Wednesday, December 27, 2006

காதலாகிக் கசிந்து - 3

அப்துல்காதர் சார் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் ஒரு பெரிய தார்சா(வராண்டா) இருந்தது. அந்த தார்சாவோட நடுவுல ஒரு மேசை இருந்தது. அந்த மேசைக்கு ஒரு பக்கம் சார் உக்காந்திருந்தாரு. அவருக்கு எதுக்க ரெண்டு பிள்ளேள் உக்கார்ந்த்திருந்தது. அறை முழுசும் மல்லிகைப்பூ வாசம் நெறஞ்சு இருந்தது. சுவத்துல, குரான் வரிகள் பிரேம் பண்ணி போட்டு இருந்தது. அதுக்கு பக்கத்துல கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் பண்ணின கீதாசாரம். உள்ளே நுழைந்த சிவாவயும் செல்லப்பாவயும் பாத்து புண்ணகைத்த அப்துல் காதர் "வாங்கப்பா வந்து உக்காருங்க" என்றார். உடனே அந்த ரெண்டு பெண்களும் திரும்பிப் பார்த்தனர்.

அந்த ரெண்டு பிள்ளைகளும் செல்லப்பாவைப் பாத்து புருவத்த உயர்த்த, பதிலுக்கு செல்லப்பாவின் கண்ணும் ஆச்சரியத்துல விரிஞ்சுது. உடனே சிவா செல்லப்பாவுக்கு அந்த பிள்ளேல ஏற்கனவே தெரியும் என்பதனை
யூகித்தான். அந்த பிள்ளைகள்ல ஒருத்தி பள்ளியூட யூனிபார்ம் போட்டிருந்தா, இன்னொருத்தி கத்திரிப்பூக் கலருல சுடிதார் போட்டிருந்தா. யூனிபார்ம் போட்ட பொண்ணு வாயாடின்னு அஞ்சு நொடியில சிவாவுக்கு புரிஞ்சு போச்சு.

அந்தக் கத்திரிப்பூ சுடிதார் பொண்ணு தான் தலை கொள்ளாம மல்லிகப்பூ வச்சு அந்த அறை முழுக்க வாசத்தப் பரப்பிக்கிட்டு இருந்தா. நெற்றியில் ஒரு பெரிய ஸ்டிகர் பொட்டு, அதுக்கு கீழ ஒரு குட்டி கருப்பு பொட்டு, அதுக்கு கீழ மெல்லிய திருநீற்றுக் கீற்று. காதில் கல் வைத்த சிறிய தோடு. கூர் நாசி, குறுகுறுக்கும் கண்ணுகளோட அமைதியா உக்காந்திருந்தா. காதோரமா இருந்த கொஞ்சம் முடி மார்கழிக் காத்துல அலைபாய்ந்தது. அந்த ரூமுக்கு வெளிச்சம் கொடுக்கதுக்கு அவளோட முகத்துக்கும், மின்வெளக்குக்கும் சண்டை நடந்தது.

உள்ளே வந்து உக்காந்ததும் செல்லப்பா சிவாகிட்ட, "ஒரு நூறு வயலின சேந்தாப்புல வாசிச்ச மாதிரி ஒரு எபெக்ட் எனக்குத் தெரியுது, உனக்கு எப்படின்னு" ரகசியமகேட்டான். உடனே சிவா "சும்மா இருல" அப்படின்னு அதட்டினான்.அப்துல்காதர் சார் அன்று கரிம வேதியல்(organic chemistry) பற்றி பாடம் நடத்த ஆரம்பித்தார். வகைப்படுத்தப்பட்ட IUPAC பெயர்கள், கரிம(Carbon, கார்பன்) அணுக்கள் மற்றும் கரிம சேர்மங்கள் இதப் பத்தியெல்லாம் விளக்கினார். பழைய வாத்தியார் முத்துசாமிய விட அப்துல்காதர் சொல்லிக் கொடுக்குதது சிவா, செல்லப்பா ரெண்டு பயக்களுக்கும் ரொம்ப நல்லா வெளங்குச்சு. வேதியலப் பத்தி ஒன்னுமே தெரியாத பயபுள்ளைக்கே சார் சொல்லிக் கொடுக்குதது வெளங்குமுன்னா கற்பூர புத்தி உள்ள இந்த ரெண்டு பயக்களுக்கு கேக்கவே வேண்டாம்.

