Monday, May 29, 2006

ரொட்டி, சால்னா...

நம்ம ஊர்க்காரப் பயக்கலுக்கெல்லாம் நான் எதச் சொல்லுதேன்னு தெரிஞ்சிருக்கும். தெரியாத வெளியூர் ஆளுகளுக்கு பரோட்டான்னா தெரிஞ்சுடும். நல்ல ரொட்டி தின்னு எவ்ளோ நாளாச்சு. ரொட்டி தின்னே வளந்த உடம்புவே இதெல்லாம்...

புரோட்டா, ரொட்டின்னு நம்ம ஊருப்பக்கம் சொல்லுவாவ.. இந்த ரொட்டி கன்யாகுமரில இருந்து மதுர வரைக்கும் தான்யா டேஸ்ட்டு, மதுரய தாண்டிட்டா வேஸ்ட்டு. கேரளாக்காரனுவ, சிலோன்காரப் பயலுவ எல்லாம் போடுதது பரோட்டா... தண்டி, தண்டியா அவனுக போடுத எருக்கட்டி பரோட்டா தான் மதுரக்கு வடக்க உள்ளவங்களுக்கு தெரியும். நம்ம ஊரு ரொட்டி சின்னதா, மொருமொருப்பா, மெதுவா வாயில போட்டா கரஞ்சு போயிரும்.

அதே மாரி நம்ம ஊரு சால்னா கிட்ட குருமாவாவது எருமாவாவது.. நிக்க முடியாதுல்ல.. மெட்ராசுல அத சேர்வைனு வேற சொல்லிக்கிடுவானுவ. ஒரேத் தண்ணியா இருக்கும். நம்ம ஊரு சால்னால அப்டியே நெய் மெதக்குமய்யா..

அத சாப்டுததுலயும் நம்ம பயக்க ரசனயோட சாப்டுவானுவ. ரொட்டிய சின்ன சின்னத் துண்டா பிச்சு போட்டு அதுக்கு மேல சால்னாவ கோரிக் கோரி ஊத்தி, வெங்காயத்த கூடச் சேத்து அப்டியே வாயில போட்டா.. ஆஹா அதுக்கு ஈடு இணை கிடயாது.

தொட்டுகிடதுக்கு சைவ ஆளுகன்னா ஆம்ப்லேட், ஆப்பாயில், அசைவ ஆளுகன்னா வருவல், கோழிக் கறின்னு எத்தன தடவ தின்னாலும் ரொட்டி சால்னா அலுக்கவே செய்யாது. அதுவும் மட்டன் வருவல் நம்ம ஊருல மட்டும் தான் கெடக்குமுன்னு கேள்விப் பட்டிருக்கேன்.

திருநெவேலில நெறய கடைகள்ல சைவச் சால்னான்னு தனியா வச்சிருப்பானுவ. அதனால முட்ட கூட தொடாத ஆளுக கூட, ரொட்டி சால்னாவ விரும்பிச் சாப்பிடுவாவ. வீட்டுக்கு விருந்தாள் வந்தா கேக்கவே வேண்டாம். ரொட்டி வாங்கிக் கொடுத்து உபசாரம் பண்ணாம திருப்பி அணுப்ப மாட்டாவ...

ரொட்டி சாப்புட பெரிய ஓட்டலுக்கு போவக் கூடாது. அவனுக பரோட்டான்னு எருக்கட்டியப் பெருசா போடுவானுவ.. சால்னாவும் மண்ணு மாரி இருக்கும். ரொட்டிக்கின்னே தனியா உள்ள புரோட்டா(பரோட்டா இல்ல) ஸ்டால்ல போய் சாப்புடனும். புரோட்டா மாஸ்டர் அடிச்சு, வீசி ரொட்டி போடுதத பாத்துகிட்டே இருக்கலாம். ரொட்டி, ஆம்ப்லேட் கல்லுல வேகுதப்ப வார வாசம், கொத்து புரோட்டா போடுதப்ப கல்லுல இருந்து வார சத்தம் இதெல்லாமே கடைக்குள்ள தன்னால இழுத்துட்டுப் போயிரும்.

