Saturday, December 11, 2010

இட்லி - தமிழனின் அடையாளம்...

சமீபத்தில இட்லின்னா என்னன்னு சில சீன நண்பர்களுக்கு விளக்கிட்டு இருந்த போது தான் வைக்கிப்பீடியாவில இட்லி பத்தி பார்க்க நேர்ந்தது. கர்நாடக அன்பர்கள் இட்லியப் பத்தி நிறைய எழுதியிருக்காங்க, ஆனா நம்ம தமிழ் மக்கள் அதிகமா இட்லி பத்தி தகவல் கொடுக்கல. எனக்குத் தெரிஞ்ச இட்லி பத்தின கொஞ்சம் தகவல்களை அதுல சேத்திருக்கேன்.

இட்லி ஒரு 1200 ஆண்டுகளுக்கு முன்னால தான் நம்ம தென்னிந்தியாவுக்கு வந்தது, அது இந்தோனேசியாவில இருந்து வந்திருக்கலாம் என்பது ஆச்சரியமான தகவல். தினமும் ஒரு தடவயாவது இட்லி சாப்பிடாம நம்மவர்கள் நெறய பேரால இருக்க முடியாது.

இட்லின்னதும் உடனே நெனைவுக்கு வார ஊர் மதுர தான். விடிய விடிய இட்லி கெடைக்கிற ஒரே ஊர் இதுதான். ராத்திரி ரெண்டு மணிக்கு மாட்டுத்தாவனி பஸ் ஸ்டாண்டுல, பழங்காநத்தத்துல நெறய தடவ இட்லி சாப்பிட்டிருக்கேன். மதுரை இட்லிக் கடைகள் பெங்களூரு, பாம்பே, டெல்லி மட்டுமில்லாம இப்ப நெறய வெளிநாடுகளுக்கும் பரவ ஆரம்பிச்சிருச்சு. சமீபத்தில சீனத்தின் சாங்காய் மாநகரில் ஒரு மதுரைக் காரரின் இட்லிக் கடையக் கண்டறிந்தேன். மதுரை மாதிரி காஞ்சிபுரம், தஞ்சாவூர் இட்லியும் தனிச் சிறப்பு வாய்ந்தது.

இட்லி உப்புமா தென் தமிழகத்தில் மிகப் பிரபலம், இதையே செட்டிநாடு பகுதில தாளிச்ச இட்லின்னு சொல்லுவாங்க. மீந்து போன இட்லிய உதிர்த்து செய்யற இந்த உப்புமா தாளிச்ச இட்லியோட ருசியே தனி. உதிர்த்த இட்லியத் தாளிக்காம வெறும் மிளகாப்பொடி நல்லெண்ணெய் கலந்து சாப்பிடுதது இன்னொரு வகை.

இட்லி/பொடி: மொளவடி, மொளகாப்பொடி, மிளகாப்பொடின்னு வேற வேற சொல் வழக்கு இருந்தாலும், தமிழ்நாடு தான் இட்லிப் பொடியில் நம்பர் 1. எள்ளு மிளகாப் பொடி, உளுந்து மிளகாப்பொடி, கருவேப்பிலை மிளகாப்பொடி, கடலைப் பருப்பு மிளகாப்பொடின்னு எத்தனை வகை? உரல்ல இடிக்கிற, அம்மியில நுனுக்குகிற மிளகாப்பொடிக்கு சுவை அதிகம். புதுசா இடிச்ச அந்த மிளகாப்பொடி வாசத்துக்கு ஈடு இணை கெடயாது.

சட்னி/துவையல்: தமிழகத்துல கிடைக்கிற அள்வுக்கு சட்னி வகைகள் ஆந்திரா/கர்நாடகா/கேரளாவில் கிடைக்காது. பொரிகடலை/மிளகாய்/தேங்காய் சேத்து அரைக்கிற தேங்காய் சட்னி, அதிலேயே மிளகாய்க்குப் பதில் மிளகாய் வத்தல், இஞ்சி சேத்து அரைக்கிற சட்னி, கொத்தமல்லி சட்னி, கடலைமாவுச் சட்னி, கருவேப்பிலைத் துவையல், தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, பெருங்காயத் துவையல், பூண்டு/தேங்காய்த் துவையல், புதினாத் துவையல், இஞ்சித் துவையல், கத்திரிக்காய்த் துவையல், எள்ளுத் துவையல்ன்னு அந்தப் பட்டியல் நீண்டு கிட்டே போகும்...

