Monday, June 12, 2006

பால் பீச்சும் மாட்ட விட்டு, பஞ்சாரத்துக் கோழிய விட்டு....

"சோகங்களில் எல்லாம் பெரிய சோகம், தாயைப் பிரிவதல்ல, தந்தயைப் பிரிவதல்ல, நண்பனைப் பிரிவதல்ல, காதலியைப் பிரிவதல்ல, இதயெல்லாம் விட நாம் வாழ்ந்த சொந்த மண்ணைப் பிரிவது தான் மிகப் பெரிய சோகம்" அப்டின்னு நம்ம பாரதிராஜா அண்ணாச்சி கருத்தம்மா படத்துல வருத "போறாளே பொன்னுத்தாயி" பாட்டுக்கு ஒரு முன்னுரை கொடுப்பாரு. சமீபத்தில நம்ம சொக்காரங்க அம்பது வருசமா இருந்த சொந்த ஊர விட்டு சென்னைக்கு வந்தாக. அவுக வீட்ல எல்லாருக்கும் ஊரப் பிரியுதமேன்னு ரொம்ப மன வருத்தம்...

ஊருல இருந்தா முன்னேற்றமே இல்ல, மெட்ராசு பக்கம் போனா கொஞ்சம் பணங்காசு சேக்கலாமுன்னு நெறய குடும்பங்கள் கெளம்பி மெட்ராசுக்கு வருது. ஆனா அப்பிடி வருத எல்லாரும் மனசுல ரொம்ப சங்கடத்த வச்சுகிட்டு தான் வாராக. எப்போ நேரமும், பணமுங் கெடைக்கும் ஊரு பக்கம் ஒரு தடவ போயிட்டு வரலாம்னு எப்பவும் மனசுல ஒரு ஏக்கம் இருந்து கிட்டே இருக்கும். வீட்டுத் தோட்டம், ஊர் கோயில், குளத்தாங்கர, வாய்க்கால், வயல், தென்னந்தோப்புன்னு ஏதாவது ஒன்னப் பத்தி நெனப்பு நெஞ்சுக்குள்ள சுத்திகிட்டே இருக்கும்.

நான் படிப்ப முடிச்சிட்டு சென்னை வரும்போது எங்க தாத்தா வீட்டுல, ஒவ்வெரு எடமா போயி நின்னு ஏங்கி அழுதத ஆயுசு பூராவும் மறக்க முடியாது. மெட்ராஸ் வந்தும் ரொம்ப நாளக்கி ஊரு நியாபகமாவே இருந்தேன். நம்ம ஊருக்காரன எங்கனயாவது பாத்துட்டோம்னா அவ்வளவு சந்தோசமா இருக்கும்.

என்ன மாரி ஊரப் பிரிஞ்சு பட்ணத்துக்கு பொழப்புக்காக வந்திருக்கிற எல்லாருக்கும் ஊரப் பத்தின நெனப்பு இருந்துகிட்டே இருக்கும். மெட்ராசுலயே பொறந்து வளந்தவுகளுக்கு நம்மள எல்லாம் பாத்தா விசித்திரமா இருக்கும். அந்த மாரி ஆட்கள்ல நெறய பேரு மெட்ராசுக்கு தெக்க ஒரு தடவ கூட வந்திருக்க மாட்டாக. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, அது அங்க வாழ்ந்தவனுக்குத் தான் தெரியும். நம்மள்ல எல்லாருக்கும் பேச்சு, செயல், எண்ணம்னு எதுலயாவது ஒன்னுல சொந்த ஊரோட தாக்கம், பாதிப்பு கொஞ்சமவது இருந்துகிட்டு தான் இருக்கும். அப்பிடி இருக்கதுல தப்பு ஒன்னும் இல்ல. அத மறைச்சு நாகரீங்கற பேரில வெளி வேசம் போடாதிய

அதனால கோயம்புத்தூர்க்காரனோ, மதுரக்காரனோ, திருநெல்வேலிக்காரனோ அவங்க வட்டாரத் தமிழ்ல பேசினா தயவு செய்து யாரும் ஏளனம், கிண்டல் பண்ணாதிய. அதே மாரி நெறய பேரு ஊருல இருக்குத வீடு, வயல் தோட்டம், தோப்பு எல்லாத்தயும் வித்திட்டு பெருமைக்கு பெங்களூரு, சென்னைன்னு 40 லட்சம் 50 லட்சத்துக்கு பிளாட் வாங்கிப் போட்டுட்டு, அவுகளும் ஊர மறந்து, அடுத்தால வார சந்ததிக்கும் ஊரப் பத்தி எடுத்துச் சொல்லாம விட்டுருதாக.