திருநெவேலில டவுன்ல வைர மாளிக, சங்சன்ல பிரபு ஓட்டல், பாளயங்கோட்டயில செட்டிநாடு, ருசி, குற்றாலத்துல செங்கோட்ட பார்டர்ல உள்ள கடைக, பணகுடி டயானா, பொன்னாக்குடி டிரைவ் இன் புரோட்டா கடை இங்கெல்லாம் ஒரு தடவ சாப்டுப் பாருங்க அப்புறம் சொல்லுவிய...

பொரிச்ச புரோட்டா, வீச்சு புரோட்டா, கொத்து புரோட்டானு எத்தன விதமா சாப்ட்டாலும் அலுக்கவே செய்யாது. ரொட்டி நம்ம தமிழனோட பாரம்பரிய உணவு கெடயாது, ஆனா எப்பிடி நம்ம ஊருக்குள்ள வந்தது, எப்பிடி இவ்ளவு பிரபலமாச்சுங்கது தான் ஆச்சரியமா இருக்கு.....

Thursday, May 25, 2006

டயட்டிங்

ஆபிசுல மத்யானம் நிறைய பேரு கூட்டமா கெளம்பி பக்கத்துல இருக்குற பழக்கட முன்னாடி வரிசையா நிக்குதுக. என்னான்னு போயி பாத்தா "fruit bowl" அப்டின்னுட்டு ஒரு சின்ன சட்டி நெறய எல்லா பழத்தயும் போட்டுக் குடுக்கான். அத எல்லா பயவிள்ளேளும் டயட்டிங்னு சொல்லி வாங்கித் திங்குதுக. காலேலயும், ராத்திரியும் நல்லா மூக்கு புடிக்க தின்னு போட்டு, மத்யானம் மட்டும் என்னத்துக்கு இந்த டயட்டிங்கோ தெரில.

நம்ம ஆளு ஒருத்தருக்கு விபரீத ஆசை வந்து 2 மணிக்கு அந்த "fruit bowl" வாங்கி தின்னுட்டு, மூனு மணிக்கு பசி தாங்க முடியாம, பச்சியக் கொண்டா, போண்டாவக் கொண்டானு தட்டழிஞ்சுட்டு வந்தாரு. கேண்ட்டீன்ல உள்ள ஐட்டத்துல பேர்பாதி உள்ள போனதும் தான் அடங்குனாரு.

இது இப்படின்னா, மத்யானம் சாப்பாடு கொண்டு வார கூட்டம் அதுக்கு மேல. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல ஒரு மாமி இருக்கு, அது ஒரு பெரிய சாக்குப் பைய தூக்கி கிட்டு மல்லேஸ்வரி கணக்கா வரும். அந்தம்மா தூரத்தில வரும்போதே நம்மூரு குசும்பனுக, ஏல சோத்து மூட்ட வருது பாருலன்னு கத்துவானுக. தட்ட, சீட, எள்ளுருண்ட, கடல முட்டாய் இதெல்லாம் அப்பப்போ கொரிக்கதுக்கு, ரெண்டு குழம்பு, ஒரு கூட்டு, ஒரு பொரியல், தயிர், மோர்னு எல்லா ஐட்டமும் தனித் தனிச் சட்டில இருக்கும். யாரயும் துணைக்குக் கூப்பிடாம, தானே தனியாளா கடபரத்தி எல்லாத்தயும் ஒரு வெட்டு வெட்டும்.

காலேல ஆபிசுக்கு வாரதே 11 மணிக்குத் தான். பிறகு தட்ட, சீட எல்லாத்தயும் ஒவ்வொன்னா அரைக்கதுக்குள்ள மத்யானம் வந்துரும். அப்புறம் சோத்த தின்னு போட்டு திரும்ப 2.30 மணில இருந்து மோர குடிக்கேன், சாரக் குடிக்கேன்னு 5 மணி வர ஓட்டிட்டு, சரியா 5 மணியானதும் ஸ்நாக்ஸ் திங்கப் போரேன்னு கெளம்பிடும். எல்லாம் சரி அந்த மாமி எப்போ தான் வேல பாக்கும்னு கேப்பீகளே... "வயுத்துக்கு உணவு இல்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்படும்"னு அப்பப்போ மாமி மெயில் பாக்கது, பாட்டு கேக்கதுன்னு ஓட்டிடும்.

