "அடுத்த வாரம் எப்ப வரும்னு ஆசையா காத்துகிட்டு இருக்கேன்னு" சொல்லவும் சிவா அவனப் பாத்து ஒரு முற முறைச்சான்.

உடனே காயத்திரி சிவாவப் பாத்து, "உன் பிரண்ட் ரொம்ப அமைதி போல... பேரு என்ன?" அப்படின்னு கேட்டா. செல்லப்பா, "அவம்பேரு சிவா"ன்னு சொல்லவும் அது வர பொஸ்தத்த வாசிச்சிட்டு இருந்த சாரு ஆவலோடயும் வெக்கத்தோடயும் ரொம்ப ரகசியமான குரல்ல காயத்ரி கிட்ட "என்ன பேராம்"ன்னு கேக்கவும் சிவாவுக்கு வார்த்தையால விவரிக்க முடியாத ஒரு பரவசம் மனசுக்குல பரவுச்சு... அடுத்த நொடி ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ஊடுருவிப் பாத்துக்கிட்டாங்க. அந்த கனத்தை இன்னும் ரம்மியமாக்குற மாதிரி சாருவோட தலையில இருந்த மல்லிகை அந்த அறை முழுக்க வாசணை பரப்புச்சு..