Wednesday, June 07, 2006

பேதில போவான்....

நம்ம ஊருல எப்படில்லாம் பெருசுக, சின்னதுகள ஏசுமுன்னு யோசிச்சு பாத்தேன். உடனே எனக்கு ஞாபகம் வந்தது எங்க பெரியாத்தா தான். புண்ணியவதி, அவுகளுக்கு தமிழ்ல தெரியாத கெட்ட வார்த்தையே கெடயாது. எங்க பெரியாத்தா எங்க அண்ணன(பெரியாத்தாவோட மவன்) ஏசும் போது ரொம்ப காமெடியா இருக்கும். எவ்வளவு தான் ஏசினாலும், அண்ணாச்சி பதில் பேசவே மாட்டான். உடனே அதுக்கும் சேத்து என்ன ச்சொன்னாலும் மன்னு மாரில இருக்கான் வெறுவாக்கங்கெட்ட பய அப்டின்னு இன்னும் ஏச்சு கூடும்.

எங்க அண்ணாச்சி மட்டுமில்ல நாங்களும் நெறய ஏச்சு வாங்கிருக்கோம். குச்சிக்கம்பு வெளயாடும்போது பெரியாத்தா வீட்டுக்குள்ள நம்ம தம்பியாபிள்ள அடிச்சி விட்ருவான். உடனே பெரியாத்தா, "எல எந்த பேதில போவான் வீட்டுக்குள்ள கம்ப அடிச்சதுல, இந்த பக்கம் வா கைய ஒடிச்சு அடுப்புக்குள்ள வைக்கென்". இந்த சத்தத்த கேட்டதும் அடுத்த 10 நிமிசத்துக்கு அந்த இடத்தில ஒரு பய இருக்க மாட்டான். பழயபடி திரும்ப இதே கூத்து நடக்கும்.

ஒரு தடவ ரேசன் கடைக்கு போன இடத்துல நம்ம அண்ணாச்சி எப்பிடியோ ரூவாயத் தொலச்சிட்டான். தொலச்ச ரூவாய அண்ணாச்சி ரேசன் கடைல தேடு தேடுன்னு ஒரு மணி நேரமா தேடிட்டு மெதுவா வீட்டுக்கு வந்ததும் ஆரம்பிச்சது அருப்புக் கண்டம். "கூறுகெட்ட மூதி எப்பிடி ரூவாயத் தொலச்ச? பக்கிப்பிராண்டு மாரி எங்கனயாவது பரக்கப் பாத்துட்டு நின்னுருப்ப... கரியாப்போவான், உமியாப் போவான் உன்னயெல்லாம் சந்து சந்தா வகுரனும்". இதுக்கும் அண்ணாச்சி பதிலே சொல்லாம மன்னாந்த மாரி கம்பா நிப்பான்.

செந்தட்டின்னு நம்ம ஊரு பக்கம் ஒரு இலை உண்டு. அத மேல தேச்சா பயங்கரமா ஊரல் எடுக்கும், சுரீர்னு எறும்பு கடிச்ச மாரி வலிக்கும். வலி நிக்கதுக்கு பத்து நிமிசம் ஆகும். அப்படிப்பட்ட செந்தட்டிய என் தம்பியாபிள்ள மேல ஒரு தடவ ஒரு பெரிய பய தேச்சுட்டான். நம்ம தம்பியாபிள்ளயும் பெரியாத்த கிட்ட போய் ஓ ராமன்னு ஒப்பாரி வச்சான். அப்புறம் என்ன பெரியாத்தா பூடம் இல்லாமலே சாமி ஆட அரம்பிச்சாவ... "ஏல மாடு மாரி வளந்திருக்கியே, இப்பிடியா கூ கொழுப்படுத்து பச்ச பிள்ள(தம்பியாபிள்ளைக்கு வயசு அப்ப 14) மேல தேப்ப? இங்க வால உன் ---ல தேச்சு விடுதேன். கிறுக்குப் பய... படுக்காலிப் பயவில்ல.. இனிமே இந்த பக்கம் வா கண்ண நோண்டுதேன்" அதுக்கப்புறம் அந்தப் பய எங்க வீடு இருந்த திசை பக்கம் தல வச்சு கூட படுக்கல.