பாடம் முடிஞ்சதும் "என்னப்பா சொல்லிக் கொடுத்தது எல்லாம் வெளங்குச்சா? புரியலயின்னா கூச்சப் படாமக் கேளுங்க" அப்டின்னு சார் சொல்லவும், புண்ணகையோட தலையாட்டின சிவா அப்பிடியே அந்த கத்திரிப்பூக் கலர் சுடிதாரப் பாக்க, அந்தப் பொண்ணும் சிவாவப் பாத்துச்சு. இது வரைக்கும் எந்தப் பிள்ளையயும் நேருக்கு நேர் பாத்துராத சிவாவுக்கு ஒரு கனம் இதயத்துடிப்பு நின்னு திரும்ப வந்தது. அதுக்கப்புறம் கை கால் எல்லாம் லேசாக நடுங்கியது, இதயம் வேகமா துடிக்க ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் திரும்பவும் சகஜ நிலைக்கு வந்தான் சிவா. பிறகு சாரிடம் "போயிட்டு வாரேன் சார்னு" சொல்லிட்டு ரெண்டு பயக்களும் கீழ எறங்கி வந்தானுக.

சைக்கிள எடுத்து செல்லப்பா ஓட்டவும் பின்னாலயே ஒடிப் போய் சிவா தொத்திகிட்டான். கொஞ்ச தூரம் போனதும் வந்த ராயல் காபி பாரில சிவா செல்லப்பாவ நிப்பாட்ட சொன்னான். திரும்பி சிவாவ வினோதமா பாத்த செல்லப்பா "எடே பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு இங்க ஏன் நிக்கச் சொல்லுத"ன்னு கேட்டான். "டீ குடிச்சிட்டு போலாம் வா"ன்னு சொன்னான் சிவா. டீக்கடை ரேடியோவில "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே" பாட்டு ஒடிட்டு இருந்தது. சம்சா, டீ வாங்கி அத உள்ள தள்ளிகிட்டே "டியூசன் நல்லா இருந்துச்சுல்லா, நீ என்ன சொல்லுத"ன்னு சிவா செல்லப்பாவ கேக்க, அவனும் "ஆமாமா நல்லாத் தான் போச்சுது, ஆனா கொஞ்சம் லேட்டா இங்க வந்துட்டோம் முன்னாடியே வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அந்த ரெண்டு பிள்ளேளயும் எனக்கு முன்னாடியே தெரியுமே, அவங்க பேரு என்ன தெரியுமா"ன்னான்.

சிவா "என்ன பேரு"ன்னு கேக்கவும், செல்லப்பா "இன்னொரு சம்சா வாங்கித் தா வே சொல்லுதேன்" அப்படின்னான்.......

Wednesday, December 13, 2006

காதலாகிக் கசிந்து - 2

வீட்டுல இருந்து சிவா வெளிய வந்த்ததுமே, உள்ள இருந்து அவன் அம்மா கோமதி "எல துரை ஒரு மடக்கு காப்பியக் குடிச்சிட்டு போன்னு" கத்தினாள். நெல்லை வட்டாரத்துல வீட்டுக்கு மூத்த பையன துரைன்னு கூப்டுவாக. உடனே சிவா சைக்கிள சுவத்துல சாத்தி வச்சுட்டு வீட்டுக்குள்ள போய் அவன் அம்மா கொடுத்த கருப்பட்டி காப்பிய வாங்கி குடிச்சிட்டு அவசர அவசரமா வெளிய ஓடினான். குளிர் காலத்துல நரசுஸ் காப்பித் தூளும், கருப்பட்டியும் கலந்து போடுத காப்பியக் குடிக்கதுல ஒரு தனி சுகம் தான்.

சிவா வாசல் கிட்ட வந்ததும் அவன் அப்பா மந்திரமூர்த்தி அவனக் கூப்ட்டு, "எடே மப்ளரயாவது, குல்லாவயாவது போட்டுட்டு போ, பனி ரொம்ப அதிகமா இருக்கு" அப்டின்னு சொன்னார். குல்லா போட்டா தல கலஞ்சு போய்டும்கறதனால, மப்ளர எடுத்து நடிகர் மோகன் மாதிரி சுத்திட்டு கெளம்பினான். அவன் வெளிய வந்து சைக்கிள எடுக்கவும், "எல மக்கா நேரமாயிட்டுது, வெரசலா கெளம்புடேன்னு கத்திகிட்டே அவன் நண்பன் செல்லப்பா ஒடி வந்தான் . செல்லப்பாவும் அவனும் பத்தாங்கிளாசுல இருந்து ஒன்னா படிக்காவ. சிவா எங்க வெளில போனாலும் செல்லப்பா தான் அவன சைக்கிள்ல வச்சு கூட்டிட்டு போவான். இப்பவும் அவுக ரெண்டு பேரும் சேர்ந்து போறது புரபசர் அப்துல் காதர் வீட்டுக்கு. திருநெல்வேலியில உள்ள ஒரு பெரிய காலேசுல அப்துல் காதர் அய்யா வேதியல் பேராசிரியர்.

