வீட்டுல இருந்து சிவா வெளிய வந்த்ததுமே, உள்ள இருந்து அவன் அம்மா கோமதி "எல துரை ஒரு மடக்கு காப்பியக் குடிச்சிட்டு போன்னு" கத்தினாள். நெல்லை வட்டாரத்துல வீட்டுக்கு மூத்த பையன துரைன்னு கூப்டுவாக. உடனே சிவா சைக்கிள சுவத்துல சாத்தி வச்சுட்டு வீட்டுக்குள்ள போய் அவன் அம்மா கொடுத்த கருப்பட்டி காப்பிய வாங்கி குடிச்சிட்டு அவசர அவசரமா வெளிய ஓடினான். குளிர் காலத்துல நரசுஸ் காப்பித் தூளும், கருப்பட்டியும் கலந்து போடுத காப்பியக் குடிக்கதுல ஒரு தனி சுகம் தான்.
சிவா வாசல் கிட்ட வந்ததும் அவன் அப்பா மந்திரமூர்த்தி அவனக் கூப்ட்டு, "எடே மப்ளரயாவது, குல்லாவயாவது போட்டுட்டு போ, பனி ரொம்ப அதிகமா இருக்கு" அப்டின்னு சொன்னார். குல்லா போட்டா தல கலஞ்சு போய்டும்கறதனால, மப்ளர எடுத்து நடிகர் மோகன் மாதிரி சுத்திட்டு கெளம்பினான். அவன் வெளிய வந்து சைக்கிள எடுக்கவும், "எல மக்கா நேரமாயிட்டுது, வெரசலா கெளம்புடேன்னு கத்திகிட்டே அவன் நண்பன் செல்லப்பா ஒடி வந்தான் . செல்லப்பாவும் அவனும் பத்தாங்கிளாசுல இருந்து ஒன்னா படிக்காவ. சிவா எங்க வெளில போனாலும் செல்லப்பா தான் அவன சைக்கிள்ல வச்சு கூட்டிட்டு போவான். இப்பவும் அவுக ரெண்டு பேரும் சேர்ந்து போறது புரபசர் அப்துல் காதர் வீட்டுக்கு. திருநெல்வேலியில உள்ள ஒரு பெரிய காலேசுல அப்துல் காதர் அய்யா வேதியல் பேராசிரியர்.
+2 படிக்குத சிவாவும், செல்லப்பாவும் அப்துல்காதர் கிட்ட டியூசனுக்காக போய்கிட்டு இருக்காவ. அப்துல் காதர் சார மாதிரி யாரும் அந்த வட்டரத்துல வேதியல அவ்வளவு அழகா சொல்லித் தர முடியாது. பணத்துக்காக கூட்டத்த சேக்காம நல்லா படிக்கனும்னு ஆர்வம் உள்ளவங்கள மட்டும் தான் சேத்துக்குவாரு. இவ்வளவு நாள் வேற ஒரு வாத்தியார் கிட்ட படிச்சிட்டு இருந்த சிவாவும், செல்லப்பாவும் அந்த வாத்தியார் வேற ஊருக்கு மாத்தலாகிப் போனதால, அப்துல் காதர் சார் கிட்ட அன்னைல இருந்து சேந்தாங்க. முதல் கிளாசுக்கு இன்னைக்குத் தான் ரெண்டு பேரும் போறாவ.
அப்துல்காதர் சார் வீடு இருக்குதது பெருமாள்புரம். அதனால ரெண்டு பேரும் சைக்கிள்ல அன்புநகர் வழியா போனாங்க. பெருமாள்புரம் போற வழியில ஒரு அரச மரத்தடி பிள்ளயார் கோயில் இருக்கு. அங்க இந்த ரெண்டு பயக்களும் இறங்கி ஒரு தோப்புக்கரனம் போட்டுட்டு அப்டியே திரும்பவும் சைக்கிள மிதிச்சி வாத்தியார் வீட்டப் பாத்துப் போனாங்க. தூரத்து டீக்கடயில இருந்து மருத மலை மாமணியே முருகய்யான்னு மதுர சோமு உருகிக்கிட்டு இருந்தாரு. ஒரு வழியா வாத்தியார் வீட்டுக்கு வந்து சேந்தாங்க ரெண்டு பேரும். வாத்தியார் வீடு இருந்தது ஒரு பெரிய காம்பவுண்ட். அந்த காம்பவுண்டுக்குள்ள ஒரு பத்து, பன்னிரெண்டு வீடு இருக்கும். ஒரு பத்து ஏக்கர் எடத்துல முக்காவாசி தோட்டம் போட்டுட்டு, மிச்ச எடத்துல வீடுகளக் கட்டி விட்ருந்தாரு அந்த வீட்டுக்காரர். உள்ள பூரா ஒரே மரமும் செடியுமா சோலயா இருக்கும். அதுலயும் பன்னீர்ப்பூ மரம் ஒன்னு அந்த ஏரியா முழுக்க வாசத்தப் பரப்பிட்டு இருந்தது.