பயக்களத்தான்னு இல்ல பிள்ளேலும் நல்ல ஏச்சு வாங்கும் பெரியாத்தா கிட்ட. இப்படித்தான் ஒரு தடவ சும்ம இருந்த பக்கத்து வீட்டுப் பிள்ளய கூப்டு "ஏட்டி சரசு நான் குளிக்கப் போறேன். கல்லுல தோச கெடக்கு மாத்திப் போட்டுட்டு அடுத்தால இன்னொரு தோச விடுட்டி, நான் அதுக்குள்ள வந்துருதேன்" அப்படின்னு குளிக்கப் போனாவ. சரசு என்ன செஞ்சாலோ தெரில முத தோசய பிச்சும், அடுத்த தோசய கருக்கியும் எடுத்தா. குளிச்சிட்டு வந்து இதப் பாத்த பெரியாத்தா பத்ரகாளியா மாறி, "ஏட்டி களுத முண்ட தெரியெலேன்னா சொல்ல வேண்டியது தான மூதேவி மூதி, எல்லாத்தயும் பேத்து வச்சிருக்கா ஆடாங்கன்னி. உங்க அம்ம வளத்து வச்சிருக்கா பாரு லச்சன மயிரா" அப்டின்னு கத்த அப்பிரானியான பக்கத்து வீட்டு மாமா அடுத்த வாரமே வீட்டக் காலி பண்ணிட்டு தூரா தேசம் போயிட்டாரு பொண்டாட்டி பிள்ளயோட...

12 comments:

மாயவரத்தான்... said...

நல்லா சிரிப்பா எழுதறீங்க.

நெல்லைக் கிறுக்கன் said...

மாயவரத்தான் அண்ணாச்சி,
நன்றி உங்க வருகைக்கு. உங்கள மாரி பெரியவுக நம்ம பதிவப் பாத்ததுல எனக்கு ரொம்ப்ப சந்தோசம்.

Anonymous said...

எம்மாடி இதுக்குத்தேன் ஊர் பக்கம் இந்தக் கிழவிககிட்டயெல்லாம் வெச்சுக்கவே மாட்டேன்....எம்மாம் பெரிய ரவுடியா இருந்தாலும் மாட்டினான்...தொலைஞ்சானுவல்ல...

நெல்லைக் கிறுக்கன் said...

நீரு சொல்லுதது நூத்துக்கு நூறு உண்ம வே. ரொம்ப ஆபத்தான் ஆளுக நம்ம ஊரு கிழவிக

அனுசுயா said...

பாட்டிகளக்கண்டா ஏன் நம்ம மக்களுக்கு பிடிக்கறதில்லனு இப்பதான் தெரியுது.

நெல்லைக் கிறுக்கன் said...

ஆமாம்மோ ஊருல கெழவிகளக் கண்டா நம்ம பயக்க நெறய பேருக்கு பிடிக்காது. நம்ம சேக்காளி ஒருத்தன் இப்பிடித் தான், அவங்க வீட்டுக் கெழவி எப்ப கண்ணசரும் பாம்படத்தக் களத்தலாம்னு தினமும் திட்டம் போடுவான். ஆனா கெழவி பயங்கரமான ஆளு, தூங்குதப்போ பக்கத்துல ஒரு அருவாள வச்சிட்டு தான் தூங்கும். அதனாலேயே நம்ம பயலால கெழவி மண்டயப் போடுத வரை பாம்படத்த கழட்ட முடியல...

thirunelveli said...

hai samy super da
antha periathavuku thaliyuthu thana.... avanga appadi than passuvanga........

நெல்லைக் கிறுக்கன் said...

மக்கா nellaitamil,
இது தாழயுத்து பெரியாத்தா இல்ல வே, வள்ளியூரு பக்கத்துல உள்ள ஊரு ஆளு நம்ம பெரியாத்தா

Ponchandar said...

நம்மூரு தமிழ்-ல அசத்தீரேரே.....விமானப் படையில் பணி புரிந்த போது, " பஸ் நிக்கி, வயிறு பசிக்கி"...என்றெல்லாம் நமது தமிழில் கூறி உடனிருந்த நண்பர்கள் கேலி செய்தது நினைவுக்கு வருகிறது.....

ராஜ நடராஜன் said...

என்ன மொழி வளம் உங்களுக்கும் தமிழுக்கும்...

நெல்லைக் கிறுக்கன் said...

வாருமய்யா golden moon,
நெல்லைத் தமிழுக்கு ஈடு இணை கெடயாதய்யா... தமிழ் பொறந்த ஊரய்யா நம்ம ஊரு. அந்த அருமை மத்த ஊர்க்கார பயக்களுக்கு எங்கன தெரியும்?

Anonymous said...

கிறுக்கரே!

ஏச்சும், பேச்சுமா நல்லாத் தான் எழுதீருக்கீர் வோய்!