நீ எங்க வேனாலும் இரு, சம்பாதி, சொத்து வாங்கு வேணாங்கல... ஆனா நீ வளந்த ஊருக்கு எதாவது நல்லது பண்ணு. வளந்த மண்ண மறக்குதது, பெத்த தாய மறக்குற மாதிரி.

Friday, June 09, 2006

முல்லா குல்லா... பாகம் 4

முல்லா இப்படி கீத்தா மேல ஒரே லவ்வா இருக்க, அவன ரெண்டு மூனு பிள்ளேள் லுக்கு விட்டுதுக. ரெண்டு மூனு பொண்ணுகளா அப்போ முல்லா சாஹேப் பெரிய மன்மதக் குஞ்சா இருப்பானோன்னு நினக்காதிய. அவனப் பார்வையால பந்தாடுன பரதேவதைகள் எல்லாம் நடிக கமலா காமேஷ், தேனி குஞ்சரம்மா ரேஞ்சுல இருக்கும். வழக்கமா பயக்க தான் பிள்ளேள் எப்ப வெளில வருமுன்னு அதுக வீட்டு வாசல்ல காவக் கெடப்பானுவ. ஆனா முல்லாவப் பாக்கதுக்கு அவன் எயித்த வீட்டுப் பிள்ளேள் தங்கம்மா, மங்கம்மா ரெண்டு பேரும் அவுக வீட்டு கட்டமன்னுச் சுவர புடிச்சிகிட்டு காத்து கெடப்பாளுக. முல்லா வீட்ட விட்டு வெளில காலடி எடுத்து வச்சதும் அவன உஷ், உஷ்னு மெதுவா கூப்புடும் ரெண்டு பிள்ளேளும். ஆனா கீத்தா நெனப்புலயே திரியுத முல்லா இதுகள மறந்தும் திரும்பிப் பாக்க மாட்டான்.

அதுகளும் மனந்தளராம "ஏய், ஹலோ, எலே சோத்துமாடா" அப்டின்னு என்னல்லாமோ சத்தம் குடுத்து பாத்ததுக. நம்ம பய மசியவே இல்ல. இப்படி ரொம்ப தெனாவெட்டா திரிஞ்ச முல்லாவ எப்படியாவது நம்ம பக்கம் திரும்ப வக்கனும்னு சபதம் போட்ட மங்கம்மா, தங்கம்மா ரெண்டு பேரும் ஒரு நாள் முல்லா வீட்டு நடய விட்டு எறங்குனதும், வரிசயா அவன் தட்டட்டி மண்ட மேல பக்கத்துல இருந்த பப்பாளி மரத்துல இருந்து பப்பாளிக் காய பறிச்சி எறிய ஆரம்பிச்சாளுக. ஆனா அதுக்கும் நம்ம ஆளு கொஞ்சங்கூட அசரல. வந்த பப்பாளிக் காயெல்லாம் அவன் தலயில பட்டு சிதறி ஒடஞ்சதே தவிர நம்ம பயலுக்கு ஒன்னும் ஆவல.

இதயெல்லாம் பாத்துகிட்டு இருந்த முல்லாவோட சேக்காளி மாசானம், சவ்வு முட்டாய், அழிரப்பர், அருனாக்கயிறு இதயெல்லாம் அதுகளோட தம்பி ஊசிக்காட்டானுக்கு வாங்கிக் கொடுத்து எப்பிடியோ அந்த பிள்ளேள் ரெண்டு பேரயும் பிக்கப் பண்ணிட்டான். மாசானம் இப்ப அந்த பிள்ளேளயும் அதுக தம்பியயும் வச்சுத் தீனி போட முடியாம தினறிட்டு வாறான். இனிமே எங்க அய்யா கோமனத்த வித்து தாமுலே இதுகளுக்கு இரையறுக்கனும், வேற எங்கிட்ட எதுவும் இல்லன்னு ஒரு நாள் ரொம்ப சோகமா சொன்னான்.