+2 படிக்குத சிவாவும், செல்லப்பாவும் அப்துல்காதர் கிட்ட டியூசனுக்காக போய்கிட்டு இருக்காவ. அப்துல் காதர் சார மாதிரி யாரும் அந்த வட்டரத்துல வேதியல அவ்வளவு அழகா சொல்லித் தர முடியாது. பணத்துக்காக கூட்டத்த சேக்காம நல்லா படிக்கனும்னு ஆர்வம் உள்ளவங்கள மட்டும் தான் சேத்துக்குவாரு. இவ்வளவு நாள் வேற ஒரு வாத்தியார் கிட்ட படிச்சிட்டு இருந்த சிவாவும், செல்லப்பாவும் அந்த வாத்தியார் வேற ஊருக்கு மாத்தலாகிப் போனதால, அப்துல் காதர் சார் கிட்ட அன்னைல இருந்து சேந்தாங்க. முதல் கிளாசுக்கு இன்னைக்குத் தான் ரெண்டு பேரும் போறாவ.

அப்துல்காதர் சார் வீடு இருக்குதது பெருமாள்புரம். அதனால ரெண்டு பேரும் சைக்கிள்ல அன்புநகர் வழியா போனாங்க. பெருமாள்புரம் போற வழியில ஒரு அரச மரத்தடி பிள்ளயார் கோயில் இருக்கு. அங்க இந்த ரெண்டு பயக்களும் இறங்கி ஒரு தோப்புக்கரனம் போட்டுட்டு அப்டியே திரும்பவும் சைக்கிள மிதிச்சி வாத்தியார் வீட்டப் பாத்துப் போனாங்க. தூரத்து டீக்கடயில இருந்து மருத மலை மாமணியே முருகய்யான்னு மதுர சோமு உருகிக்கிட்டு இருந்தாரு. ஒரு வழியா வாத்தியார் வீட்டுக்கு வந்து சேந்தாங்க ரெண்டு பேரும். வாத்தியார் வீடு இருந்தது ஒரு பெரிய காம்பவுண்ட். அந்த காம்பவுண்டுக்குள்ள ஒரு பத்து, பன்னிரெண்டு வீடு இருக்கும். ஒரு பத்து ஏக்கர் எடத்துல முக்காவாசி தோட்டம் போட்டுட்டு, மிச்ச எடத்துல வீடுகளக் கட்டி விட்ருந்தாரு அந்த வீட்டுக்காரர். உள்ள பூரா ஒரே மரமும் செடியுமா சோலயா இருக்கும். அதுலயும் பன்னீர்ப்பூ மரம் ஒன்னு அந்த ஏரியா முழுக்க வாசத்தப் பரப்பிட்டு இருந்தது.

காம்பபுண்ட் நடுவுல கண்ணனும் ராதாவும் சேந்தாப்புல இருக்குத மாதிரி சில. அதச் சுத்தி எப்பவாது வேல செய்யுத ஒரு நீருத்து. சைக்கிள உள்ள உருட்டிட்டே போன ரெண்டு பயக்களும், ஒரு எடத்துல சைக்கிள நிப்பாட்டினானுவ. அது பக்கத்துல ஒரு செவப்புக் கலர் சன்னியும்(Sunny), இன்னொரு லேடி பேர்ட் சைக்கிளும் நின்னுகிட்டு இருந்தது. அதப் பாத்துட்டு செல்லப்பா "எடே வண்டியெல்லாம் பாத்தா சூப்பரா இருக்கு, உள்ள இருக்கவங்க எப்படி இருக்காவளோ" அப்டின்னு ஒரு பெரு மூச்சு விட்டான். உடனே சிவா "எல நீ சும்மா இருக்க மாட்டியா? இன்னும் நாலு மாசத்துல பரீட்சை வரப் போகுது, ஒழுங்கா படிக்கதுக்கு உண்டான வழியப் பாரு" அப்டின்னான். அப்படி வெளில சொன்னாலும், அவன் மனசுக்குள்ளயும் ஒரு குறுகுறுப்பு இருந்தது. ஏன்னா ரெண்டு பயக்களும் படிக்குதது ஒரு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.

