Wednesday, December 27, 2006

காதலாகிக் கசிந்து - 3

அப்துல்காதர் சார் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் ஒரு பெரிய தார்சா(வராண்டா) இருந்தது. அந்த தார்சாவோட நடுவுல ஒரு மேசை இருந்தது. அந்த மேசைக்கு ஒரு பக்கம் சார் உக்காந்திருந்தாரு. அவருக்கு எதுக்க ரெண்டு பிள்ளேள் உக்கார்ந்த்திருந்தது. அறை முழுசும் மல்லிகைப்பூ வாசம் நெறஞ்சு இருந்தது. சுவத்துல, குரான் வரிகள் பிரேம் பண்ணி போட்டு இருந்தது. அதுக்கு பக்கத்துல கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் பண்ணின கீதாசாரம். உள்ளே நுழைந்த சிவாவயும் செல்லப்பாவயும் பாத்து புண்ணகைத்த அப்துல் காதர் "வாங்கப்பா வந்து உக்காருங்க" என்றார். உடனே அந்த ரெண்டு பெண்களும் திரும்பிப் பார்த்தனர்.

அந்த ரெண்டு பிள்ளைகளும் செல்லப்பாவைப் பாத்து புருவத்த உயர்த்த, பதிலுக்கு செல்லப்பாவின் கண்ணும் ஆச்சரியத்துல விரிஞ்சுது. உடனே சிவா செல்லப்பாவுக்கு அந்த பிள்ளேல ஏற்கனவே தெரியும் என்பதனை
யூகித்தான். அந்த பிள்ளைகள்ல ஒருத்தி பள்ளியூட யூனிபார்ம் போட்டிருந்தா, இன்னொருத்தி கத்திரிப்பூக் கலருல சுடிதார் போட்டிருந்தா. யூனிபார்ம் போட்ட பொண்ணு வாயாடின்னு அஞ்சு நொடியில சிவாவுக்கு புரிஞ்சு போச்சு.

அந்தக் கத்திரிப்பூ சுடிதார் பொண்ணு தான் தலை கொள்ளாம மல்லிகப்பூ வச்சு அந்த அறை முழுக்க வாசத்தப் பரப்பிக்கிட்டு இருந்தா. நெற்றியில் ஒரு பெரிய ஸ்டிகர் பொட்டு, அதுக்கு கீழ ஒரு குட்டி கருப்பு பொட்டு, அதுக்கு கீழ மெல்லிய திருநீற்றுக் கீற்று. காதில் கல் வைத்த சிறிய தோடு. கூர் நாசி, குறுகுறுக்கும் கண்ணுகளோட அமைதியா உக்காந்திருந்தா. காதோரமா இருந்த கொஞ்சம் முடி மார்கழிக் காத்துல அலைபாய்ந்தது. அந்த ரூமுக்கு வெளிச்சம் கொடுக்கதுக்கு அவளோட முகத்துக்கும், மின்வெளக்குக்கும் சண்டை நடந்தது.

உள்ளே வந்து உக்காந்ததும் செல்லப்பா சிவாகிட்ட, "ஒரு நூறு வயலின சேந்தாப்புல வாசிச்ச மாதிரி ஒரு எபெக்ட் எனக்குத் தெரியுது, உனக்கு எப்படின்னு" ரகசியமகேட்டான். உடனே சிவா "சும்மா இருல" அப்படின்னு அதட்டினான்.அப்துல்காதர் சார் அன்று கரிம வேதியல்(organic chemistry) பற்றி பாடம் நடத்த ஆரம்பித்தார். வகைப்படுத்தப்பட்ட IUPAC பெயர்கள், கரிம(Carbon, கார்பன்) அணுக்கள் மற்றும் கரிம சேர்மங்கள் இதப் பத்தியெல்லாம் விளக்கினார். பழைய வாத்தியார் முத்துசாமிய விட அப்துல்காதர் சொல்லிக் கொடுக்குதது சிவா, செல்லப்பா ரெண்டு பயக்களுக்கும் ரொம்ப நல்லா வெளங்குச்சு. வேதியலப் பத்தி ஒன்னுமே தெரியாத பயபுள்ளைக்கே சார் சொல்லிக் கொடுக்குதது வெளங்குமுன்னா கற்பூர புத்தி உள்ள இந்த ரெண்டு பயக்களுக்கு கேக்கவே வேண்டாம்.

பாடம் முடிஞ்சதும் "என்னப்பா சொல்லிக் கொடுத்தது எல்லாம் வெளங்குச்சா? புரியலயின்னா கூச்சப் படாமக் கேளுங்க" அப்டின்னு சார் சொல்லவும், புண்ணகையோட தலையாட்டின சிவா அப்பிடியே அந்த கத்திரிப்பூக் கலர் சுடிதாரப் பாக்க, அந்தப் பொண்ணும் சிவாவப் பாத்துச்சு. இது வரைக்கும் எந்தப் பிள்ளையயும் நேருக்கு நேர் பாத்துராத சிவாவுக்கு ஒரு கனம் இதயத்துடிப்பு நின்னு திரும்ப வந்தது. அதுக்கப்புறம் கை கால் எல்லாம் லேசாக நடுங்கியது, இதயம் வேகமா துடிக்க ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் திரும்பவும் சகஜ நிலைக்கு வந்தான் சிவா. பிறகு சாரிடம் "போயிட்டு வாரேன் சார்னு" சொல்லிட்டு ரெண்டு பயக்களும் கீழ எறங்கி வந்தானுக.

சைக்கிள எடுத்து செல்லப்பா ஓட்டவும் பின்னாலயே ஒடிப் போய் சிவா தொத்திகிட்டான். கொஞ்ச தூரம் போனதும் வந்த ராயல் காபி பாரில சிவா செல்லப்பாவ நிப்பாட்ட சொன்னான். திரும்பி சிவாவ வினோதமா பாத்த செல்லப்பா "எடே பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு இங்க ஏன் நிக்கச் சொல்லுத"ன்னு கேட்டான். "டீ குடிச்சிட்டு போலாம் வா"ன்னு சொன்னான் சிவா. டீக்கடை ரேடியோவில "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே" பாட்டு ஒடிட்டு இருந்தது. சம்சா, டீ வாங்கி அத உள்ள தள்ளிகிட்டே "டியூசன் நல்லா இருந்துச்சுல்லா, நீ என்ன சொல்லுத"ன்னு சிவா செல்லப்பாவ கேக்க, அவனும் "ஆமாமா நல்லாத் தான் போச்சுது, ஆனா கொஞ்சம் லேட்டா இங்க வந்துட்டோம் முன்னாடியே வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அந்த ரெண்டு பிள்ளேளயும் எனக்கு முன்னாடியே தெரியுமே, அவங்க பேரு என்ன தெரியுமா"ன்னான்.

சிவா "என்ன பேரு"ன்னு கேக்கவும், செல்லப்பா "இன்னொரு சம்சா வாங்கித் தா வே சொல்லுதேன்" அப்படின்னான்.......

2 comments:

Anonymous said...

பாஸ்,
ரொம்ப ஃபீலிங்கோட எழுதறீங்களே சொந்தக் கதயா?

Anonymous said...

Enakku ithu yaarudaya kathainnu sariya theriyala. But I enjoy this. Keep posting more.