கீத்தாவ தெனமும் எப்படியாவது பாத்துரனும்னு முல்லா அவ வீட்டு வழியா நடந்து போய் பாத்தான். ஆனா அவன யாரும் கண்டுக்கல. கீத்தாவ எப்படியாவது வீட்ட விட்டு வெளிய வர வக்கனுமின்னு நெனச்ச முல்லா அதுக்கு ஒரு திட்டம் போட்டான். நாய் மாரியே ஊள விட்டுட்டு அவ வீட்ட எட்டி எட்டி பாத்துகிட்டே போனான், இதுல கீழ கெடந்த வெறி நாய முல்லா கவனிக்கவே இல்ல. நாய் வயித்த முல்லா மிதிக்கவும் தூங்கிட்டு இருந்த நாய் வெறில முல்லாவோட தொடக்கறிய ஒரு கவ்வு கவ்வுச்சு. அவ்வளவு தான் முல்லா கத்தி கூப்பாடு போட்டுகிட்டே ஒடினான். கள்ளப் பய தான் ஒடுதான்னு நாய் விடாம முல்லாவ தொரத்த, கீத்தா வீட்டுல எல்லாரும் வெளில ஓடியாந்து வேடிக்க பாத்ததுக. தொப்புள சுத்தி 48 ஊசி போட்டாலும் முல்லா ரொம்ப தெனாவெட்டா எல்லார்ட்டயும், "எப்பிடி, நம்மாள வெளிய வர வச்சுட்டன்ல" அப்டின்னு சொல்லிட்டுத் திரிஞ்சான். எற்கனவே ராச நடை நடந்துட்டு இருந்த முல்லா பய நாய்கடிச்சதுக்கப்புறம் இன்னும் கொஞ்சம் கோயான் மாதிரி நடக்க ஆரம்பிச்சான்.

முல்லா இன்னும் வருவான்.....

Wednesday, June 07, 2006

பேதில போவான்....

நம்ம ஊருல எப்படில்லாம் பெருசுக, சின்னதுகள ஏசுமுன்னு யோசிச்சு பாத்தேன். உடனே எனக்கு ஞாபகம் வந்தது எங்க பெரியாத்தா தான். புண்ணியவதி, அவுகளுக்கு தமிழ்ல தெரியாத கெட்ட வார்த்தையே கெடயாது. எங்க பெரியாத்தா எங்க அண்ணன(பெரியாத்தாவோட மவன்) ஏசும் போது ரொம்ப காமெடியா இருக்கும். எவ்வளவு தான் ஏசினாலும், அண்ணாச்சி பதில் பேசவே மாட்டான். உடனே அதுக்கும் சேத்து என்ன ச்சொன்னாலும் மன்னு மாரில இருக்கான் வெறுவாக்கங்கெட்ட பய அப்டின்னு இன்னும் ஏச்சு கூடும்.

எங்க அண்ணாச்சி மட்டுமில்ல நாங்களும் நெறய ஏச்சு வாங்கிருக்கோம். குச்சிக்கம்பு வெளயாடும்போது பெரியாத்தா வீட்டுக்குள்ள நம்ம தம்பியாபிள்ள அடிச்சி விட்ருவான். உடனே பெரியாத்தா, "எல எந்த பேதில போவான் வீட்டுக்குள்ள கம்ப அடிச்சதுல, இந்த பக்கம் வா கைய ஒடிச்சு அடுப்புக்குள்ள வைக்கென்". இந்த சத்தத்த கேட்டதும் அடுத்த 10 நிமிசத்துக்கு அந்த இடத்தில ஒரு பய இருக்க மாட்டான். பழயபடி திரும்ப இதே கூத்து நடக்கும்.

ஒரு தடவ ரேசன் கடைக்கு போன இடத்துல நம்ம அண்ணாச்சி எப்பிடியோ ரூவாயத் தொலச்சிட்டான். தொலச்ச ரூவாய அண்ணாச்சி ரேசன் கடைல தேடு தேடுன்னு ஒரு மணி நேரமா தேடிட்டு மெதுவா வீட்டுக்கு வந்ததும் ஆரம்பிச்சது அருப்புக் கண்டம். "கூறுகெட்ட மூதி எப்பிடி ரூவாயத் தொலச்ச? பக்கிப்பிராண்டு மாரி எங்கனயாவது பரக்கப் பாத்துட்டு நின்னுருப்ப... கரியாப்போவான், உமியாப் போவான் உன்னயெல்லாம் சந்து சந்தா வகுரனும்". இதுக்கும் அண்ணாச்சி பதிலே சொல்லாம மன்னாந்த மாரி கம்பா நிப்பான்.