சாம்பார்: கர்நாடகத்து இனிப்பு சாம்பார் சாப்ட்டு சாப்ட்டு நொந்து போன நாக்குக்கு, நம்ம ஊரு சாம்பார் தேவாமிர்தம். நிறைய வடநாட்டு நண்பர்கள் சாம்பார்னா அது தமிழ் சாம்பார்தான் அது கிட்ட வேற எதுவும் நெருங்க முடியாதுன்னு என்கிட்ட சொல்லிருக்காங்க. ஆனாலும் கன்னட மக்கள் அந்த இனிப்பு சாம்பார் தான் உசத்தின்னு வாதம் பண்ணுவாங்க.... சிறுபருப்பு/பாசிப்பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சாம்பார், பொரிகடலை அரைத்து விட்ட சாம்பார், கடலை மாவு கலந்த ஒட்டல் சாம்பார்... ஆஹா எத்தனை விதம்?சாம்பாரோட சுவையக் கூட்டறது அதிலப் போடப் படுற, குறுக அரிந்த கத்திரிக்காய், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, முருங்கக்காய், மல்லி இலை மாதிரி சமாச்சாரங்கள் தான்.

கொத்சு மற்றும் இதர தொடுகறிகள்: இட்லிக்கு தொட்டுக்க நெய் மணக்கும் கத்திரிக்கா கொத்சு மாதிரி ஒரு காம்பினேசன் வேற எதுவும் கெடயாது. தக்காளிக் கிச்சடி, பீர்க்கங்காய் கிச்சடி, புளி மிளகாய், வெந்தய மிளகாய், வடைகறி, சுண்ட வச்ச பழய கறி (மருமாத்தம்னு நெல்லை பகுதில சொல்லுவாங்க) தொக்கு வகைகள்ன்னு ஒரு பட்டியல் நீளும். அசைவப் பிரியர்களுக்கு மீன் குழம்பு, கோழிக் குழம்பு, இறால் தொக்கு நல்ல சாய்ஸ்.

இட்லியை ஆவியில் வேக வைக்கிறதால இட்லி அவித்தல் என்பது தான் சரியான சொல் வழக்கு. சிலர் இட்லி சுடுவது அப்படின்னு சொல்லுவாங்க, அது தவறு. தோசையைத் தான் சுடுவோம், இட்லியை அவிப்போம். இட்லி அவிக்கிறதுக்கு இப்போ, குக்கர், மைக்ரோவேவ் இட்லி தட்டுன்னு நிறைய வந்துட்டாலும், இட்லி கொப்பரைல (இட்லி சட்டி) துணி போட்டு அவிக்குற இட்லிக்கு ஒரு தனி மணம்/சுவை உண்டு.

கல்யாண வீட்டு இட்லி ஒரு தனி ரகம். முன்னாடி எல்லாம் பெரிய இட்லி கொப்பரைல பெரிய பெரிய இட்லிகள அவிச்சு, ஆவி பறக்கும் சாம்பாரோட பரிமாறுவாங்க. அந்த இட்லிகள பாத்தி கட்டி சாப்பிடுறதுக்கே ஒரு கூட்டம் வரும். இப்ப கல்யாண சமையல் எல்லாம் கேட்டரிங் ஆளுங்க கிட்டு நவீன மயமாகிட்டு வாரதால அந்த மாதிரி பெரிய இட்லிகள் கெடைக்கிறது இல்ல.

என்ன தான் பெரிய ஓட்டல்கள்ல போய் இட்லி சாப்பிட்டாலும் கையேந்தி பவன்ல சுடச் சுட சட்டியில் இருந்து எடுத்து அப்படியே உள்ள தள்ளுறது மாதிரி வருமா?

இந்தப் பதிவைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்குத் தெரிந்த இட்லி பத்தின சிறப்புகள், பெருமைகள வைக்கிபீடியாவுல எழுதுங்க, இட்லி பத்தின புகைப்படங்களையும் வைக்கி தளத்தில் சேருங்க.

Saturday, February 06, 2010

இவர்களுக்கும் ஒரு கனவு இருந்திருக்கும்...

