Thursday, August 17, 2006

ஆறு காதல்...(1)

ஆறு பதிவு போடச் சொல்லி என்ன அனுசயா ஒரு மாசத்துக்கு முன்னாடியே கூப்டாக. அன்னா இன்னான்னு இப்ப தான் நேரம் கெடச்சுது. நான் ஆறு பதிவுல சொல்லப் போறது நான் பார்த்த விசித்திரமான ஆறு காதலப் பத்தி. காதல் எந்த அளவுக்கு நம்ம பயக்கள பாடாப் படுத்தி பம்பரமா ஆட்டுதுங்கறதப் பத்தி சொல்லுதேன்.

முதல் காதல்: ரத்தின குமாரு எங்க கூடப் படிச்ச ஒரு சோவாரிப் பய. தலயில காப்படி எண்ணெய தேச்சு எப்பவும் ஒரு காட்டான் லுக்குல தான் அலயுவான். வீட்ல அவங்க அய்யா ரொம்ப கண்டிப்பு, அதனால அவன் வெளில வந்தா அவுத்து விட்ட கழுத மாரி எல்லா சேட்டயும் பண்ணுவான். அவன் பக்கத்து வீட்டுக்கு தீடீர்னு கங்கானு ஒரு அக்கா வந்துச்சு. எங்கள விட நாலு வயசு பெரிய பிள்ளய அக்கான்னு தான சொல்லனும். கங்காவோட அம்மாவும் ரத்தினத்தோட அம்மாவும் நல்ல பழக ஆரம்பிச்சாக, அதனால கங்காவும் ரத்தினத்தோட வீட்டுக்கு அடிக்கடி வந்து போக ஆரம்பிச்சா. கணக்கு பண்ணுறதுல ரத்தினம் பலே கில்லாடிங்கறதால கங்காவயும் எப்படியோ வழிக்குக் கொண்டு வந்துட்டான். ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருந்த கங்காவும் காட்டான் ரத்தினத்த என் ராஜ்கிரன் நீ தாமுலன்னு சொல்லி உருகி உருகி இலவு பண்ணினா. ஒரே குச்சி ஐச ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாப்புடதது, காட்டானுக்கு கூட்டாஞ்சோறு பொங்கி கொடுக்கதுன்னு காதல் வேக வேகமா வளந்துச்சு. அக்கா தம்பி ரேஞ்சுல இருந்ததால யாருக்கும் சந்தேகம் வரல. தினமும் அவன் லீலைகளையெல்லாம் எங்க கிட்ட வந்து சொல்லுவான். நாங்க எல்லாரும் அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரி குட பிடிப்பான்னு காட்டான தண்ணி தெளிச்சி விட்டுட்டோம். இதுகளோட கத ரத்தினத்தோட தம்பி சந்தானத்துக்கு மட்டும் தெரியும். ஒரு நாள் ரத்தினம் சவ்வு முட்டாய் வாங்க பைசா கொடுக்கலங்கதால கொதிச்சு போய் சந்தானம் இந்த தெய்வீகக் காதலப் பத்தி எல்லார் கிட்டயும் சொல்லிப் போட்டான். அவ்வளவு தான் உடனே கங்காவுக்கு ஒரு கோயான் கோபுவ பாத்து கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டாவ அவுக வீட்டுல. நம்ம காட்டான் எங்க கிட்ட வந்து எனக்கு எலி மருந்து வாங்கிக் கொடுங்கல நான் சாகனுமின்னு சொன்னான். உடனே அவன் புடதில நாலு போட்டு வீட்ல கொண்டு போய் விட்டோம். ரெண்டு மூனு நாளுல பய சரியாயிட்டான். அடுத்த வாரமே காலேசுல புதுசா வேலைக்கு சேந்த இட்டமொழி இசக்கியம்மாங்கிற லேப் அட்டண்டர லவ்வ ஆரம்பிச்சிட்டான்