செந்தட்டின்னு நம்ம ஊரு பக்கம் ஒரு இலை உண்டு. அத மேல தேச்சா பயங்கரமா ஊரல் எடுக்கும், சுரீர்னு எறும்பு கடிச்ச மாரி வலிக்கும். வலி நிக்கதுக்கு பத்து நிமிசம் ஆகும். அப்படிப்பட்ட செந்தட்டிய என் தம்பியாபிள்ள மேல ஒரு தடவ ஒரு பெரிய பய தேச்சுட்டான். நம்ம தம்பியாபிள்ளயும் பெரியாத்த கிட்ட போய் ஓ ராமன்னு ஒப்பாரி வச்சான். அப்புறம் என்ன பெரியாத்தா பூடம் இல்லாமலே சாமி ஆட அரம்பிச்சாவ... "ஏல மாடு மாரி வளந்திருக்கியே, இப்பிடியா கூ கொழுப்படுத்து பச்ச பிள்ள(தம்பியாபிள்ளைக்கு வயசு அப்ப 14) மேல தேப்ப? இங்க வால உன் ---ல தேச்சு விடுதேன். கிறுக்குப் பய... படுக்காலிப் பயவில்ல.. இனிமே இந்த பக்கம் வா கண்ண நோண்டுதேன்" அதுக்கப்புறம் அந்தப் பய எங்க வீடு இருந்த திசை பக்கம் தல வச்சு கூட படுக்கல.

பயக்களத்தான்னு இல்ல பிள்ளேலும் நல்ல ஏச்சு வாங்கும் பெரியாத்தா கிட்ட. இப்படித்தான் ஒரு தடவ சும்ம இருந்த பக்கத்து வீட்டுப் பிள்ளய கூப்டு "ஏட்டி சரசு நான் குளிக்கப் போறேன். கல்லுல தோச கெடக்கு மாத்திப் போட்டுட்டு அடுத்தால இன்னொரு தோச விடுட்டி, நான் அதுக்குள்ள வந்துருதேன்" அப்படின்னு குளிக்கப் போனாவ. சரசு என்ன செஞ்சாலோ தெரில முத தோசய பிச்சும், அடுத்த தோசய கருக்கியும் எடுத்தா. குளிச்சிட்டு வந்து இதப் பாத்த பெரியாத்தா பத்ரகாளியா மாறி, "ஏட்டி களுத முண்ட தெரியெலேன்னா சொல்ல வேண்டியது தான மூதேவி மூதி, எல்லாத்தயும் பேத்து வச்சிருக்கா ஆடாங்கன்னி. உங்க அம்ம வளத்து வச்சிருக்கா பாரு லச்சன மயிரா" அப்டின்னு கத்த அப்பிரானியான பக்கத்து வீட்டு மாமா அடுத்த வாரமே வீட்டக் காலி பண்ணிட்டு தூரா தேசம் போயிட்டாரு பொண்டாட்டி பிள்ளயோட...

Friday, June 02, 2006

முல்லா குல்லா... பாகம் 3

முல்லா அவன் படிச்ச பழைய தனியார் பள்ளியூடத்தில ஒரு பிள்ளைய ரெண்டு தலயா(ஏன்னா முல்லாக்கு தலயில ரெட்டச் சுழி)காதலிச்சான். அவன் லவ்வினது அந்த தனியார் பள்ளியூட எட்மிஸ்டரஸ் பிள்ளைய. அந்த எட்மிஸ்டரஸ் பேரு உமா மேடம். உமா மேடத்துக்கு 45 வயசு இருக்கும். ஆனா நேர்ல பாத்தா 30 வயசு அக்கா மாதிரி இந்திக்காரி நடிக தபு சாடைல இருக்கும். ஆனா அந்தம்மா புருசன் பாலாமடை பலராமனுக்கு மேடத்தோட 12 வயசு அதிகம். சைனாக்காரனுக்கு பொறந்த பயன்னு ஊருக்குள்ள அந்த ஆள பத்தி பாசமா சொல்லுவாக. பழய சினிமா நடிகரு குலதெய்வம் இராசகோபால் தம்பி மாதிரி இருப்பாரு மனுசன். விதி கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லாம சதி செஞ்சு ரெண்டு பேரயும் சோடி சேத்துருச்சு.