சாய்ங்காலம் 5 மணிக்கு ஸ்நாக்ஸ் தின்னுட்டு, 5.30 மணிக்கு, அவுக வீட்டு மாமா வந்ததும்(அவருகிட்டயும் ஒரு சோத்து மூட்ட இருக்கும்), "இன்றைய பொழுது இனிதே கழிந்ததுன்னு" கெளம்பிப் போயிடும்.

Tuesday, May 23, 2006

முல்லா குல்லா... பாகம் 2

முல்லா இருந்த ஊருல ரெண்டு பள்ளியூடம் தான் உண்டு. ஒன்னு கவருமெண்டு பள்ளியூடம், இன்னொன்னு தனியார் பள்ளியூடம். தமிழ்நாட்டுல பாவாடை, தாவணி யூனிபாரம் போட்ட பிள்ளேள் உள்ள பள்ளியூடங்கள்ள தாழையூத்து கவருமெண்டு பள்ளியூடமும் ஒன்னு. இக்கரைக்கு அக்கரை பச்சைங்கிற மாதிரி தாவணி போட்ட பிள்ளேள பாக்க தனியார் பள்ளியூட பயலுவ அலயுவானுவ, சுடிதாரு போட்ட தனியார் பள்ளியூட பிள்ளேள பாக்க கவருமெண்டு பள்ளியூட பயலுவ அலயுவானுவ. நம்ம முல்லா ஏழாப்பு வரை தனியார் பள்ளியூடத்துல சுடிதார பாத்து போட்டு, எட்டாப்புக்கு தாவணி பாக்க கவருமெண்டு பள்ளியூடத்துக்கு வந்து சேந்தான். கவருமெண்டு பள்ளியூடம் வந்தாலும் பய தனியார் பள்ளியூடத்த மறக்காம, அங்க உள்ள ஒரு பிள்ளைய லவ்விட்டு இருந்தான்.

தனியார் பள்ளியூடத்துல எலுகேஜில இருந்தே பேண்ட்டு தான் பயக்கலுக்கு யூனிபாரம். கவருமெண்டு பள்ளியூடத்தில பத்தாங் கிளாஸ் வரை டவுசர் தான். முல்லாக்கு டவுசர் போட புடிக்கலன்னாலும் வேற வழியில்லாம போட்டுட்டு வருவான். பள்ளியூடத்துக்கு வெளில தன்ன பெரிய பயன்னு காட்ட டவுசருக்கு மேல பேண்ட்டு போட்டுட்டு வருவான் முல்லா. பள்ளியூடத்து வாசல்ல பேண்ட்ட களஞ்சு மடிச்சு பைல வச்சு கொண்டு போவான். திரும்ப சாய்ங்காலம் வீட்டுக்கு போம்போது பேண்ட்ட மாட்டிட்டு தான் கெளம்புவான். ஆனா அதுக்கும் வேட்டு வச்சா "ஆவி"ங்கிற வாத்திச்சி.

ஆவி டீச்சர் அந்த கவருமெண்டு பள்ளியூடத்தில இங்கிலீசு பாடம் நடத்துவா. வயசு அம்பத்தி நாலு. ஆவி டீச்சரோட உண்மையான பேரு ஆங்காரி விசாலம். அத சுருக்கி எல்லாரும் ஆவி, ஆவின்னு கூப்பிடுவாவ. ஆவிக்கு இன்னும் கல்யாணம் ஆவல. இருபது வருசத்துக்கு முன்னாடி கூட வேல பாத்த வாத்தியார் ஆரிய நாராயணனோட காதல் வந்து கல்யாணம் பண்ணிக்கிடலாம்னு நினைக்கும் போது, வாத்தியாரோட பொண்டாட்டி "பெரிய குந்தானி" வந்து பள்ளியூடத்தில சாமியாடிட்டா. வாய்க்கு வந்த கெட்ட வார்த்தெயெல்லாம் சொல்லி ஆவிய "இனிமேல் இந்த கெழட்டு பயலோட சுத்தினேன்னா, உன் கொண்டயில தீ வச்சு போடுவென்"னு சொல்லிட்டு போய்ட்டா. அதுல இருந்து ஆவி டீச்சருக்கு ஆம்பிளேள் மேல ஒரு வெறுப்பு. கல்யாணமே பண்ணிக்கிடாம இன்னிய வரைக்கும் காலத்த ஓட்டிட்டா.