ரெண்டாம் காதல்: செபஸ்தியான் ஆட்டோகிராப் சேரன் மாதிரி இதுவர ஏகப்பட்ட பிள்ளேல காதலிச்சிருக்கான். அவன் முதல்ல காதலிச்சது ரூபாங்கிற பிள்ளய. ரூபா ஆந்திராக்காரி, கண்ணாடி போட்டு குண்டா தெலுங்குப் பட கதாநாயகி மாதிரி நெடு நெடுன்னு இருப்பா. நம்ம ஆளோ அவ தோளுக்குத் தான் இருப்பான். ரெண்டு பேருக்கும் முன்ன பின்ன பழக்கம் கெடயாது. செபஸ்தியானோட சேக்காளி காசிராசா ஒருநா ரூபாவ அவனுக்கு அறிமுகப் படுத்தி வச்சான். அறிமுகப்படுத்தி ரெண்டு நிமிசத்துல ரெண்டு பேருக்கும் காதல் வந்துருச்சு. அப்புறம் ரெண்டு பேரும் தினமும் பேசிக்கிட ஆரம்பிச்சாவ. செபஸ்தியான் அப்போ பண்ணிரண்டாங் கிளாஸ் படிச்சான், ரூபா பத்தாப்பு படிச்சா. ரெண்டு பேரும் டியூசன் போறோமின்னு வீட்ல சொல்லிட்டு தெருத் தெருவா திரிய ஆரம்பிச்சுதுக. செபஸ்தியான் கொஞ்சம் தைரியம் வந்து ரூபாவ அவ பள்ளியூடத்திலயே போய் தினமும் பாத்தான். அங்க ஆரம்பிச்சுது விணை. அங்க உள்ள சரசா டீச்சர் இதுகள பாத்துட்டு போய் ரூபாவோட அய்யா குண்டு ராவ் கிட்ட சொல்ல உடனே குண்டு ராவும் அடுத்த வாரமே வீட்ட காலி பண்ணி ஒங்கோலுக்கு போய்ட்டாரு. ஆனா செபஸ்தியான் அதுக்கெல்லாம் அசரல. ரூபா இல்லாட்டி சோபான்னு அடுத்த பிள்ளையத் தேடிப் போயிட்டான். சமீபத்துல நெல்லைல அவன பாத்தப்ப, "மக்கா டவுனுல என் கூட வேல பாக்குத அழகுமணிய சின்சியரா இலவு பண்ணுதேன். வார வெள்ளி ரெண்டு பேரும் சாலைக்குமார சாமி கோயில்ல வச்சு தாலி கட்டிட்டு, அப்புறம் தெக்கு பஜார் அந்தோனியார் கோயில்ல மோதிரம் மாத்துதோம்" அப்டின்னான். பய திருந்திட்டானேன்னு சந்தோசப் பட்டேன். ஆனா போன வாரம் கெடச்ச தகவல் என்னான்னா, செபஸ்தியானும், அழகு மணியும் தாலி கட்டப் போற நேரத்துல காதலுக்கு மரியாத பாணில வீட்டப் பத்தி ரொம்ப நெனச்சுப் பாத்து பிரிஞ்சிட்டாங்களாம்.