ஊருல நேரம் போகாம வத்தல், வடகம் போட்டுட்டு இருந்த மாமிகளா சேந்து ஆரம்பிச்ச பள்ளியூடம் தான் அந்த தனியார் பள்ளியூடம். உமா மேடத்துக்கு ஊர்ல உள்ள பெரிய புள்ளிகளோட நல்ல பழக்கம் இருந்ததால பள்ளியூடம் நல்லா வளந்துச்சு. பள்ளியூடம் வளர, வளர உமா மேடம் பழய வத்தல், வடக மாமி கூட்டத்த எல்லாம் வெரட்டிட்டு புதுசா, இளசா உள்ள பெரிய படிப்பு படிச்ச டீச்சர்களா புடிச்சு போட்டுச்சு. இதனால நெறய மாப்பிள பெஞ்சு பயலுவ ஒரு கிளாசுல 3, 4 வருசம் உக்காந்திருந்து பெஞ்ச தேச்சிட்டு இருந்தானுவ.

உமா மேடத்துக்கு ரெண்டு பொட்டப் பிள்ளேள். அதுக பேரு சீத்தா, கீத்தா. என்னடா பேரு சீதா, கீதான்னு தான இருக்கும் சீத்தா, கீத்தானு ஆத்தா மாதிரி இருக்கேனு முழிக்காதிய. அவுக அய்யா "பாலாமடை பலராமன்" பெயரியல் ஆசான் கி.கூ.முர்கேஸ்அன்(முருகேசன் தான் பெயரியல் படி அப்படி எழுதிருக்காரு) கிட்ட சொல்லி பெயரியல் ராசிப்படி அப்படி வச்சிட்டாரு. சீத்தாவும், கீத்தாவும் அவுக ஆத்தாவோட ரோட்டுல நடந்து வந்தா ஊர்ல உள்ள பயக்க சொரிமுத்து, அந்தோனி, பால்பாண்டி, செல்லத்துரை எல்லாம் வா பொளந்து பாத்துட்டு இருப்பானுவ. நடந்து வார மூனு பேருல யாரு அக்கா, யாரு தங்கச்சின்னே தெரியாம முழிப்பானுவ.

அந்த ஊருல ஜீன்சு பேன்ட்டு போட்டுட்டு முத முதலா திரிஞ்சது சீத்தா, கீத்தா தான். அந்த டிரசுல அதுகள பாத்ததும் முல்லாவோட சேக்காளி இசக்கியப்பனுக்கு ஒரு சந்தேகம் வந்துது. "எலே முல்லா இந்த பிள்ளேள் இந்த டிரச போடுதுகளே, ஏதாவது ஒரு அவசரம்னா என்ன செய்யும்?". அந்த கேள்விக்கு யாராலயும் பதில் சொல்ல முடியல....!!!

நம்ம முல்லா டாவடிக்கிறது சின்னவ கீத்தாவ. கீத்தா முல்லாவோட ஒன்னரை அடி உயரம் அதிகம். இருந்தாலும் ஆசை யார விட்டது. யாராவது கேட்டா "மூர்த்தி சிறுசா இருந்தா என்ன கீர்த்தி பெருசா இருக்குல்ல"ன்னு சொல்லுவான். முல்லா கீத்தா வீட்டுக்கு அடிக்கடி ஃபோன் போட்டு யார் எடுத்தாலும், "உம் நாந்தான்" அப்டின்னு மூனு தடவை சொல்லுவான். அதுக்கு "ஏல நீ என்ன பெரிய லார்டு கிச்சனா பேரச் சொல்லுல"னு பதில் வரும், முல்லாவும் விடாம "கரையிருப்பு லாரி செட்டா", "கரையிருப்பு லாரி செட்டா"னு மூனு தடவை கேட்டுட்டு ஃபோன வச்சிடுவான்.

முல்லா அடுத்த வாரம் வருவான்....