அன்மையில் பெங்களூரிலிருந்து நெல்லை செல்லும்போது, வழியில் சாப்பிடுவதற்கு நல்ல ஒரு சாலையோர கையேந்தி பவனைத் தேடிக் கடைசியில் திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் ஒரு கடையைக் கண்டு பிடித்தோம். சாலையேரத்தில் சின்னதாகக் கூரை வேயப்பட்டு இரண்டு பேர் மட்டுமே அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு இளைஞன் தோசைக்கல்லில் தோசையும், ரொட்டியும் போட்டுக் கொண்டிருந்தான். ஒரு வயதானவர் எல்லாருக்கும் பறிமாறிக் கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி, காக்கி சட்டை, கலைந்த தலை ஒட்டிய கண்ணங்கள் என காலம் அவரை அலைக்கழித்திருந்தது. எல்லாருக்கும் ஓடி ஒடிச் சென்று பரிமாறினார். அதில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. சாப்பிட்டு முடித்ததும் நானும், எனது மைத்துனரும் அவருக்கு தலா பத்து ரூபாய் கொடுத்தோம். மிகவும் சந்தோசத்துடன் அதை வாங்கி பக்கத்தில் இருந்த கடையில் போய் பீடி வாங்கி பற்ற வைத்துக் கொண்டார். அவருக்கு மாத சம்பளம் சாப்பாட்டோடு சேர்த்து 500 ரூபாயாக இருக்கலாம். நகரத்தாருக்கு ஒரு வேளை ஒரு பெரிய உணவகத்தில் சாப்பிட ஆகும் செலவு... தினமும் எங்களைப் போல யாராவது சேவைப் படி குடுப்பார்களா? அவருக்கென ஒரு குடும்பம் இருக்குமா? இந்த தள்ளாத வயதில் அவர் வேலை செய்ய அவரைத் தள்ளிய சூழல் எது??????

திருநெல்வேலி பதிவுத்துறை அலுவலகத்துக்கு ஒரு வேலை நிமித்தம் சென்றிருந்தேன். சொத்தைப் பதிவு செய்ய, பாகப்பிரிவினை செய்ய, திருமணப் பதிவு செய்ய எனக் கூட்டமாய் மக்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். நிதி நிலையில் பின் தங்கிய அரசு அலுவலர்கள் தங்கள் பதவியின் தரத்துக்கேற்ப மக்களிடம் அவர்கள் இரத்தம் வேர்வை சிந்தி உழைத்த சிவப்பு பணத்தை ஒரு கையெழுத்துக்காக யாசித்துக் கொண்டிருந்தனர். இரண்டு புதுக் கார்களில் வந்து இறங்கிய மென்பொருள் இளவட்டங்கள், டென்வரில் சம்மர், ஆட்டம் விண்ட்டர் எப்படி இருக்கும் என பெருமையடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் ஒரு ஐம்பது வயது அம்மா பெரிய பையைத் தூக்கிக் கொண்டு எங்களிடம் வந்தார். பை நிறைய சீடை, முறுக்கு, காரச்சேவு அடுக்கி இருந்தது. "நல்லாருக்கும்யா, வீட்ல செஞ்சது ஒரு பாக்கெட்டாவது வாங்கிக்கோங்களேன்" என்றாள். எனது உடனிருந்தவர் "போய்ட்டு அப்புறமா வாங்கம்மா, நாங்களே காலையில் இருந்து காத்துக் கிடக்கோம்" என்றார். உடனே அந்த பெண்மனி எங்கள் அருகில் இருந்தவர்களிடம் சென்று விட்டாள். ஒரு திருமணப் பதிவு செய்ய மூன்று மணி நேரமும், ரூபாய் 700ம் ஆனது (பதிவுக்கு வெறும் 120 ரூபாய் தான்). மீண்டும் கிளம்புகையில் அதே பெண் எங்களிடம் வந்து ஏதாவது வாங்குமாறு கேட்டாள். ஒரு கையெழுதுக்காக 550 கொடுக்கும் போது இந்த பெண்ணிடம் ஒரு 50 ரூபாய்க்காவது வாங்க வேண்டும் என்று தோன்றியது. எங்களிடம் விற்று விட்டு அந்த "டென்வர்" பார்ட்டியிடம் அந்த அம்மா சென்றார். "இதெல்லாம் ஒன்னும் வேண்டாம் எடத்தக் காலி பண்ணும்மா" என்னும் பதில் வந்தது. அதை சட்டை செய்யாமல் எப்படியாவது அவர்களிடம் ஒரு பாக்கெட்டாவது விற்பதற்கு அந்த அம்மா முயற்சி செய்து கொண்டிருந்தாள்...

தமிழக அரசு தொலைக்காட்சி பெட்டி, சமையல் எரிவாயு, மளிகைச் சாமான்கள் என எல்லாம் இலவசமாகக் கொடுத்து வரும் காலத்திலும் தங்கள் உடல் உழைப்பையே நம்பி இருக்கும் இவர்களைப் போன்றவர்களை என்ன சொல்வது... இவர்களுக்கும் ஒரு கனவு, ஒரு நம்பிக்கை என்றோ இருந்திருக்கும். காலமும் வாழ்க்கையும் நடத்திய சுழற்சி விளையாட்டில் சிக்கி அந்தக் கனவுகள் காணாமல் போயிருக்கும், அன்றாட வாழ்க்கையை பட்டினியின்றி கொண்டு போவதே ஒரு பெருங்கனவாய் ஆகிவிட்ட இவர்களுக்கு.