காம்பபுண்ட் நடுவுல கண்ணனும் ராதாவும் சேந்தாப்புல இருக்குத மாதிரி சில. அதச் சுத்தி எப்பவாது வேல செய்யுத ஒரு நீருத்து. சைக்கிள உள்ள உருட்டிட்டே போன ரெண்டு பயக்களும், ஒரு எடத்துல சைக்கிள நிப்பாட்டினானுவ. அது பக்கத்துல ஒரு செவப்புக் கலர் சன்னியும்(Sunny), இன்னொரு லேடி பேர்ட் சைக்கிளும் நின்னுகிட்டு இருந்தது. அதப் பாத்துட்டு செல்லப்பா "எடே வண்டியெல்லாம் பாத்தா சூப்பரா இருக்கு, உள்ள இருக்கவங்க எப்படி இருக்காவளோ" அப்டின்னு ஒரு பெரு மூச்சு விட்டான். உடனே சிவா "எல நீ சும்மா இருக்க மாட்டியா? இன்னும் நாலு மாசத்துல பரீட்சை வரப் போகுது, ஒழுங்கா படிக்கதுக்கு உண்டான வழியப் பாரு" அப்டின்னான். அப்படி வெளில சொன்னாலும், அவன் மனசுக்குள்ளயும் ஒரு குறுகுறுப்பு இருந்தது. ஏன்னா ரெண்டு பயக்களும் படிக்குதது ஒரு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
வாத்தியார் வீடு மாடில இருந்தது, அதனால ரெண்டு பேரும் படியேறினாங்க. படியில ஒன்னு ரெண்டு மல்லிகப் பூ சிதறிக் கெடந்தது. அந்த மல்லிகயோட வாசம் சிவாவ என்னவோ பண்ணுச்சு. மேல வந்ததும் வாசல்ல வெல கூடின ரெண்டு ஜோடி பெண் செருப்பு கெடந்தது. அதுக்கு பக்கத்துல பாவம் போல தேஞ்சு போன ரப்பர் செருப்ப கழட்டிப் போட்டுட்டு ரெண்டு பேரும் உள்ள நுழைஞ்சாங்க. அங்கே....
8 comments:
Nalla suspense kodukareenga...
நெல்லைக்கிறுக்கரே
ரசித்தேன், சஸ்பென்சா தொடரும் போட்டிருக்கீக
//மருதமலை மாமணியே முருகையான்னு டி.எம்.எஸ் உருகிக்-
கிட்டிருந்தாரு//
அவர் டி.எம்.எஸ் இல்லே!
மதுரை சோமசுந்தரம் (மதுரை சோமு)
நன்றி அனானி நண்பரே. தொடர்ந்து படிங்க..
நன்றி பிரபா,
சஸ்பென்ஸ் எல்லாம் ரொம்ப பெருசா ஒன்னும் கெடயாது. அடுத்த வாரம் சஸ்பென்ச உடச்சிருதேன்...
வாங்க சிவஞானம்ஜி,
வருகைக்கு நன்றி. பிழையச் சுட்டிக் காட்டினதுக்கு நன்றி. திருத்திக்கிடுதேன்.
பாஸ் ரொம்ப பில்டப் எல்லாம் கொடுக்கறீங்க. சொந்தக் கதையா?
கதைய இன்னும் படிக்கலை..முதல்லேர்ந்து படிக்கனும். நாளைக்கு படிச்சுட்டு பின்னூட்டம் போடறேன்.
உங்களுக்கும் உங்கள் குடுமப்த்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Post a Comment