மூனாங் காதல்: எங்க ஏரியாவுலயே ரொம்ப அழகான பிள்ள சிவகாமி. பல பேரு தூக்கத்த கெடுத்தவ. சிவாமி எங்களோட பக்கத்து பள்ளியூடத்தில தான் படிச்சா. பள்ளியூடத்துப் பயக்கள்ல இருந்து காலேசு படிக்கிற பெரிய அண்ணன்மாரு வரைக்கும் அவ மேல பைத்தியமா அலஞ்சானுவ. அந்த நேரம் பாத்து பழனியப்பன்னு ஒரு கோமாளிப் பய அவ பக்கத்து வீட்ல குடியேறினான். சோடாப்புட்டி கண்ணாடி, எண்ணெய் வழியுத நீள கிராப்பு, ஒலக்கால் சீலக்கால் பேண்ட்டு சட்டைனு பய அமர்க்களமா இருப்பான். அவனக் கூட சேத்தா நம்ம பெர்சனாலிட்டி குறஞ்சு போயிரும்னு பயக்க யாரும் அவன பக்கத்துல சேத்துக்கிடுததே இல்ல. பய வாயத் தெறந்தாலே எதாவது உளறி தான் வைப்பான். சிவாமி வீட்டுக்கு பக்கத்து வீடுங்கதால இன்று போய் நாளை வா பாக்யராஜ் மாரி அவளோட வீட்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஏதாவது ஒத்தாச பண்ணி கொஞ்ச கொஞ்சமா அவ வீட்டுக்குள்ள வர போக ஆரம்பிச்சான். நம்ம மைனர் பயக்களுக்கெல்லாம் பயங்கரமா காதுல புக வந்தது. இப்படியே தினமும் அவ வீட்டுக்கு போரதும் வாரதுமா ஒரு மர்மமாவே இருந்தான் பழனி. தீடிர்னு ஒரு நாள் எல்லார் வாயிலயும் பழத்த வச்சிட்டு சிவாமிய கூட்டிட்டு எங்கேயோ ஓடிப் போயிட்டான். பிறகு ஒரு ரெண்டு வாரம் கழிச்சு அவ கழுத்தில மஞ்சக்கயிற கட்டி கூட்டிட்டு வந்தான். எல்லாரும் அதிர்ச்சில உறஞ்சி போயிட்டோம். இப்ப பழனியப்பனுக்கும் சிவாமிக்கும் ஒரு குட்டி பழனியப்பன் இருக்கான். அப்படியே அப்பன உரிச்சு வச்ச மாதிரி இன்னொரு குட்டிக் கோயான். அவனுக்கு எங்கேயோ மச்சம்ல அப்டின்னு ஒரு வயித்தெரிச்சல் காரப் பய நொந்துகிட்டான்.

அடுத்த மூனு காதல பத்தி கூடிய சீக்கிரம் சொல்லுதேன்....

8 comments:

thirunelveli said...

சாமி நம்ம 12B சிவ காமி யா
ரொம்ப சூப்பர்

நெல்லைக் கிறுக்கன் said...

மக்கா திருநெல்வேலி,
என்ன வம்புல மாட்டி விட்ராத, சிவாமி அண்ணனோ இல்ல புருசன் காரனோ அப்புறம் என்னத் தேடி வீச்சரிவாளோட சிட்னிக்கு வந்துருவானுக. பரவாயில்லயே, 12B சிவகாமிய இன்னும் ஞாபகம் வச்சிருக்கியே.

Anonymous said...

எடே நீ சொல்லுத ரெண்டாவது ஆளு யாருன்னு எனக்கு வெளங்குது... நடத்துடே நடத்து...

Anonymous said...

ஆஹாங் இந்தி டீச்சர் வீட்டுப் பக்கத்து கதை போலல்லா இருக்கு அந்த கங்கா! யாரது 12B சிவகாமி? :)))) நேக்குத் தெரியுமோ?! :) செபஸ்தியான் சைக்கிள் யாரோட சைக்கிள் பின்னாலயோ பாத்தமாதிக்கீதே!!! :)

கதை எல்லாம் சூப்பருங்க - மிச்சம் மூணுக்கு வெயிட்டிங்!:)

அனுசுயா said...

அட ஆறு பதிவுல எல்லாரும் ஏதேதோ போட்டாங்க நீங்க சுவாரசியமா போட்டிருக்கீங்க. மீதிய சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க

நெல்லைக் கிறுக்கன் said...

அய்யா அனானிமஸ்,
ரெண்டாவது ஆளு யாருன்னு கண்டு புடிச்சிட்டீரா? அப்ப நீரு நம்ம கூட்டத்தில உள்ள ஒரு ஆளு தான்னு நெனக்கேன்

நெல்லைக் கிறுக்கன் said...

வணக்கம் மதுரா,
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. கூடிய சீக்கிரம் அடுத்த மூனு காதல்யும் சொல்லுதேன்

நெல்லைக் கிறுக்கன் said...

வாங்க அனுசுயா,
நீங்க கூப்டதாலதான்மோ நான் ஆறு பதிவப் பத்தியே யோசிச்சேன். சீக்கிரமா அடுத்த மூனு கோமாளிக் காதலப் பத்தி சொல்லிருதேன்..