நம்ம முல்லா ஒரு நா இந்த ஆவி டீச்சர் வரும் போது பாத்து பேண்ட்ட களத்திட்டான். அவ்வளவு தான் ஆவி கத்தி கூப்பாடு போட்டு இந்தப் பய என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினான்னு எல்லார்ட்டயும் சொல்ல ஆரம்பிச்சுட்டா. உடனே எட்மாஸ்டர் பிரெம்ப எடுத்து முல்லாட்ட "செவத்த பாத்து திரும்பி நில்லுல"னு சொல்லி புளிச், புளிச்னு பிட்டில நாலு வச்சாரு. அது பத்தாதுன்னுட்டு பியூன் முனியன விட்டு காப்படி வெளக்கெண்ணெய அவன் எண்ணெயில்லாத தலயில தேய்க்கச் சொன்னாரு.

அன்னைலருந்து முல்லா எதக் கழட்டினாலும், ரொம்ப யோசிச்சு தான் களட்டுதான்.

முல்லா அடுத்த வாரம் வருவான்......

Monday, May 22, 2006

நெல்லைக் கிறுக்கன்

நான் இன்னைலருந்து தமிழ்ல எழுதப் போறேன். போன வெள்ளிக் கெழம பெங்களூர்ல இருந்து சென்னைக்கு ஒரு volvo பஸ்ல வந்தேன். மொத்தம் அந்த ப்ஸ்ல என்னயும் சேத்து 4 பேரு தான்.

அந்த பஸ்ல வந்த ஒரு வயசான மாமி ஹைவே மோட்டல்ல பிஸ்கட்டு வில கேட்டு அதிர்ச்சியாகி, கடக்காரன போலீஸ்ல கம்பெளய்ண்டு கொடுத்துடுவேன்னு சொல்ல, அதுக்கு அந்த எமப் பய, போலீஸ் இல்ல மிலிட்டரில வேனாலும் போய் சொல்லு ஆயான்னு நக்கலா சொன்னான். பாவம் மாமி ரொம்ப நாள் கழிச்சு வீட்ட விட்டு வெளிய வருதுன்னு நினைக்கேன், அதான் வெவரம் தெரியாம பேசுது.

பஸ்ல வந்தும் மாமி விடல டிவில படம் போடச் சொல்லி ஒரே ரகள. டிரைவர் ஒரு ஹிந்தி படம் போட்டாரு. DDல 15 வருசத்துக்கு முன்னாடி ஹிந்தி படம் பாத்தது, அதுக்கப்புறம் இப்ப தான் பாக்குதேன். வடக்க நிறைய படத்துல ரெண்டு மூனு ஹீரோ ஒன்னா நடிக்கானுவ, ஆனா நம்ம பயலுவ ஒரு படத்துல நடிச்ச உடனே பங்காளி சண்ட போட அரம்பிச்சிடுதானுவ.

ஸ்ரீபெரும்புதூர் வழியா வரும் போது ரெண்டு விசயம் என் கண்ணுல பட்டுது. ஒன்னு நம்ம ராஜீவ் காந்தி இறந்த இடம். அந்த வழியா பஸ் போகுதப்ப மனசு கனமா இருந்த்தது. நாம இன்னைக்கு இந்த அளவு IT, Technologyல வளந்திருக்கோம்னா அதுக்கு அவரு அன்னைக்கு போட்ட அஸ்திவாரம் தான் காரணம். மனுசன் இப்ப இருந்திருந்தா இன்னும் நாம வளந்திருப்போம். நமக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான். அவரு இறந்த இடம் இப்ப அமைதியா இருக்கு. ராஜீவோட எத்தனை கனவுகள் அந்த மண்ணோட போச்சோ......

ரெண்டாவதா நான் பாத்தது Nokia, Saint Gobain, Hyundaiனு வரிசயா அந்த ரோட்டில உள்ள தொழிற்சாலைகள். புது அரசாங்கம் இன்னும் நிறய தொழிற்சாலைகள சென்னைக்கு கொண்டு வரும்னு நம்புவோம்.