வாத்தியார் வீடு மாடில இருந்தது, அதனால ரெண்டு பேரும் படியேறினாங்க. படியில ஒன்னு ரெண்டு மல்லிகப் பூ சிதறிக் கெடந்தது. அந்த மல்லிகயோட வாசம் சிவாவ என்னவோ பண்ணுச்சு. மேல வந்ததும் வாசல்ல வெல கூடின ரெண்டு ஜோடி பெண் செருப்பு கெடந்தது. அதுக்கு பக்கத்துல பாவம் போல தேஞ்சு போன ரப்பர் செருப்ப கழட்டிப் போட்டுட்டு ரெண்டு பேரும் உள்ள நுழைஞ்சாங்க. அங்கே....

Friday, December 01, 2006

காதலாகிக் கசிந்து

ரொம்ப நாளா நம்ம பயக்க எல்லாம், என்ன ஒரு நல்ல காதல் கதய எழுதச் சொல்லி புழுப் புழுன்னு அறிச்சிக்கிட்டே இருக்கானுவ. ஒரு வேளை என்னப் பாத்தா நெறய காதல் பண்ணின அணுபவம் உள்ளவன் மாதிரி தோனுதா இல்ல வடிவேலு மாதிரி என்ன வச்சு காமடி கீமடி பண்ணுதானுகளான்னு தெரியல. இப்போ வேற கார்திக, மார்கழின்னு ஒரே ரொமாண்டிக் மாசமா வருதா, அதான் நாமளும் ஒரு கதய எழுதி தான் பாப்பமேன்னு உக்காந்துட்டேன். சரி இப்ப நம்ம காதல் கதைக்கு வாரேன்.

அது ஒரு மார்கழி மாசம். நல்ல விரையல் காத்து, எதுக்க உள்ளவனக் கூட பாக்க முடியாத அளவுக்கு ஒரே பனி. திருநெல்வேலி, தியாகராச நகர்ல எல்லா வீட்டு வாசலிலயும் சானிப் பிள்ளையார் தலைல செம்பருத்தி, அரளிப் பூன்னு வெத வெதமா வச்சுகிட்டு ஜம்முன்னு உக்காந்திருந்தாரு. கல்யாணம் ஆகாத பெரிய அக்காக்களெல்லாம் குளிச்சி முழுகி, ஈரத்தலய அள்ளி பான்கொண்ட போட்டுகிட்டு, தெருவ அடைக்க மாதிரி பெரியப் பெரிய கலர்க் கோலம் போட்டுகிட்டு இருந்தாவ.

நெறய வீடுகள்ல திருப்பாவ, திருவம்பாவ படிக்குத சத்தம் கேட்டுது. மார்கழி மாசத்துல அதிகாலயில திருப்பாவ, திருவம்பாவ படிச்சா நல்ல புருசன் கெடப்பான்னு ஒரு ஐதீகமாம். அதுவும் கண்ணனத் தன் காதலனா நெனச்சு ஆண்டாள் பாடின திருப்பாவய கேட்டா கடவுளுக்கு காதல் வருதோ இல்லயோ ஊருல்ல உள்ள எளந்தாரிப் பயக்களுக்கெல்லாம் கமல் வசூல் ராஜாவுல சொன்ன மாதிரி ஒரு ஃபீலிங் வந்துரும்.

பிள்ளையார் கோவில்ல இருந்து பெரியசாமியா பிள்ள தாத்தா தலமயில ஒரு கூட்டம் பஜன பாடிக்கிட்டே வடக்குத் தெருவுக்கு போச்சுது. நண்டு, நாழியில இருந்து, வயசானவுக வர ஒன்னு சேரப் பாடுதத பாக்கதுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது. மார்கழி மாசத்துல தெய்வங்கள் எல்லாம் மண்ணூக்கு வந்து டேரா போட்டுருவாகளோ என்னமோ, அதான் வேற எந்த மாசத்துக்கும் இல்லாத சிறப்பு மார்கழிக்கு மட்டும் இருக்கு. பஜன கோஷ்டி எல்லாத் தெருவயும் வலம் வந்த் பிறகு பிள்ளயார் கோவிலுக்கு போயி ஒரு அர மணி நேரம் பூச நடக்கும். அப்புறம் பிரசாதம், சுடச்சுட தொன்னயிலயும், இலயிலயும் கொடுப்பாக சங்கர பாண்டி அய்யாவும், மணி மாமவும்.

இப்படி ரம்மியமான மார்கழி மாசத்துக் காலப் பொழுதுல நம்ம சிவா காலயிலேயே குளிச்சி முழுகி, திருநீரு பூசிக்கிட்டு தன்னோட சைக்கிள எடுத்துகிட்டு கெளம்பினான்.

தொடரும்......