முல்லா, குல்லா கதய படிச்சுட்டு நம்ம பயலுவ நிறய பேரு போன் பண்ணி பேசினானுவ. முல்லாவ பத்தி நானும் நிறய மேட்டரு வச்சிருக்கேன், அதயும் எழுதுன்னு சொன்னானுவ. இதுல இருந்து எல்லாரும் முல்லா மேல ரொம்பபபபபபபபப பாசமா இருக்கானுவன்னு புரிஞ்சிக்கிட்டேன்.

Wednesday, May 17, 2006

முல்லா குல்லா......... பாகம் 1

முல்லா அப்படிங்கிற பேரப் பாத்ததும் ஏதோ சரித்திர கத சொல்லுதேன்னு நினைக்காதிய. முல்லா என் கூட படிச்ச ஒரு உத்தம புத்திரன். அவன் இப்போ எங்க என்ன பண்ணிட்டு இருக்கானோ தெரியல. நம்ம பயலுவ எல்லாம் அவன வல வீசி தேடிட்டு இருக்கானுவ. பய கையில சிக்க மாட்டக்கான்.

முல்லாவோட அங்க அடயாளம்:

உயரம்: 5 அடி
எட: 74 கிலோ
நெறம்: மஞ்சக் காமாள வந்தவன் மாதிரி மஞ்சள்
ஊரு: திருநெல்வேலி பக்கத்துல

முல்லாப் பயல் நடந்து வந்தான்னா அழுற சின்னப் பிள்ளேள் கூட அழுதத நிறுத்திட்டு மிரண்டு போய் பாக்கும், அப்படி ஒரு ராஜ நட...

அவனோட வாகணம் ஒரு 1972-ம் வருசத்து Lamby ஸ்கூட்டரு. அவங்க அய்யா அத எங்கியோ கொண்டி போட்டு வாங்கிக் கொடுத்தாரு. அந்த ஸ்கூட்டர ஒரு மூனு மாசமா முல்லா 1st கியர்லயே ஓட்டினான். வேற யாரு கிட்டயும் கேக்காம அவனாவே ஸ்கூட்டரு ஓட்ட ஆரம்பிச்சதால அந்த 1st கியர் எபெக்ட். ஸ்கூட்டருல இன்னும் மூனு கியர் இருக்கு, அதயும் உபயோகப் படுத்தனும்னு யாரும் அவனுக்கு சொல்லல அவனும் யார்கிட்டயும் கேக்கல. பொதுவாவே முல்லா தான் நினைக்கிறது தான் சரின்னு நினைப்பான் அதனால யார்ட்டயும் யோசன கேக்க மாட்டான்.

இப்படி 1st கியர்லயே போய் நெறய பெட்ரோல் செலவு ஆவுதுன்னு அவங்க அய்யா, "இனிமேல் ஸ்கூட்டர தொட்டீன்னா கைய ஒடிச்சு அடுப்புல வச்சி போடுவேன்னு" சொல்லிட்டாரு. அதனால முல்லா கொஞ்ச நாள் சோகமாத் திரிஞ்சான். அப்புறம் அவனோட சேக்காளி(நண்பன்) மகுடி மஸ்தான்(மஸ்தானப் பத்தி தனிக் கதை நெல்லைக் கிறுக்கன்ல வரும்) கிட்ட அவன் பிரச்சனைய சொல்லிருக்கான். அதுக்கு மஸ்தான் " எலெ கூமுட்டக் கூனா வண்டில மத்த கியரெல்லாம் மயிரப் புடுங்கதுக்கா வச்சிருக்க? அதயும் போடு அப்போ தான் ஸ்கூட்டரு நல்ல ஓடும்"னு சொல்லிருக்கான்.

அப்புறம் தான் முல்லா எல்லா கியரயும் போட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்சான். அதுல இருந்து முல்லாவோட வண்டி பேரு குதிரன்னனு ஆகிப் போச்சு. முல்லா முதல்ல ரெண்டு தெருக்குள்ள அவன் குதிரயில சுத்திட்டு இருந்தான், அப்புறம் கொஞ்சம் தைரியம் வந்து திருநெல்வேலி சங்சன் வர போக அரம்பிச்சுட்டான்.

முல்லா அடுத்த வாரம் வருவான்.....